📅 Thursday, 20 August 2026 IST | ஆவணி 4, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 19, 2026 08:03 PM

ஐசிசி டெஸ்ட் தரவரிசை.. வரலாற்று வெற்றி பெற்ற வங்கதேசம் கிடுகிடு உயர்வு.. ஆஸ்திரேலிய வீரர்கள் சரிவு

ஐசிசி டெஸ்ட் தரவரிசை.. வரலாற்று வெற்றி பெற்ற வங்கதேசம் கிடுகிடு உயர்வு.. ஆஸ்திரேலிய வீரர்கள் சரிவு

ஐசிசி டெஸ்ட் தரவரிசை.. வரலாற்று வெற்றி பெற்ற வங்கதேசம் கிடுகிடு உயர்வு.. ஆஸ்திரேலிய வீரர்கள் சரிவு

துபாய்: ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஹாரி புரூக் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, அவர் மூன்று இடங்கள் சரிவைச் சந்தித்தார். இதன் காரணமாக புரூக் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

டார்வினில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் இரண்டு இன்னிங்ஸிலும் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கினார். ஆனால், அவரால் முறையே 22 மற்றும் 17 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்த மோசமான செயல்பாட்டினால், சொந்த மண்ணில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவியது.

டிராவிஸ் ஹெட் தற்போது 819 தரவரிசைப் புள்ளிகளுடன் டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் நான்காவது இடத்திற்குச் சரிந்துள்ளார். அதே வேளையில், முதல் மூன்று இடங்களை முறையே ஹாரி புரூக், ஜோ ரூட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் பிடித்துள்ளனர். புதன்கிழமை வெளியிடப்பட்ட ஐசிசி தரவரிசையில் இவர்கள் மூவரும் தலா ஒரு இடம் முன்னேறியுள்ளனர்.

ஹெட்டைத் தவிர, ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் அலெக்ஸ் கேரியும் டார்வின் டெஸ்டில் சொதப்பியதால், அவர் 15-வது இடத்திற்குச் சரிந்துள்ளார். இருப்பினும், புதிய ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் வங்கதேச பேட்ஸ்மேன்கள் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளனர்.

முதல் இன்னிங்ஸில் 4-வது வீரராக களம் இறங்கி 84 ரன்கள் குவித்த வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ, ஒன்பது இடங்கள் முன்னேறி உலக அளவில் 20-வது இடத்தை எட்டியுள்ளார். முதல் இன்னிங்ஸில் 49 ரன்கள் எடுத்த மோமினுல் ஹக் ஐந்து இடங்கள் முன்னேறி 31-வது இடத்தையும், ஆல்-ரவுண்டர் மெஹிதி ஹசன் மிராஸ் ஐந்து இடங்கள் முன்னேறி 59-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

அனைவரைக் காட்டிலும் வங்கதேச அணியின் இடதுகை ஆட்டக்காரர் தன்சித் ஹசன் தமீம் மாபெரும் முன்னேற்றத்தைக் கண்டுள்ளார். டார்வின் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் சதம் விளாசி, வங்கதேச அணி 228 ரன்கள் என்ற இமாலய முன்னிலையைப் பெற உதவினார். இதன் விளைவாக, அவர் தரவரிசையில் 84 இடங்கள் பாய்ந்து, உலக அளவில் 88-வது இடத்தை எட்டியுள்ளார். தன்சித் ஹசன் தற்போது தனது டெஸ்ட் கேரியரின் சிறந்த தரவரிசைப் புள்ளிகளான 358 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் முன்னேற்றம் கண்ட ஒரே ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீன் மட்டுமே ஆவார். இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்ததை அடுத்து, கிரீன் ஐந்து இடங்கள் முன்னேறி 30-வது இடத்தை பிடித்துள்ளார்.

டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில், ஆஸ்திரேலிய அணியின் பேட் கம்மின்ஸ் நான்காவது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்குச் சரிந்துள்ளார். அதேபோல நாதன் லியான் இரண்டு இடங்கள் சரிந்து 12-வது இடத்தைப் பிடித்துள்ளார். மறுபுறம், வங்கதேசத்தின் ஆல்-ரவுண்டர் மெஹிதி ஹசன் மிராஸ் மூன்று இடங்கள் முன்னேறி 24-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் மஹ்மூத் 26 இடங்கள் முன்னேறி 38-வது இடத்திற்கு உயர்ந்துள்ளார். ஹசன் மஹ்மூத் டார்வின் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார். இவர் தற்போது தனது கேரியரின் சிறந்த தரவரிசைப் புள்ளிகளான 503 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.