இதை நான் சொல்ல வெட்கப்படவில்லை.. எங்கள் அணியில் ஈகோ இல்லை.. ராகுல் ஓபன் டாக்
இதை நான் சொல்ல வெட்கப்படவில்லை.. எங்கள் அணியில் ஈகோ இல்லை.. ராகுல் ஓபன் டாக்
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் டிரஸ்ஸிங் ரூம் கலாச்சாரம் மற்றும் வீரர்களுக்கு இடையே நிலவும் இணக்கமான சூழல் குறித்து நட்சத்திர வீரர் கேஎல்ராகுல் மனம் திறந்து பேசியுள்ளார். அணியில் சீனியர், ஜூனியர் என்ற பாகுபாடு இன்றி, அனைவரும் ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்ளும் ஆரோக்கியமான சூழல் நிலவுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
காலேவில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டிக்குப் பிறகு பேசிய ராகுல், அணியின் தற்போதைய கட்டமைப்பு மற்றும் வீரர்களுக்கு இடையேயான ஆரோக்கியமான உறவுமுறை குறித்துப் பகிர்ந்துகொண்டார்.
இது குறித்து பேசிய ராகுல், "விளையாட்டுப் போட்டிகளில் ஒரு வீரர் மற்றொருவருக்கு உதவுவது ஒவ்வொருவரின் கடமையாகும். உங்களுக்கு அதிக அனுபவம் இருக்கலாம் அல்லது 20 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடிய இளம் வீரராக இருக்கலாம், ஆனால் சக வீரர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவது மிக முக்கியம்" என்று அவர் கூறினார்.
"நான் வெறும் 20 அல்லது 30 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்த காலத்திலேயே, 60 முதல் 70 போட்டிகளில் விளையாடிய அனுபவமிக்க மூத்த வீரர்கள் என்னிடம் வந்து ஆலோசனைகளைக் கேட்கத் தயங்கியதில்லை. அவர்களிடம் எந்த ஈகோவும் இருந்ததில்லை. இதனால் இந்திய அணியின் டிரஸ்ஸிங் ரூம் எப்போதும் உரையாடல்களுக்கும் புதிய கற்றலுக்கும் திறந்த மனதுடன் வழிவகை செய்துள்ளது" என்றார்.
தற்போதும் அதே அணுகுமுறை தொடர்வதாகக் கூறிய ராகுல், தற்போதைய இளம் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலிடம் ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்கள் விளையாடுவது குறித்து விவாதிப்பதாகக் குறிப்பிட்டார்.
"அவர்களின் சிந்தனை முறை என்னுடையதிலிருந்து மாறுபட்டிருக்கலாம். 150 கி.மீ வேகத்தில் வீசப்படும் பந்துகளை எதிர்கொள்வது, ஸ்விங் மற்றும் சீம் பந்துவீச்சைக் கையாள்வது என்பது குறித்த ஆலோசனைகள் எங்களுக்குள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும். இதன் மூலம் நாம் பல புதிய நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள முடியும்" என்று ராகுல் விவரித்துள்ளார்.