📅 Friday, 14 August 2026 IST | ஆடி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 14, 2026 11:03 AM

"39 வயதில் மெஸ்ஸியால் உலகக்கோப்பை ஆட முடியுது.. விராட்

"39 வயதில் மெஸ்ஸியால் உலகக்கோப்பை ஆட முடியுது.. விராட்

"39 வயதில் மெஸ்ஸியால் உலகக்கோப்பை ஆட முடியுது.. விராட் - ரோஹித்தால் முடியாதா?": ஹர்பஜன் சிங் அதிரடி

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரின் எதிர்காலம் குறித்து பல்வேறு விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், அவர்கள் இருவரும் 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் நிச்சயமாக விளையாட வேண்டும் என்று முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறி இருக்கிறார். இது குறித்துப் பேசிய ஹர்பஜன் சிங், கால்பந்து உலகின் மாபெரும் ஜாம்பவானான லியோனல் மெஸ்ஸியை உதாரணமாகக் காட்டினார்.

"லியோனல் மெஸ்ஸி தனது 39 வயதில் ஃபிபா உலகக் கோப்பை தொடரில் விளையாடி அர்ஜென்டினாவுக்கு உலகக் கோப்பையை வென்று கொடுக்க முடியும் போது, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவால் ஏன் 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாட முடியாது? ஒரு வீரரின் திறமையை அவரது வயதை வைத்து மதிப்பிடக் கூடாது. அவரது உடற்தகுதி மற்றும் ஆட்டத்திறனை வைத்தே முடிவு செய்ய வேண்டும்" என்று ஹர்பஜன் கூறினார். (மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி இந்த முறை கோப்பை வெல்லவில்லை. இறுதிப் போட்டி வரை மட்டுமே சென்றது. எனினும், ஹர்பஜன் சிங் மெஸ்ஸி கோப்பை வென்று கொடுத்ததாக கூறினார்.)

மேலும், 37 வயதான விராட் கோலியின் உடற்தகுதியை பற்றி பேசிய ஹர்பஜன் சிங்,. மைதானத்தில் ஓடுவது, டைவ் அடிப்பது போன்ற விஷயங்களில் 20 வயது இளைஞர்களை விட கோலி அதிக சுறுசுறுப்புடன் செயல்படுகிறார் என்று கூறினார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு கோலி இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்ற போது, வீரர்கள் மத்தியில் கொண்டு கொண்டு வந்த மாற்றங்களையும் ஹர்பஜன் நினைவு கூர்ந்தார். "கோலி கேப்டனாவதற்கு முன்பு, டெஸ்ட் போட்டியின் 5-வது நாளில் 400 ரன்கள் என்ற இலக்கை விரட்டிப் பிடிக்க முடியும் என்று நாங்கள் நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஆனால், கோலி அணிக்குள் வெற்றி பெறும் மனநிலையைக் கொண்டு வந்தார். அவர் உருவாக்கிய உடற்தகுதி கலாச்சாரம் இந்திய கிரிக்கெட்டின் முகத்தையே மாற்றியது" என்று ஹர்பஜன் கூறினார்.

"ரோஹித் சர்மாவின் ஆக்ரோஷமான பேட்டிங் மற்றும் கேப்டன்சி, கோலியின் நங்கூரம் போன்ற ஆட்டம் ஆகியவை ஐசிசி கோப்பைகளை வெல்ல இந்திய அணிக்கு மிகவும் அவசியமானவை. அவர்கள் விளையாட விரும்பினால், அவர்களை யாராலும் தடுக்க முடியாது" என்று ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.