📅 Thursday, 13 August 2026 IST | ஆடி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 13, 2026 12:05 AM

GDN Day 5 Box Office

GDN Day 5 Box Office

சென்னை: கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கத்தில் மாதவன் நடித்திருக்கும் திரைப்படம் ஜிடிஎன். இதில் ஜிடி நாயுடுவாக நடித்திருக்கிறார் மேடி. அவருடன் துஷாரா விஜயன், பிரியாமணி, அதிதி பாலன், சத்யராஜ், ஜெயராம், யோகி பாபு என பலர் நடித்திருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு வெளியான படத்துக்கு ரசிகர்களிடையே அமோக ஆதரவு கிடைத்தது. இந்நிலையில் அதன் வசூல் குறித்த தகவல்களும் வெளியாகியிருக்கின்றன.

தமிழ் சினிமாவில் சில படங்களில் காமெடி நடிகராக கலக்கியவர் கிருஷ்ணகுமார் ராமகுமார். அவர் இப்போது இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கும் ஜிடிஎன். இந்தியாவின் எடிசன் என புகழப்பட்ட ஜிடி நாயுடுவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் ஜிடி நாயுடுவாக நடித்திருக்கிறார். அவருடன் சத்யராஜ், ஜெயராம், யோகி பாபு, பிரியாமணி, துஷாரா விஜயன், ஜான் விஜய் என ஏராளமானோர் நடித்திருக்கிறார்கள். கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார்.

கலக்கிய மாதவன்: கடந்த சில வருடங்களாகவே மாதவனுக்கு பயோபிக் மீது அதீத விருப்பம் தோன்றியிருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு அவர் இயக்கி நடித்த ராக்கெட்ரி திரைப்படமும் இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானியான நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டதுதான். அப்படம் விமர்சன ரீதியாக சுமாரான வரவேற்பை பெற்றாலும் தேசிய விருதை வென்றது. அடுத்ததாக துரந்தர் படத்தில் அஜித் தோவல் கேரக்டரை ஏற்று கலக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜிடி நாயுடுவாக சூப்பர்: சூழல் இப்படி இருக்க ஜிடிஎன் திரைப்படத்திலும் ஜிடி நாயுடுவாகவே மாறிவிட்டார் மேடி. ஒவ்வொரு சீனிலும் தன்னுடைய உடல்மொழி, நடிப்பு என மொத்தமாக மாற்றி மேஜிக் செய்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஜிடி நாயுடுவே நேரடியாக வந்து இந்தப் படத்தில் நடித்திருக்கிறாரோ என்று சந்தேகப்படும் அளவுக்கு இருந்தது அவரது உழைப்பு. கண்டிப்பாக இப்படத்துக்காகவும் அவர் தேசிய விருதை வெல்வார் என்று பேச்சுக்கள் இப்போதே வர தொடங்கியிருக்கின்றன.

இயக்குநரின் வேலையும் சூப்பர்: இது மாதிரியான பயோபிக் படங்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு சலிப்பு தட்ட தொடங்கிவிடும். ஆனால் இந்தப் படத்தில் அப்படி எதுவுமே இல்லை. அதற்கு காரணம் இயக்குநரின் வேலைப்பாடுதான் என்று சொல்ல வேண்டும். சோடை போகாத திரைக்கதை உள்ளிட்ட விஷயங்களால் படம் ரசிகர்களிடம் பாராட்டைத்தான் பெற்றிருக்கிறது. இந்நிலையில் அதன் வசூல் நிலவரம் குறித்த தகவலை Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கிறது.

வசூல் நிலவரம்: அதன்படி ஐந்தாவது நாளான நேற்று ஜிடிஎன் தமிழ் வெர்ஷன் 39 லட்சம் ரூபாய் மட்டும்தான் வசூலித்ததாம். நான்காவது நாளை ஒப்பிடுகையில் இது குறைவுதான். அதேபோல் தெலுங்கில் ஐந்தாவது நாள், வெறும் 4 லட்சம் ரூபாயை மட்டுமே வசூலித்திருப்பதாகவும்; இரண்டு மொழிகளையும் சேர்த்து ஐந்து நாட்களில் அப்படம் மொத்தம் மூன்று கோடியே 58 லட்சம் ரூபாயை வசூலித்திருப்பதாக அந்த இணையதளம் கூறியிருக்கிறது. மேற்கொண்டு வரும் நாட்களில் கூட்டம் வந்து வசூல் அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.