அதிரடித்த விவசாயிகளின் போராட்டம்... ஆடிப்போன அதிகாரிகள்: எங்கே தெரியுங்களா?
அதிரடித்த விவசாயிகளின் போராட்டம்... ஆடிப்போன அதிகாரிகள்: எங்கே தெரியுங்களா?
விவசாயிகள் தஞ்சை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சாலையின் இருபுறமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று வலியுறுத்தி செங்கிப்பட்டியில் திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு உருவானது.
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை காலதாமதமாக திறக்கப்பட்டது. இருப்பினும் அந்த தண்ணீர் கடைமடை வரை சென்றடையவில்லை என்று விவசாயிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. டெல்டா மாவட்டங்கள் பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு ஒரு மாதம் கடந்தும் கரூர் மாவட்டம் மாயனூரில் இருந்து தஞ்சை மாவட்டம் உய்யங்கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால் மற்றும் புதிய கட்டளை மேட்டு வாய்க்காலுக்கு தற்போது வரை தண்ணீர் வராததால் அசூர், பொய்யங்குடி, வல்லம் புதூர், பாளையப்பட்டி, குரும்பூண்டி, ஆச்சாம்பட்டி உள்ளிட்ட 20 கிராமங்களில் சுமார் 27 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி சரகம் புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடாததை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
சாலை மறியல் போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் என்.வி கண்ணன் தலைமை வகித்தார். அதிமுக சார்பில் கோ.வி.க. சுப்பு, ராமசாமி, நந்தகுமார், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் எஸ். தமிழ்ச்செல்வி, திமுக சார்பில் பொன்.க. லெனின், சிபிஎம். சார்பில் சி.பாஸ்கர், அமமுக சார்பில் கிருபாகரன், விவசாயிகள் சங்க ஒன்றியசெயலாளர் கே.தமிழரசன் மற்றும் திரளான விவசாயிகள் கலந்துகொண்டனர்.
உய்யக் கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால், புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீர் திறக்காததை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து அங்கு வந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் விவசாய சங்க பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்ட விவசாயிகள் தற்காலிமாக சாலைமறியலை விலக்கி கொண்டு புறப்பட்டனர்.
இதற்கிடையில் பேச்சு வார்த்தைக்கு செயற்பொறியாளர் திருமூர்த்தி வர மறுப்பு தெரிவித்ததாக வந்த தகவலை அடுத்து விவசாயிகள் அவரை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் விவசாயிகளை சமாதானப்படுத்தினர். பின்னர் பேச்சுவார்த்தையில் செயற்பொறியாளர் திருமூர்த்தி, பூதலூர் தாசில்தார் விவேகானந்தன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையில் புதிய கட்டளை வாய்க்காலுக்கு 400 கன அடி தண்ணீர் கேட்டு அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பப்படும்.உரிய அனுமதி பெற்று ஒருவாரத்திற்குள் கட்டளை மேட்டு வாய்க்கால் கடைமடை பகுதி வரை தண்ணீர் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து சாலைமறியல் ஒத்தி வைக்கப்பட்டது.
தஞ்சை மாவட்டம் உய்யங்கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால் மற்றும் புதிய கட்டளை மேட்டு வாய்க்காலுக்கு தற்போது வரை தண்ணீர் வராததால் அசூர், பொய்யங்குடி, வல்லம் புதூர், பாளையப்பட்டி, குரும்பூண்டி, ஆச்சாம்பட்டி உள்ளிட்ட உள்ள கால்நடைகள் தண்ணீரின்றி தவித்து வருகிறது. இதனால் மேய்ச்சலுக்கு அழைத்து சென்று திரும்பும் போது கால்நடைகள் வெகுவாக பாதிக்கப்படுகின்றன. எனவே சாகுபடிக்கு மட்டுமின்றி கால்நடைகளின் வாழ்வாதாரத்திற்கும் அடிப்படை தேவையாக உள்ள தண்ணீரை இனியும் காலம் தாழ்த்தாமல் புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் திறந்து விட வேண்டும் என்பதும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி