📅 Thursday, 08 October 2026 IST | புரட்டாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health October 08, 2026 01:03 PM

34,000 அடி உயரத்தில் நடந்த மரணப் போராட்டம்... யார் இந்த ஸ்மித் மச்சார்?

34,000 அடி உயரத்தில் நடந்த மரணப் போராட்டம்... யார் இந்த ஸ்மித் மச்சார்?

34,000 அடி உயரத்தில் நடந்த மரணப் போராட்டம்... யார் இந்த ஸ்மித் மச்சார்?

தாக்குதலின்போது துணை விமானி தொழுகை செய்யப்போவதாகக் கூறி எழுந்து, சில நிமிடங்களில் காக்பிட்டுக்குள் இருக்கும் அவசரகாலக் கோடாரியைப் (Emergency Crash Axe) பயன்படுத்தியே கேப்டன் ஸ்மித் மச்சாரைக் கொடூரமாகத் தாக்கியிருப்பது விசாரணையில் அம்பலமாகியிருக்கிறது.

செப்டம்பர் 30, 2026. துபாய் சர்வதேச விமான நிலையம்.

அதிகாலை 3:05 மணி. ‘ஃப்ளை துபாய்' (flydubai) நிறுவனத்தின் FZ1073 விமானம், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கிப் புறப்பட்டது. அதில் 174 பயணிகள் இருந்தனர். முதன்மை விமானி கேப்டன் ஸ்மித் மச்சார் விமானத்தை இயக்கினார்.

அடுத்த இரண்டு மணி நேரம் விமானப் பயணம் சுமுகமாக அமைந்தது.

காலை 5:21 மணியளவில், 34,000 அடி உயரத்தில் சவுதி அரேபிய வான்பரப்பில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது, அந்த போயிங் 737 திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து கீழே சரியத் தொடங்கியது.

வழக்கமாக ஏற்படும் காற்றழுத்த மாறுபாட்டால் (Turbulence) இது நிகழ்கிறது என்று பயணிகள் நினைத்தனர். ஆனால், ஆபத்து வெளியிலிருந்து வரவில்லை; உள்ளிருந்தே உருவெடுத்திருந்தது.

அடுத்த 20-30 விநாடிகள்... விமானம் அதிவேகமாகக் கீழ்நோக்கிப் பாய்ந்தது. சற்றே நிலைகொள்வதுபோல நின்று, மீண்டும் நிலைகுலைந்து சரிந்தது. வெறும் அரை நிமிடத்துக்குள் 14,000 அடிகள் கீழே சரிந்து மரண பயத்தைக் காட்டியது.

கேபினுக்குள் பதற்றம் தொற்றிக் கொள்ள, அலறல் சத்தங்களுக்கு நடுவே சிலர் விமானி அறையை (Cockpit) நோக்கி ஓடினர். மூடியிருந்த அந்தக் கதவுக்குப் பின்னால் ஒரு கொடூரமான மரணப் போராட்டமே நடந்துகொண்டிருந்தது.

என்ன நடந்தது?

முதற்கட்டத் தகவலின்படி, விமானத்தின் துணை விமானியே, முதன்மை விமானி ஸ்மித் மச்சாரைக் கூர்மை யான ஆயுதத்தால் தாக்கியிருக்கிறார். கடுமையாகக் காயமடைந்த மச்சார், ரத்தம் வழிந்த நிலையில் காக்பிட் தரையில் சரிந்து கிடந்தார். அதேநேரம், கேப்டனைத் தாக்கிய அந்தத் துணை விமானி, விமானத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து இயக்கத் தொடங்கியதால் விமானம் ஆபத்தான முறையில் நிலை குலைந்தது.

இதைத் தடுக்க வேண்டுமெனில், வெளியே இருக்கும் ஊழியர்களும் (Cabin Crew), பயணிகளும் உடனடியாக விமானி அறைக்குள் நுழைய வேண்டும். ஆனால், நவீன விமானப் பாதுகாப்பு விதிகளின்படி காக்பிட் கதவை உள்ளிருந்து மட்டுமே திறக்கப்பட முடியும் என்பதால், அது பூட்டப்பட்டிருந்தது.

ரத்த வெள்ளத்தில் வலியில் துடித்துக் கொண்டிருந்தபோதும் கேப்டன் மச்சார் செய்த அந்த ஒரு செயல், 174 பேரின் தலைவிதியை மாற்றி எழுதியது.

உடல் தளர்ந்து நினைவு மங்கும் நிலையிலும், தன் மீதமிருந்த முழுச் சக்தியையும் திரட்டி, காக்பிட் கதவைத் திறப்பதற்கான ‘ரிலீஸ்’ பொத்தானை அழுத்தினார் மச்சார்.

கதவு திறந்தது!

முன்பகுதியில் இருந்த பயணிகளும், விழிப்படைந்த ஊழியர்களும் காக்பிட்டுக்குள் பாய்ந்து, தாக்குதல் நடத்திய துணை விமானியை மடக்கிப் பிடித்தனர். அதிர்ஷ்டவசமாக, அதே விமானத்தில் பயணிகளாக வந்திருந்த flydubai நிறுவனத்தின் மாற்று விமானிகள் (Reserve Crew) உடனடியாக விமானத்தின் கட்டுப் பாட்டைத் தங்கள் கைகளில் எடுத்தனர்.

ஆனால், மச்சாரின் மரணப் போராட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருந்தது.

விமானத்தில் பயணித்த இஸ்ரேலிய பல் மருத்துவர் ஷோட்டா முசாயேவ் விரைந்து வந்து உதவி செய்தார். அதிக ரத்தப்போக்கால் பாதிக்கப்பட்டிருந்த மச்சாருக்கு விமான ஊழியர்களும் மருத்துவரும் சேர்ந்து முதலுதவி அளித்து, அவரது நிலையை ஓரளவுக்குச் சீராக்கினர்.

ஒருபுறம் விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்குவதற்கான போராட்டம்; இன்னொருபுறம் அதன் கேப்டனின் உயிரைக் காப்பாற்றுவதற்கான போராட்டம்.

விமானத்திலிருந்து ‘7700’ என்ற பொது அவசரநிலைக் குறியீடு (Squawk Code) ஒலிபரப்பப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில், விமானத்தின் இயக்கத்தில் சட்டவிரோதத் தலையீடு (Unlawful Interference) ஏற்பட்டிருப்பதை உணர்த்தும் ‘7500’ என்ற ஆபத்துக் குறியீடும் ரேடாரில் பதிவானது.

டெல் அவிவ் நோக்கிய பயணம் கைவிடப்பட்டு, விமானம் சவுதி அரேபியாவின் தபூக் (Tabuk) விமான நிலையத்தை நோக்கித் திருப்பிவிடப்பட்டது. சிறிது நேரத்தில் விமானம் தபூக்கில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. 174 பயணிகளும் காயங்களின்றி உயிர்தப்பினர்.

கேப்டன் ஸ்மித் மச்சார் மும்பையைப் பூர்வீகமாகக் கொண்ட ஓர் இந்தியர். குடும்பத்தின் ஜவுளித் தொழிலைத் தொடர வேண்டும் என்பதற்காக ஜவுளிப் பொறியியல் (Textile Engineering) படித்தவர். மேலாண்மைப் படிப்பு (Management) படிக்கச் சென்ற இடத்தில், தனது 19-வது வயதில் எதேச்சையாகக் கலந்து கொண்ட ஒரு விமானத்துறை விழிப்புணர்வு கருத்தரங்குதான் இவரது வாழ்க்கையின் திசையை மாற்றியது. விமானி ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

விமானி ஆகப்போவதாகச் சொன்னதும் அவரது தாய் பயந்து ‘வேண்டாம்’ என்று சொன்னதாகவும், தந்தை அமைதியாக அந்த முடிவை ஏற்றுக்கொண்டதாகவும் மச்சார் முன்பு ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.

நியூசிலாந்தில் ‘தொழில்முறை விமானி’ பயிற்சியை முடித்த மச்சார், 2011-ல் ஸ்பைஸ்ஜெட் (SpiceJet) நிறுவனத்தில் இணைந்து 11 ஆண்டுகள் பணியாற்றினார். 2022-ல் flydubai நிறுவனத்தில் இணைந்த இவர், போயிங் 737 ரக விமானங்களை மட்டும் 9,750 மணி நேரத்துக்கும் அதிகமாக இயக்கிய அனுபவம் கொண்டவர்.

இத்தனை ஆயிரம் மணி நேர அனுபவம் இருந்தபோதிலும், தன் விமானப் பணி குறித்து வீட்டில் அதிகம் பேசாத, அமைதியான ஆளுமைதான் மச்சார்.

விதியின் அழகான முரண்!

ஒரு வருடத்துக்கு முன்பு அளிக்கப்பட்ட பேட்டி ஒன்றில் விமானப் பாதுகாப்பு குறித்தும், கேபின் க்ரூ (Cabin Crew) ஊழியர்களின் முக்கியத்துவம் குறித்தும் மச்சார் மிக ஆழமாகப் பேசியிருந்தார்.

“விமானத்தில் ஏதேனும் ஆபத்து என்றால் யார் உங்கள் உயிரைக் காப்பாற்றுவார்கள் தெரியுமா... கேபின் க்ரூதான்! அவர்கள் வெறும் உணவுப்பொருள் வழங்குபவர்கள் மட்டும் அல்ல. அவசரகால நடைமுறைகளிலும் முதலுதவியிலும் மிகச்சிறந்த பயிற்சி பெற்றவர்கள்’’ என்று கூறியிருந்தார்.

அன்று அவர் சொன்ன அதே வார்த்தைகள், ஒரு வருடம் கழித்து அவரது சொந்த வாழ்க்கையிலேயே நிஜமாகின. உயிருக்குப் போராடிய கேப்டன் மச்சார் கதவைத் திறக்க, உள்ளே பாய்ந்த கேபின் க்ரூ ஊழியர்கள் அவரை மீட்டு, முதலுதவி அளித்து அவரது உயிரைக் காப்பாற்றினர்.

மேலும், விமானப் பாதுகாப்பு குறித்து அவர் முந்தைய பேட்டி ஒன்றில் கூறிய வார்த்தைகள் தற்போது உலக அளவில் வைரலாகிவிட்டன. “என்ன அசம்பாவிதம் நடந்தாலும், பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து பாதுகாப்பாகத் தரையிறங்க வேண்டும். அது ஒன்றுதான் எனக்கு முக்கியம்.”

அந்த வார்த்தைகளைத் தன் உயிரைப் பணயம்வைத்து நிரூபித்துக் காட்டியிருக்கிறார் மச்சார்.

விமானி அறைக்குள் நடந்த கொடூரத் தாக்குதலில் கேப்டன் ஸ்மித் மச்சாரின் தலையிலும், கைகளிலும் கடுமையான வெட்டுக் காயங்கள் ஏற்பட்டு, அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டது. சவுதி அரேபியாவின் தபூக் நகரிலுள்ள மருத்துவமனையில் அவருக்கு முதற்கட்ட அவசர அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியிலுள்ள அதிநவீன மருத்துவமனைக்கு அவர் விமானம் மூலம் மாற்றப்பட்டார்.

அபுதாபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஸ்மித் மச்சாரைச் சந்தித்த அமீரகத்துக்கான இந்தியத் தூதர் தீபக் மிட்டல், அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், அவர் நலமுடன் உரையாடியதாகவும் தெரிவித்தார்.

கேப்டன் மச்சார், அபுதாபி மருத்துவமனை படுக்கையிலிருந்தபடி பிரதமர் நரேந்திர மோடியிடம் வீடியோ காலில் பேசினார். அப்போது, காக்பிட் கதவைத் திறந்த அந்தத் ‘திக்திக்’ நிமிடங்களை உணர்ச்சிப் பெருக்கோடு விவரித்தார்:

“விமானம் அதிவேகமாகக் கீழே பாய்ந்துகொண்டிருப்பது எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. நான் தாக்கப்பட்டு, காயங்களோடு தரையில் சரிந்து கிடந்தேன். அப்போது எனக்குள் ஒரே ஓர் எண்ணம்தான் ஓடியது... ‘கதவு மிக அருகில்தான் உள்ளது, அதை எப்படியாவது திறந்துவிட வேண்டும். என் மீதமிருந்த முழுச் சக்தியையும் திரட்டி, கதவைத் திறந்தேன்; அடுத்த நொடியே வெளியே இருந்தவர்கள் காக்பிட்டுக்குள் பாய்ந்து ஓடிவந்தார்கள்!”

பிரதமர் நரேந்திர மோடியும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் மச்சாரின் துணிச்சலைப் பாராட்டியிருக்கின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்த விசாரணை தீவிரமடைந்துவரும் நிலையில், ‘ஃபிளை துபாய்’ FZ1073 விமானத்தைக் கடத்த முயன்றது ஒரு `திட்டமிட்ட தீவிரவாதச் செயல்’ (Act of Terrorism) என ஐக்கிய அரபு அமீரகம் (UAE) அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

இது குறித்து ஐக்கிய அரபு அமீரக அதிபரின் ஆலோசகர் அன்வர் கார்கேஷ் வெளியிட்ட செய்தி அறிக்கையில், “இந்திய விமானி ஸ்மித் மச்சார் 174 பயணிகளின் உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறார். மிகப்பெரிய தீவிரவாதப் பேரழிவைத் தடுத்து நிறுத்தியிருக்கும் அவர், வீரத்தின் மறுபெயராகத் திகழ்கிறார்” எனப் பாராட்டியிருக்கிறார்.

தற்போது அமீரக அரசின் சிறப்புப் புலனாய்வுக்குழு, கைதுசெய்யப்பட்டிருக்கும் அந்தத் துணை விமானியிடம் தீவிர விசாரணை நடத்திவருகிறது.

அந்த விசாரணை அதன் போக்கில் தொடரட்டும். ஆனால், கடுமையான காயங்களுடன், உயிர் பிரிந்துவிடும் அபாயக் கட்டத்திலும் 174 மனித உயிர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான கதவைத் திறந்துவைத்திருக்கிறார் கேப்டன் ஸ்மித் மச்சார். ஆபத்து எந்த வடிவில் வந்தாலும், ஒரு மனிதனின் சாதுர்யமும் துணிச்சலும் நூற்றுக்கணக்கான குடும்பங்களைக் காப்பாற்றும் என்பதற்குச் சாட்சியாக நின்ற இந்த இந்திய விமானியை உலகம் ஒருபோதும் மறக்காது!