சைக்கிளோட்டிகள் சம்பந்தப்பட்ட விபத்துகளின் எண்ணிக்கை 2025ல் கூடியது
சிங்கப்பூரில் விபத்தில் சிக்கிய சைக்கிளோட்டிகளின் எண்ணிக்கை 2025ஆம் ஆண்டில் அதிகரித்தது.
அதற்கும் முந்தைய ஆண்டுடன் ஒப்புநோக்க, அது 25 விழுக்காடு உயர்ந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் சைக்கிளோட்டிகள் சம்பந்தப்பட்ட 772 விபத்துகள் பதிவாகின. இந்த எண்ணிக்கை, 2024ல் 620 எனவும் 2023ல் 581 எனவும் பதிவாகியது. கவனக்குறைவாலும் முறையற்ற வகையில் சைக்கிள் ஓட்டியதாலும் இந்த எண்ணிக்கையில் பாதி அளவு விபத்துகள் நிகழ்ந்ததாகக் காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்தார். 2025ல் சைக்கிளோட்டி விபத்துகளால் 17 மரணங்களும் ஏற்பட்டன. இந்த எண்ணிக்கை 2024ல் 13ஆகவும் 2023ல் 15ஆகவும் இருந்தது. மின்சாரத்தால் இயங்கும் சைக்கிள்களும் ‘ட்ரைஷா’ எனப்படும் மூன்று சக்கர சைக்கிள்களும் சாய்ந்த நிலையில் ஓட்டப்படும் சைக்கிள்களும் அவற்றில் அடங்கும். கொவிட்-19 பெருந்தொற்றுக் காலகட்டமான 2021ல் மட்டும்தான் அதிகமாக சைக்கிளோட்டிகள் சம்பந்தப்பட்ட 780 விபத்துகள் பதிவுசெய்யப்பட்டன. 2023ல், பொதுமக்கள் நடமாட்டக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் சைக்கிள் விபத்துகள் 750ஆகக் குறைந்தன. கடந்த பத்து ஆண்டுகளில் காணாத அளவாக, விபத்துகளில் சிக்கி உயிரிழந்த சைக்கிளோட்டிகளின் எண்ணிக்கை 2025ஆம் ஆண்டில் 149ஆக உயர்ந்தது. இந்த எண்ணிக்கை 2016ல் 141 என இருந்தது. இந்த நிலை, அண்மைக் காலத்தில் சாலைகளில் பாதுகாப்பு குறைவதைக் காட்டுகிறது.
விபத்துகளில் காயமடைந்தோரின் எண்ணிக்கையும், 2024ல் இருந்த 9,342லிருந்து 2025ல் 9,955 என ஏற்றம் கண்டது.
இந்தக் கவனத்துக்குரிய நிலவரத்தினால், சாலையைப் பயன்படுத்துவோர் பாதுகாப்பைக் கடைப்பிடிக்க நினைவுறுத்தும் விதமாக, இதுகுறித்த செய்திகளை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வெளியிட்டு வருகிறது.
பொறுப்பற்ற சைக்கிளோட்டிகள் குறித்த காணொளிகள் இணையத்தில் பகிரப்படுகின்றன.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் அருகில் உள்ள நன்யாங் அவென்யூ, ஜாலான் பகார் சாலைச் சந்திப்பில் போக்குவரத்து விளக்கு சிவப்பில் இருந்தபோதும், அதைப் பொருட்படுத்தாமல் சைக்கிளோட்டிகள் சிலர் சாலையைக் கடந்து செல்வதைக் காட்டும் காணொளி ஒன்று பகிரப்பட்டது.
மரினா கோஸ்டல் விரைவுச்சாலையின் சுரங்கத்தில் ஒரு சைக்கிளோட்டி பயணம் செய்த காணொளியும் வெளியிடப்பட்டது. பல இளையர்கள் கூட்டமாக ஒன்றிணைந்து வெஸ்ட் கோஸ்ட் விரைவுச்சாலையில் சைக்கிள்களில் செல்வதும் அவர்களில் சிலர், ஓடிக்கொண்டிருக்கும் லாரிகளைக் கைகளால் பிடித்தபடி செல்வதும் காணொளியில் பதிவாகியது.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
சுரங்கச் சாலைகளில் சைக்கிளோட்டிகள் செல்ல அனுமதி இல்லை. பத்து சைக்கிளோட்டிகளுக்கும் மேற்பட்டோர் ஒரு குழுவாகச் சாலைகளில் சைக்கிளோட்ட அனுமதி கிடையாது.
சாலைக் குறியீடுகளையும் அனைத்து விதிமுறைகளையும் போக்குவரத்து விளக்குகளின் சமிக்ஞைகளையும் சைக்கிளோட்டிகள் கட்டாயமாகக் கடைப்பிடிக்கவேண்டும் என்று காவல்துறைப் பேச்சாளர் வலியுறுத்தினார்.
சாலைகளைப் பயன்படுத்தும் இதர பயனாளர்களையும் கருத்தில்கொண்டு சைக்கிளோட்டிகள் சாலைகளின் இடது புறத்தில் மட்டுமே பயணம் செய்யவேண்டும்.
போக்குவரத்து விளக்கு தங்களுக்குச் சாதகமாக பச்சை நிறத்தில் இருக்கும்போது மட்டுமே பாதசாரிகள் நடக்கலாம்.
அப்போது இதர வாகனங்களுக்குச் சிவப்பு விளக்கு சமிக்ஞை காட்டப்படும். அச்சமயம் சைக்கிளோட்டிகள் பாதசாரிகளுடன் இணைந்துகொண்டு சாலைகளைக் கடப்பது பொதுவான ஒரு பிரச்சினையாகக் கருதப்படுகிறது.
அவ்வாறு சைக்கிளோட்டிகள் பாதசாரிகளுடன் சாலையைக் கடக்க இணைந்துகொள்வது அனுமதிக்கப்பட்டாலும் அவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் அபாயம் ஏற்படாத வகையில் செயல்படுமாறும் அப்பேச்சாளர் கேட்டுக்கொண்டார். பாதசாரிகளுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக சைக்கிளோட்டிகள் நடந்துகொள்ளக்கூடாது என்றும் அவர் நினைவூட்டினார்.
ஒவ்வொரு சம்பவத்தையும் கருத்தில்கொண்டு மற்றவருக்கு ஆபத்து விளைவிக்கும் விதமாக நடந்துகொள்ளும் பொறுப்பற்ற சைக்கிளோட்டிகள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கமுடியும் எனவும் அவர் எச்சரித்தார்.