📅 Monday, 10 August 2026 IST | ஆடி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 10, 2026 11:03 AM

அமித்ஷா விழாவில் 12 காவலர்கள் மயக்கம்: புதுச்சேரியில் பரபரப்பு

அமித்ஷா விழாவில் 12 காவலர்கள் மயக்கம்: புதுச்சேரியில் பரபரப்பு

அமித்ஷா விழாவில் 12 காவலர்கள் மயக்கம்: புதுச்சேரியில் பரபரப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்த அமித்ஷா விழாவில் 12 காவலர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி காவல்துறைக்கு ஜனாதிபதியின் வண்ணக்கொடி விருது வழங்கும் நிகழ்ச்சி கோரிமேடு காவல்துறை மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு புதுச்சேரி காவல்துறைக்கு ஜனாதிபதியின் வண்ணக்கொடி விருதை வழங்கினார்.

பின்னர் புதுச்சேரி காவல்துறையினரின் வண்ணமிகு அணிவகுப்பை ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பார்வையிட்டு ஏற்றுக்கொண்டார். மேலும், சிறப்பான நிர்வாகத் திறன், பணியில் சிறந்த செயல்திறன் மற்றும் அர்ப்பணிப்புடன் கூடிய சேவையை பாராட்டும் வகையில் சீனியர் எஸ்.பி.க்கள் கலைவாணன் மற்றும் லட்சுமி சவுஜன்யா ஆகியோருக்கு கேந்திர உள்துறை அமைச்சர் தக்ஷதா பதக்கத்தை அமைச்சர் அமித்ஷா வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு, உள்துறை அமைச்சர் அமித்ஷா காலை 8.20 மணிக்கு வந்தார். முன்னதாக, அதிகாலை 5 மணிக்கே புதுச்சேரி போலீசார் வந்திருந்தனர். தொடர்ந்து, காலை 6 மணி முதல் அணிவகுப்பில் பங்கேற்றனர். காலை 8 மணிக்கு மேல் 30 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் வெறும் வயிற்றோடு அதிக வெப்பநிலை தாங்க முடியாமல் அணிவகுப்பில் வரிசையாக மயங்கி விழுந்தனர்.

குறிப்பாக அமித்ஷா மேடையில் பேசும் போது, 12 காவலர்கள் மயங்கி விழுந்தனர். அவர்களை ஸ்டெச்சர் மூலம் தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். அணிவகுப்பில் நின்றிருந்த காவல்துறையினர் மயங்கி விழுந்த போது, அதை பார்வையாளர் மாடத்தில் இருந்து பார்த்த காவல்துறையினரின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களிடையே சலசலப்பு ஏற்பட்டது.

* தேசியக்கொடிக்கு பதில் காவிக்கொடியால் அமித்ஷா டென்ஷன்

நாட்டின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் பாஜ சார்பில் தேசியக்கொடி அணிவகுப்பு பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக முருகா தியேட்டர் சந்திப்பில் சிறிய மேடை அமைக்கப்பட்டிருந்தது. உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பாஜ மாநில தலைவர் ராமலிங்கம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

அப்போது அமித்ஷாவிடம் தேசியக் கொடிக்கு பதிலாக காவிக்கொடியை கொடுத்தனர். இதனை கண்ட அமித்ஷா, காவிக்கொடியை ஏன் தருகிறீர்கள், மூவர்ண கொடியை கொடுங்கள் என கடும் கோபமடைந்து கேட்டார். பின்னர் தேசியகொடியை வாங்கி பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியில் மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கைகளில் தேசியக் கொடியை ஏந்தியவாறும், நாட்டின் தலைவர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்படங்களை கையில் ஏந்தியவாறும் புதுச்சேரியின் முக்கிய வீதிகள் வழியாக பேரணி சென்றது.