ஐகோர்ட்டில் வந்தே மாதரம் பாடலுடன் சுதந்திர தின விழா: தேசியக்கொடி ஏற்றினார் தலைமை நீதிபதி
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் சுதந்திர தின விழா, தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் வந்தே மாதரம் பாடலுடன் தொடங்கியது. தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, தேசியக்கொடி ஏற்றினார்.
'அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும்' என, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சுற்றறிக்கை நேற்று நடந்த சுதந்திர தின விழாவில், 'தேசியக் கொடியை ஏற்றுவதற்கு முன், 'வந்தே மாதரம்' பாடல் பாட வேண்டும்; தேசியக்கொடி ஏற்றிய பின், தேசிய கீதம் பாட வேண்டும்' என, உயர் நீதிமன்ற தலைமை அமர்வு, மதுரை அமர்வு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்கள் மற்றும் நீதித்துறை பயிற்சி மையங்களுக்கு, உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் தீப்தி அறிவுநிதி சுற்றறிக்கை அனுப்பி இருந்தார்.
மத்திய அரசின் அறிவுரைப்படி, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் புதிய சுற்றறிக்கையை, உயர் நீதிமன்ற பதிவாளர் தீப்தி அறிவுநிதி வெளியிட்டார்.
அதில், 'சுதந்திர தின கொண்டாட்டத்தில், மாநில பாடலான தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்; அதன்பின், வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டு தேசியக்கொடி ஏற்றப்படும்; தேசியக்கொடி ஏற்றிய பின், தேசிய கீதம் பாடப்படும்' என, குறிப்பிடப்பட்டு இருந்தது.
சாகசங்கள் அதன்படி காலை 10:00 மணிக்கு, மாநில பாடலான தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய சுதந்திர தின நிகழ்ச்சிகளில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, தேசியக்கொடி ஏற்றினார்.
உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு வழங்கும் சி.ஐ.எஸ்.எப்., எனும் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டார்.
விழாவில், மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள், சாகசங்களை நிகழ்த்திக் காட்டினர்.
விழாவில், உயர் நீதிமன்றத்தில் சிறப்பாக பணி புரிந்த ஊழியர்கள், போலீஸ் அதிகாரிகள், போலீசார், சி.ஐ.எஸ்.எப்., வீரர்கள் ஆகியோருக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
பங்கேற்பு இந்த நிகழ்ச்சியில், உயர் நீதிமன்ற நீதிபதிகள், முன்னாள் நீதிபதிகள், தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், தமிழக டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால், சென்னை மாநகர காவல் துறை ஆணையர் ஏ.அமல்ராஜ், அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன், மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.