ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட்டும் சரிவடைந்து வருகிறதா?
ஆஸ்திரேலிய அணி வியாழக்கிழமை டார்வின் நகரில் வங்கதேசத்தை எதிர்கொள்வதன் மூலம், அடுத்த 12 மாதங்களில் 20 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரைத் தொடங்குகிறது.
இதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்கா, இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கான சுற்றுப்பயணங்கள், நியூசிலாந்துக்கு எதிரான சொந்த மண்ணிலான தொடர் மற்றும் 150-வது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையிலான ஒரு சிறப்பு டெஸ்ட் போட்டி ஆகியவை காத்திருக்கின்றன.
தற்போது புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதால், ‘ஆஷஸ்’ (Ashes) தொடருக்கு முன்னதாகப் போதுமான வெற்றிகளைப் பெற்றால், அட்டவணையில் 21-வது டெஸ்ட் போட்டியும் இணையக்கூடும்.
அத்துடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக ‘உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்’ இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பும் அவர்களுக்குக் கிடைக்கலாம்.
இன்றைய கிரிக்கெட் உலகில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய அணியாகத் திகழ்வது ஆஸ்திரேலியாதான் அதில் சந்தேகமில்லை.
ஆனால் ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட்டும் கொஞ்சம் கொஞ்சம் சரிவைக் கண்டு வருகிறது என்பது அங்கு முன்னாள் வீரர்களிடையே கவலைகளை அதிகரித்துள்ளது.
காரணம், உள்நாட்டுக் கிரிக்கெட் தொடரான ஷெஃபீல்ட் ஷீல்ட் உலக அரங்கில் சில பல டெஸ்ட் தொடர்களை விடவும் கடினமான கிரிக்கெட் தொடராகும். அதில் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆடிய வீரர்கள் வைத்திருந்த சராசரியை இப்போது ஆஸ்திரேலியாவுக்கு ஆடும் வீரர்களின் சராசரியுடன் ஒப்பிட்டால் ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட்டும் சரிவைச் சந்திப்பதை நாம் காண முடியும்.
மற்ற பெரிய அணிகளான இந்தியா, இங்கிலாந்தை ஒப்பிடும்போது ஆஸ்திரேலியா சொந்த நாட்டில் அவ்வளவாக மண்ணைக் கவ்வுவதில்லை. இந்திய அணியும் சொந்த மண்ணில் தாதாவாக இருந்தது போக இப்போது கடும் உதைகளை வாங்கி வருவதைப் பார்க்கிறோம்.
2023-க்குப் பிறகு மார்னஸ் லபுஷேன் எந்தவொரு டெஸ்ட் போட்டியிலும் சதம் அடிக்கவில்லை; 2025-ல் அணியிலிருந்து நீக்கப்பட்டு மீண்டும் சேர்க்கப்பட்ட பிறகு, அவர் விளையாடிய கடைசி 21 டெஸ்ட் போட்டிகளில் அவரது சராசரி வெறும் 25.75 ஆக மட்டுமே உள்ளது. கேமரூன் கிரீன் 37 டெஸ்ட் போட்டிகளில் இரண்டு சதங்களுடன் 32.75 சராசரியைக் கொண்டுள்ளார்.
அத்துடன், சமீபத்தில் நடைபெற்ற கடினமான ஆஷஸ் தொடரில் எட்டு இன்னிங்ஸ்களில் எதிலுமே அவரால் 45 ரன்களைக் கடக்க முடியவில்லை. அதேவேளையில், ஜேக் வெதரால்ட் தனது அறிமுகத் தொடரில் ஒரே ஒரு அரை சதம் மட்டுமே அடித்ததுடன், 22.33 சராசரியையே வைத்துள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் 2005 - 2010 காலக்கட்டத்துடன் 2021 - 26 காலக்கட்டத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டும் சரிவடைந்து வருவது கண்கூடாகத் தெரியும்.
ஆஸ்திரேலிய உள்நாட்டு தொடரான ஷெஃபீல்ட் ஷீல்ட் தொடரில் 2005 - 2010 காலக்கட்டங்களில் குறைந்தது 500 ரன்கள் எடுத்த வகையில் ஒப்பிட்டுப் பார்த்தால் கிரிக் இன்போ புள்ளி விவரங்களின்படி மைக்கேல் கிளார்க் அந்தக் காலக்கட்டத்தில் ஷெஃபீல்ட் ஷீல்டில் 103.16 என்ற சராசரியை வைத்திருந்தார்.
சைமன் கேட்டிச் 75, லீ மேன் 64, காலஞ்சென்ற பில் ஹியூஸ் 63, கிறிஸ் ராஜர்ஸ் 56, பிராட் ஹாட்ஜ் 55, ஸ்டீவ் ஸ்மித் 53, பிராட் ஹாடின் 52, மேத்யூ ஹெய்டன் 53, உஸ்மான் கவாஜா 53.
இந்த சராசரியை இப்போது ஆஸ்திரேலியாவில் ஆடும் வீரர்கள் சிலர் உட்பட ஷெஃபீல்ட் ஷீல்ட் சராசரியைப் பார்த்தால் ஒருவர் கூட ஆஸ்திரேலிய உள்நாட்டு கிரிக்கெட்டில் தற்போது 50 என்ற சராசரிப் பக்கமே வரவில்லை என்பதுதான் நிதர்சனம்.
2021 - 26 காலக்கட்டங்களில் அதிக ஷெஃபீல்ட் ஷீல்ட் சராசரி வைத்திருப்பவர் கேமரூன் கிரீன் - இவரே 48.63 தான். 50 இல்லை.
இவருக்கு அடுத்தடுத்து அலெக்ஸ் கேரி, பியூ வெப்ஸ்டர், கூப்பர் கனோலி, உஸ்மான் கவாஜா (இவர் ஓய்வு), ஜாஷ் இங்கிலிஸ், பீட்டர் ஹாண்ட்ஸ்கம்ப், கேமரூன் பேங்க்ராப்ட், ஜேக் வெதரால்ட், இவர் தற்போதைய ஆஸ்திரேலிய தொடக்க வீரர் இவர் வைத்திருக்கும் உள்நாட்டு கிரிக்கெட் சராசரியே வெறும் 40 தான். லபுஷேன் 40 என்று சராசரி வைத்துள்ளனர்.
2005 - 2010 காலக்கட்டத்தை ஒப்பிடும்போது ஒரு வீரர் கூட உள்நாட்டுக் கிரிக்கெட்டில் சராசரியில் 50 பக்கம் வரவில்லை.
இத்தனைக்கும் 2001 - 2004 காலக்கட்டத்திலிருந்து 2005 - 2010 காலக்கட்டத்தில் மூத்த வீரர்கள் பலர் ஓய்வு பெற்று புதுமுகங்கள் உள் நுழைந்த காலக்கட்டம், அதிலேயே உள்நாட்டு கிரிக்கெட்டில் சராசரி 50 வைத்திருந்த வீரர்கள்தான் வர முடிந்தது, ஆனால் இப்போது 48 பெரிய சராசரியாக உள்ளது, ஆனால் அதை வைத்திருக்கும் கேமரூன் கிரீன் டெஸ்ட் போட்டிகளில் சொதப்பி வருகிறார்.
ஆகவே, இந்தக் கோணத்தில் பார்த்தால் ஒட்டுமொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட்டே சரிவடைந்து வருகிறது. அந்த ஒட்டுமொத்த போக்கில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் சரிவடைவதும் விதிவிலக்கல்ல என்று நமக்குத் தெரிய வருகிறது.