📅 Monday, 05 October 2026 IST | புரட்டாசி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business October 05, 2026 01:00 PM

ஆசியாவுக்கான கச்சா எண்ணெய் விலையைக் குறைத்த சவூதி அரேபியா

ஆசியாவுக்கான கச்சா எண்ணெய் விலையைக் குறைத்த சவூதி அரேபியா

ரியாத்: சவூதி அரேபியா, எதிர்பாராதவிதமாக ஆசியாவுக்கான நவம்பர் மாத கச்சா எண்ணெய் விலையை குறைத்துள்ளது.

திங்கட்கிழமை (அக்டோபர் 5) வெளியிட்ட விலைப்பட்டியல் அறிக்கையிலிருந்து இது தெரிய வருகிறது.

அதேவேளையில், வடமேற்கு ஐரோப்பா, மத்திய தரைக்கடல் வட்டாரங்களுக்கான விலையை அது உயர்த்தியுள்ளது.

மத்திய கிழக்கின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடான சவூதி அரேபியா, ஆசியாவிற்கான நவம்பர் மாத ‘அராப் லைட்’ கச்சா எண்ணெயின் அதிகாரபூர்வ விற்பனை விலையை ஓமான், துபாய் சராசரி விலையைவிட பீப்பாய்க்கு ஐந்து அமெரிக்க டாலர் குறைவாக நிர்ணயித்துள்ளது. இது முந்தைய மாதத்தைவிட மூன்று அமெரிக்க டாலர் (S$3.85) குறைவாகும்.

இது, 2020 ஜூனுக்குப் பிறகு நவம்பர் மாதம் வழங்கப்பட்டுள்ள மிக அதிக அளவிலான தள்ளுபடியாகும் என ராய்ட்டர்ஸ் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய கிழக்கு வட்டார அளவுகோல்களில் காணப்பட்ட உயர்வுக்கு ஏற்ப, ராய்ட்டர்ஸ் நடத்திய ஆய்வில் நவம்பர் மாதத்தில் ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 3 அமெரிக்க டாலர் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் கச்சா எண்ணெய் நிறுவனமான சவூதி அராம்கோ, ஆசியாவுக்கு விற்கப்படும் ‘அராப் மீடியம்’, ‘அராப் ஹெவி’ ஆகிய ரகங்களுக்கான நவம்பர் விலைகளில் பீப்பாய்க்கு 5 அமெரிக்க டாலர் வரை கூடுதல் குறைப்பை செய்துள்ளது.

வட்டார மோதல்களால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு நிலையில் தனது சந்தையைத் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியாக ஓமானில் இருந்து ஏற்றப்படும் எண்ணெய்க்குத் தள்ளுபடிகளை வழங்க அராம்கோ பரிசீலித்து வருவதாக இது குறித்து தகவல் அறிந்த வட்டாரங்கள் கடந்த வாரம் தெரிவித்தன.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

ஆனால் சவூதி அராம்கோ செங்கடல் துறைமுகமான யான்பூவிலிருந்து ஏற்றுமதியை மீண்டும் தொடங்கியதைத் தொடர்ந்து, வடமேற்கு ஐரோப்பாவுக்கான அனைத்து ரகங்களின் நவம்பர் மாத விற்பனை விலையை பீப்பாய்க்கு 3 அமெரிக்க டாலர் உயர்த்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அராம்கோ விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

சவூதி அரேபியா, ஓபெக்+ அமைப்பின் பிற உறுப்பினர்கள் அக்டோபர் 4ஆம் தேதியன்று நவம்பர் மாதத்திற்கான எண்ணெய் உற்பத்தி இலக்குகளை மாறாமல் வைத்திருக்க ஒப்புக்கொண்டனர். 2027 ஆம் ஆண்டுவரை மேலும் உற்பத்தி கொள்கையில் மாற்றங்கள் எதுவும் இருக்காது என்ற எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இந்நடவடிக்கை அமைந்துள்ளது.