தொகுதி மறுவரையறை மசோதா ஓர் அரசியல் சதி: மாணிக்கம் தாகூர் கண்டனம்
தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர்
சென்னை: மத்திய பாஜக அரசு கொண்டுவரத் துடிக்கும் தொகுதி மறுவரையறை மசோதா இந்தியாவின் இறையாண்மை, கூட்டாட்சித் தத்துவத்தை சீர்குலைக்கும் மிகப்பெரிய அரசியல் சதி என்று தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ‘எக்ஸ்’ வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது: கடந்த ஏப்.17-ம் தேதி இண்டியா கூட்டணியால் மக்களவையில் தோற்கடிக்கப்பட்ட ஆபத்தான தொகுதி மறுவரையறை மசோதாவை, ‘50 சதவீத தொகுதி உயர்வு’ என்ற ஆசையைக் காட்டி மீண்டும் கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்கிறது.
மக்கள்தொகையை வெற்றிகரமாக கட்டுப்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்குப் பங்காற்றிய தமிழகத்துக்கு தண்டனையும், மக்கள்தொகையை கட்டுப்படுத்த தவறிய வட மாநிலங்களுக்குப் பரிசும் அளிப்பது அப்பட்டமான அநீதி.
தொகுதி எண்ணிக்கையை 50 சதவீதம் உயர்த்தினால், உத்தரப் பிரதேசத்தின் தொகுதிகள் 80-ல் இருந்து 120 ஆகவும், தமிழகத்தின் தொகுதிகள் 39-ல் இருந்து 59 ஆகவும் உயரும்.
இதனால் இரு மாநிலங்களுக்கும் இடையிலான தொகுதி இடைவெளி 41-ல் இருந்து 61 ஆக விரிவடையும். நாடாளுமன்றத்தில் இந்த இடைவெளி அதிகரிப்பது தென் மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தை நிரந்தரமாகப் பறித்துவிடும்.
இந்த மசோதா இந்தியாவின் இறையாண்மை, கூட்டாட்சித் தத்துவத்தை சீர்குலைக்கும் மிகப்பெரிய அரசியல் சதி. கடந்த காலத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் 2001-ல் வாஜ்பாய் ஆகியோர் கொண்டு வந்த சட்டத் திருத்தங்கள் மூலமாக மக்களவைத் தொகுதி எண்ணிக்கை முடக்கி வைக்கப்பட்டது.
அந்த பாதுகாப்பை தகர்க்கவே பாஜக தற்போது முயற்சிக்கிறது. மேலும், சாதிவாரிக் கணக்கெடுப்பை முடிக்கும் முன்பே இதை செய்தால், பட்டியலின, பழங்குடியின மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு தொகுதிகளை சரியாக தீர்மானிக்க முடியாது.
எனவே, தமிழகத்துக்கு துரோகம் இழைக்கும் இந்த மசோதாவை வீழ்த்த அனைவரும் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.