அமைச்சர் மரிய வில்சனின் பதவியை பறித்து வழக்குப்பதிவு செய்யணும்: •தமிழக பா.ஜ.,
சென்னை: 'கல்வி நிறுவன அனுமதிக்கு லஞ்சம் கொடுத்ததாக சட்டசபையிலேயே கூறிய, அமைச்சர் மரிய வில்சன் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும்' என, பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
தி.மு.க., ஆட்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்த மகேஷிற்கு லஞ்சம் கொடுத்ததாக, தற்போதைய நிதியமைச்சர் மரிய வில்சன் சட்ட சபையிலேயே பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.
எனவே, முன்னாள் கல்வி அமைச்சர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லஞ்சம் கேட்டவர் மீது அமைச்சர் மரிய வில்சன் எந்த புகாரும் அளிக்காமல், சட்டசபையில் கூறி விளம்பரம் தேட அவசியம் என்ன; லஞ்சம் கொடுத்து, குறுக்கு வழியில் அனுமதி வாங்கும் வகையில், மரிய வில்சனின் கல்வி நிறுவனத்தின் சட்ட ரீதியான குறைபாடுகள் என்ன?
தனிப்பட்ட நலனுக்காக, லஞ்சம் கொடுத்து, காரியத்தை முடிக்கும் குணம் கொண்டவராக மரிய வில்சன் இருக்கிறார். அவரை, அமைச்சர் பதவியில் அமர்த்தினால், அரசு இயந்திரம் எப்படி நேர்மையாக இயங்கும்?
எனவே, அரசு ஊழியருக்கு லஞ்சம் கொடுத்த அமைச்சர் மரிய வில்சன் மீது, ஊழல் தடுப்பு, சட்ட நடைமுறையை தவிர்க்க, லஞ்சம் கொடுத்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
விசாரணை முடியும் வரை, மரிய வில்சனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.