📅 Saturday, 17 October 2026 IST | புரட்டாசி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 17, 2026 08:01 AM

Jailer 2 Day 2 Box Office

Jailer 2 Day 2 Box Office

சென்னை: ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து நெல்சன் திலீப்குமார் இயக்கியிருக்கும் ஜெயிலர் 2 திரைப்படம் கடந்த 15ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. விமர்சன ரீதியாக கொண்டாடப்படும் அப்படம்; வசூலிலும் சக்கைப்போடு போடுகிறது. இந்நிலையில் அதன் வசூல் குறித்த விவரங்களை Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கிறது.

கோலிவுட்டின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பும் ஜெயிலர் 2 படத்தின் மீது இருந்தது. முதல் பாகம் போன்றே இதனையும் தரமான படமாக நெல்சன் கொடுப்பாரா அல்லது பார்ட் 2 எடுக்கிறேன் என எடுத்து சொதப்பிவிடுவாரா என்ற சின்ன தயக்கமும், அச்சமும் ரசிகர்களிடம் இருக்கத்தான் செய்தது. இருப்பினும் அதீத நம்பிக்கையுடன் கடந்த 15ஆம் தேதி தியேட்டர்களுக்கு படம் பார்க்க சென்றார்கள் ரசிகர்கள். முதல் நாள் முதல் காட்சியை திருவிழா போல் கொண்டாடினார்கள் அவர்கள்.

படம் தரம்: எதிர்பார்த்தபடியே நெல்சன் திலீப்குமார் ஜெயிலர் 2வில் சம்பவம் செய்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும். ரஜினிக்கு தேவையான மாஸ் காட்சிகள், அவரை ரசிக்க வைக்கும் காட்சிகள் என அத்தனையையும் பிசிறு தட்டாமல் கொடுத்திருந்தார். ரஜினியும் இத்தனை வயது ஆன பிறகும் அவ்வளவு எனர்ஜியோடு நடித்து அசத்தியிருந்தார். அதேபோல் படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள் நடித்திருந்தார்கள். அவர்கள் அனைவருக்குமே சரியான் ஸ்க்ரீன் ஸ்பேஸையும் கொடுத்திருந்தார் இயக்குநர்.

நமோ நாராயணா பிளாஸ்ட்: படத்தில் ரஜினி, வித்யா பாலன், எஸ்.ஜே.சூர்யா, மிதுன் சக்கரவர்த்தி, ஹிருத்திக் ரோஷன், மோகன் லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன் என பெரிய பெரிய பெர்ஃபார்மர்கள் இருந்தாலும்; அவர்களை எல்லாம் தாண்டி அசால்ட்டாக ஸ்கோர் செய்தவர் என்றால் நமோ நாராயணாதான். பழக்கடை மூர்த்தி என்ற கேரக்டரில் நடித்திருக்கும் அவர்; ஒவ்வொரு சீனும் பிளாஸ்ட்தான். குறிப்பாக சுராஜுடன் செஸ் விளையாடும் சீனில் எல்லாம் தியேட்டரே விழுந்து விழுந்து சிரித்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஜெயிலர் முதல் பாகத்தின் வெற்றிக்கு ரஜினி, அனிருத், நெல்சனுக்கு கலாநிதி கார் வாங்கி கொடுத்தார். இந்தப் படத்தின் வெற்றிக்கு கார் வாங்கி கொடுக்க வேண்டுமென்றால் நமோ நாராயணாவுக்கு வாங்கி கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைக்கும் அளவுக்கு அவரது நடிப்பு இருந்தது. ஆர்ட்டிஸ்ட்டுகளின் உழைப்பு, அனிருத்தின் இசை, இயக்குநரின் ட்ரீட்மென்ட் எல்லாம் இணைந்து பக்கா கமர்ஷியல் பேக்கேஜாக உருவாகியிருக்கும் ஜெயிலர் 2 அனைவரையும் கவர்ந்துவிட்டது.

ரிப்பீட் ஆடியன்ஸ்: பலரும் தியேட்டர்களுக்கு குடும்பத்துடன் சென்று மீண்டும் ஒரு முறை படத்தை பார்த்துவருகிறார்கள். இதன் காரணமாக படத்தின் வசூலும் அதிகரித்திருக்கிறது. அதன்படி முதல் நாளான 15ஆம் தேதி அப்படம் உலகளவில் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்ததாக் Sacnilk இணையதளம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் அதே இணையதளம் ஜெயிலர் 2 படத்தின் இரண்டாவது நாள் வசூல் குறித்த விவரங்களை வெளியிட்டிருக்கிறது.

ஜெயிலர் 2 இரண்டாவது நாள் வசூல்: அதன்படி இரண்டாவது நாளான நேற்று அப்படம் இந்தியாவில் மட்டும் மொத்தம் 35 கோடியே 60 லட்சம் ரூபாயை வசூலித்ததாம். அதாவது தமிழில் 25 கோடியே 25 லட்சம் ரூபாயும், தெலுங்கில் ஏழு கோடியே 25 லட்சம் ரூபாயும், ஹிந்தியில் இரண்டு கோடியே 75 லட்சம் ரூபாயும், கன்னடத்தில் 35 லட்சம் ரூபாயும் கலெக்ட் ஆகியிருக்கிறதாம்.

மொத்தம் இரண்டு நாட்களில் அப்படம் இந்தியாவில் 112 கோடியே 10 லட்சம் ரூபாயை வசூலித்ததாக அந்த தளம் தெரிவித்திருக்கிறது. அதேபோல் வெளிநாட்டு வசூலில் இரண்டு நாட்களில் அப்படம் 97 கோடி ரூபாயை அள்ளியிருக்கிறது. ஆகமொத்தம் அந்தப் படம் இரண்டு நாட்களில் 209 கோடியே 10 லட்சம் ரூபாயை வசூலித்திருப்பதாக Sacnilk இணையதளம் தெரிவித்துள்ளது.