அந்தக் காட்சிகளை உடனே நீக்கணும்.. ஐயப்ப பக்தர்களின் 'இருமுடி' படத்திற்கு வந்த புதுச் சிக்கல்!
ஹைதராபாத்: ரவி தேஜா நடிப்பில், இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கத்தில் ஆகஸ்ட் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் இருமுடி . சாய் குமார், பிரியா பவானி சங்கர், பேபி நட்சத்திரா, ஸ்வாசிகா, அஜய் கோஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இத்திரைப்படம், வெளியான நாள் முதலே திரையரங்குகளில் ரசிகர்களின் அமோக ஆதரவைப் பெற்று வரும் இப்படத்திற்கு புது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இருமுடி: அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக இல்லாமல், ரவி தேஜா இதில் ஒரு பாசமிக்கத் தந்தையாக நடித்து ரசிகர்களை நெகிழ வைத்துள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருக்கும் ரவி தேஜா, தன்னுடைய இந்த மோசமான பழக்கத்தால் தனது ஒரே மகள் எந்த அளவிற்கு வேதனைகளையும் கஷ்டங்களையும் அனுபவிக்கிறாள் என்பதை ஒரு கட்டத்தில் உணர்கிறார். தன் மகளின் எதிர்காலத்திற்காகவும், அவளது அன்புக்காகவும் குடிப்பழக்கத்தை விட்டு விலகி ஐயப்ப சாமிக்கு மாலை அணிந்து 'இருமுடி' கட்டுகிறார். அதன்பின்னர் அவரது வாழ்க்கையிலும், அந்தத் தந்தை-மகள் உறவிலும் ஏற்படும் நெகிழ்ச்சியான மாற்றங்களே இப்படத்தின் உணர்வுப்பூர்வமான கதை களமாகும்.
அதிரடியான வசூல்: திரையரங்குகளில் குடும்பங்கள் கொண்டாடும் படமாக மாறியுள்ள 'இருமுடி', வெளியான 4 நாட்களிலேயே உலகளவில் ₹88 கோடியைப் வசூலித்துச் சாதனை படைத்துள்ளது. தொடர்ந்து நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டிருப்பதால், ஓரிரு நாட்களில் படம் ₹100 கோடி வசூல் கிளப்பில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூல் பெற்று வரும் 'இருமுடி' திரைப்படம் பெரிய எதிர்ப்பு சர்ச்சையில் சிக்கியுள்ளது. அதாவது, ஆந்திரப் பிரதேச ஆசிரியர் சங்கம் (APTF), 'இருமுடி' படத்தில் அரசுப் பள்ளிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மிகவும் எதிர்மறையான மற்றும் இழிவான முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. திரைப்படத்தில் அரசு ஆசிரியர்களையும், மாணவர்களையும் தவறாகக் காட்டும் குறிப்பிட்ட சில சர்ச்சைக்குரிய காட்சிகளை உடனடியாகத் தணிக்கை செய்து தூக்க வேண்டும் என அச்சங்கம் வலியுறுத்தியுள்ளது. அரசுப் பள்ளிகள் திரையில் காட்டப்பட்ட விதம் தற்போது கல்வித்துறை வட்டாரங்களிலும், பார்வையாளர்கள் மத்தியிலும் பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. வசூலில் மாஸ் காட்டி வரும் ரவி தேஜாவின் 'இருமுடி' படத்திற்கு ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் சிக்கல், திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.