அதிமுக.,வில் இருந்து மாஜி சண்முகம் நீக்கம்? பழனிசாமி தீவிர ஆலோசனை
சென்னை: தன்னை தீவிரமாக எதிர்த்து வரும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை, கட்சியில் இருந்து நீக்க, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி ஆலோசனை செய்து வருகிறார்.
சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், வேலுமணி ஆகியோர் தலைமையில், அதிருப்தி அணி செயல்படுகிறது. பழனிசாமியை வேலுமணி விமர்சிப்பதில்லை; சசிகலா, தினகரன் உள்ளிட்டோரை இணைத்து, கட்சியை பலப்படுத்துமாறு கூறுகிறார். ஆனால், சண்முகமோ, பழனிசாமியை மிகக்கடுமையாக விமர்சித்து வருகிறார். இதனால், வேலுமணி, தங்கமணி, விஸ்வநாதன் உள்ளிட்டோருக்கு கட்சி பதவிகளை வழங்கிய பழனிசாமி, சண்முகத்துக்கு எந்த பதவியையும் வழங்கவில்லை. சண்முகத்தின் ஆதரவு நிர்வாகிகளையும் கூண்டோடு நீக்கியுள்ளார்.
இந்நிலையில், சண்முகத்தை கட்சியில் இருந்து நீக்க, பழனிசாமி ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் சிலர் கூறியதாவது: அ.தி.மு.க., செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களில், தனக்கு எதிரானவர்களை நீக்கி, கட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் வைக்க, பழனிசாமி முயற்சிக்கிறார். ஆனால், சண்முகம் மீது நடவடிக்கை எடுக்காததால், அவரின் ஆளுமை மீது அவரது ஆதரவாளர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இது, நெருக்கடியை ஏற்படுத்துவதால், சண்முகத்தை கட்சியில் இருந்து நீக்குவதா அல்லது 'சஸ்பெண்ட்' செய்வதா என, பழனிசாமி ஆலோசித்து வருகிறார். முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர், 'சண்முகத்தை நீக்கலாம்' என யோசனை கூறுகின்றனர். அதே நேரத்தில், 'கட்சியை விட்டு நீக்கினால், த.வெ.க., அரசுக்கு நேரடியாக சண்முகம் ஆதரவளிப்பார். கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்க முடியாது. அவர் பேசியதை மறந்து விட்டு, அவரை நீக்கியதையே கட்சியினரும் பேசுவர்.
'சசிகலா, தினகரனை கட்சியில் சேர்க்க வேண்டும் என்ற வேலுமணி முடிவுக்கு சண்முகம் சம்மதிக்காததால், அவர்களுக்குள் இருக்கும் முரண்பாடு பெரிதாக வாய்ப்பு இருக்கிறது. அதுவரை பொறுமையாக இருப்போம்' என, மணியன் போன்ற மூத்த தலைவர்கள் சிலர், பழனிசாமிக்கு 'அட்வைஸ்' செய்துள்ளனர். இதனால், சண்முகம் விஷயத்தில் கடும் குழப்பத்துடன் பழனிசாமி ஆலோசித்து வருகிறார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
சென்னை தலைமை செயலகத்தில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாவது: பொதுச்செயலராக பழனிசாமி பொறுப்பேற்ற பின்னர் நடந்த தேர்தல்களில், அ.தி.மு.க., வெற்றி பெறவில்லை. தற்போது, சட்டசபை தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் அ.தி.மு.க., இழந்துள்ளது. ஆனால், 47 தொகுதிகளில் பழனிசாமி செல்வாக்கால் வெற்றி பெற்றதாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி சொல்லி வருகிறார்.யார் இந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி; ஜெயலலிதா ஆட்சியில், அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டவர் அவர். வெற்றி பெற்ற 47 தொகுதிகளில், பழனிசாமி செல்வாக்கு காரணம்; தோல்வி அடைந்தால், கட்சி நிர்வாகிகள் பொறுப்பா?சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், 37 தொகுதிகளில் 34ல் தோல்விக்கு யார் காரணம்? டெல்டா மாவட்டங்களிலும், சென்னையிலும், அ.தி.மு.க., துடைத்தெறியப்பட்டு விட்டது. வட மாவட்டங்களில், பா.ம.க.,வால் அ.தி.மு.க., வென்றது. பழனிசாமி பொறுப்பேற்ற பின், விழுப்புரம் மாவட்டத்திற்கு, தேர்தலுக்காக ஒரு பைசா கொடுத்தாரா? இவ்வாறு அவர் கூறினார்.