4 மாவட்டங்களில் நாளை கனமழை
சென்னை: 'செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட நான்கு மாவட்டங்களில், நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தமிழகத்தில் சில நாட்களாக, பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை, 8:30 மணியுடன் நிறைவு பெற்ற, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, நாகப்பட்டினத்தில், 12 செ.மீ., மழை பெய்துள்ளது. தற்போது, தமிழக கடலோர பகுதிகளில், கீழ்மட்ட வளிமண்டலத்தில், ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில், இன்று இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில், நாளை ஓரிரு இடங்களில், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருச்சி, புதுக்கோட்டை, சேலம், நாமக்கல், பெரம்பலுார், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலுாரில் பலத்த காற்றுடன், லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
வரும், 18ம் தேதி, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களிலும், 19ம் தேதி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், நீலகிரி மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.