📅 Saturday, 17 October 2026 IST | புரட்டாசி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 17, 2026 08:01 AM

அனிருத்

அனிருத்

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத். முதலில் அவர் நடிகை ஆண்ட்ரியாவை காதலித்தார். அந்தக் காதல் பாதியில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து சிங்கிளாக இருந்த அவருக்கு வீட்டில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மகள் காவ்யாவுகும், அனிருத்துக்கும் திருமணம் நடக்கவிருக்கும் சூழலில்; அழைப்பிதழ் வைக்கும் வேலைகள் தொடங்கியிருக்கின்றன.

ரஜினிகாந்த்தின் உறவினரான அனிருத்தை; தனுஷ் சினிமாவுக்குள் அழைத்து வந்தார். துணையோடு சினிமாவுக்குள் நுழைந்தாலும்; தனது திறமையால் மட்டுமே இப்போது தனக்கென ஒரு சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கியிருக்கிறார் அனி. சொல்லப்போனால் தென்னிந்திய சினிமாவில் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார். அவர் எந்த மெட்டு போட்டாலும் அது பட்டித்தொட்டியெங்கும் ஒலித்து மக்களிடம் ஹிட்டடித்துவிடுகிறது.

ஜெயிலர் 2 அனிருத்: நேற்று முன்தினம்கூட அவரது இசையமைப்பில் ஜெயிலர் 2 திரைப்படம் வந்தது. நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருந்த அப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகியிருக்கிறது. அப்படத்தின் வெற்றிக்கு அனிருத்தின் இசையும் பெரிய பலம் என்பது குறிப்பிடத்தக்கது. பாடல்களும், பின்னணி இசையும் படத்துக்கு தேவையான மாஸை கொடுக்க; தியேட்டரே திருவிழா கோலம் கண்டது. அதிலும், டீ கடை சீனில் ரஜினிகாந்த் துப்பாக்கியை எடுக்கும்போது அனிருத் கொடுத்திருந்த இசையை பலரும் ரிப்பீட் மோடில் ரசிக்கிறார்கள்.

சிங்கிள் அனிருத்: இதற்கிடையே முதலில் அவர் நடிகை ஆண்ட்ரியாவை தீவிரமாக காதலித்தார். இரண்டு பேரும் முத்தம் கொடுத்துக்கொண்ட புகைப்படங்கள் எல்லாம் வெளியாகின. ஆனால் திடீரென பிரிந்துவிட்டார்கள். அதற்கு பிறகு அவர் சிங்கிளாகவே தொடர்ந்து பயணம் ஆனார். இப்படிப்பட்ட சூழலில் அவருக்கும், பிரபல தயாரிப்பாளரான சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனின் மகளான காவ்யாவுக்கும் காதல் மலர்ந்தது. இந்தக் காதலுக்கு இரண்டு பேரின் வீட்டிலும் உடனடியாக சம்மதம் கிடைத்தது.

நவம்பரில் திருமணம்: அதனையடுத்து திருமண வேலைகளை இரு குடும்பத்தினரும் தொடங்கினார்கள். அதன்படி அவர்களது திருமணம் நவம்பர் 11ஆம் தேதி கிரீஸ் நாட்டில் நடைபெறவிருக்கிறது. அந்தத் திருமணத்துக்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களை மட்டுமே அழைக்க திட்டமிட்டிருக்கிறார்கள். இத்தனை வருடங்கள் சிங்கிளாக இருந்த அனிக்கு விரைவில் திருமணம் நடக்கவிருப்பது அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி ரசிகர்களிடையேயும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அழைப்பிதழ் வைக்கும் பணிகள்: திருமணத்துக்கு இன்னும் ஒரு மாதத்துக்கும் குறைவான காலமே இருப்பதால் அதற்கான பணிகள் எல்லாம் சூடு பிடித்திருக்கின்றன. நெருங்கிய நண்பர்களையும், உறவினர்களையும் கிரீஸ் நாட்டுக்கு அழைத்து செல்ல மொத்தம் 4 தனி விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. வெளிநாட்டில் திருமணத்தை முடித்துவிட்டு; இங்கே ரிசப்ஷனை வைக்கவும் பிளான் செய்திருக்கிறார்கள். அதன்படி நவம்பர் 21ஆம் தேதி சென்னையில் வைத்து பிரமாண்டமான முறையில் வரவேற்பை நடத்தவிருக்கிறார்கள். அந்த வரவேற்பில் திரைத்துறை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்த இருக்கிறார்கள்.

சூழல் இப்படி இருக்க நேற்று கலாநிதி மாறனும், அவரது மனைவி காவேரியும் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் இருக்கும் அவரது வீட்டில் சந்தித்து வரவேற்புக்கான அழைப்பிதழை வழங்கினார்கள். கண்டிப்பாக வருவதாக ரேவந்த்தும் உறுதி கொடுத்திருக்கிறாராம். கோலிவுட்டின் மிகப்பெரிய திருமணமாக இது அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.