📅 Thursday, 10 September 2026 IST | ஆவணி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 10, 2026 09:34 PM

அமைச்சர் சம்பளக் கட்டமைப்பு நீக்குப்போக்கானது: சான் சுன் சிங்

அமைச்சர் சம்பளக் கட்டமைப்பு நீக்குப்போக்கானது: சான் சுன் சிங்

சிங்கப்பூரின் அரசியல் ஊதியக் கட்டமைப்பானது திறமையான, பலதரப்பட்ட தலைவர்களைக்கொண்ட அணியை உருவாக்குவதற்கான நீக்குப்போக்கை வழங்குகிறது என்று பொதுச் சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் சான் சுன் சிங் வியாழக்கிழமை (செப்டம்பர் 10) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அமைச்சர்கள் சம்பள உயர்வு குறித்த விவாதத்தில் பதிலளித்துப் பேசிய அவர், அமைச்சர்களின் ஊதியத்தைத் தனியார் துறையில் முதல் நிலையிலிருக்கும் 1,000 பேரின் வருமானத்துடன் ஒப்பிடுவதற்குப் பதிலாக, சமமான திறனும் பொறுப்பும் கொண்ட பதவிகளுடன் ஒப்பிடும் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் கென்னத் கோவின் யோசனையை அரசாங்கம் பரிசீலிக்கும் என்றார்.

அக்டோபர் 15 முதல் நடைமுறைக்கு வரும் $1.8 மில்லியன் அரசாங்கப் பரிந்துரைச் சம்பளம் அனைவருக்கும் முழுமையாக வழங்கப்படாது. தகுதி, அனுபவத்திற்கேற்ப ஊதிய வரம்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்று அவர் தெளிவுபடுத்தினார்.

தேசிய போனசைக் கணக்கிடுவதற்கான வருமான வளர்ச்சி, வேலைவாய்ப்பின்மை இலக்குகள் மேலும் இறுக்கமாக்கப்பட்டுள்ளன. வாழ்க்கைமுறைக் குறியீட்டை இதில் சேர்ப்பது குறித்தும் அரசாங்கம் பரிசீலிக்கும்.

மேயர்களின் ஊதியம், நாடாளுமன்ற உறுப்பினர்களின் படித்தொகை அமைச்சர்களின் ஊதிய ஒப்பீட்டிலிருந்து பிரிப்பது, அவர்களின் உதவியாளர்களுக்கான படித்தொகையைப் புதுப்பிப்பது போன்றவை குறித்தும் ஆய்வு செய்யப்படும் என்றார் திரு சான்.

அரசியல் சேவை என்பது தனிப்பட்ட நிதி ஆதாயத்திற்கானதல்ல; வருங்கால சந்ததியினருக்கான பலமான அணியை உருவாக்குவதே இதன் நோக்கம் என்று அமைச்சர் சான் வலியுறுத்தினார்.

அமைச்சர்களுக்கு வழங்கப்படும் மாறுபடும் ஊதியப் பகுதி தனிப்பட்ட, நாட்டின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டது. நாட்டின் பொருளியல் வளர்ச்சியை விடவும் சிங்கப்பூர் மக்களின் சமூக-பொருளியல் முன்னேற்றமே முக்கியம் என்று குறிப்பிட்ட அவர், தற்போதைய ஊதிய முறை அமைச்சர்கள் சுதந்திரமாகவும் நடுநிலையாகவும் முடிவெடுக்க உதவுகிறது என்றார்.

பொதுச் சேவையில் பொதுமக்களின் எதிர்பார்ப்புகள் எப்போதும் அதிகமாகவே இருக்கும் என்றும் அமைச்சர் சான் குறிப்பிட்டார்.