செப்.15
சென்னை: டிஜிட்டல் முறையிலான ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு சான்றிதழ் ஆகியவை செப்.15-ம் தேதி அண்ணா பிறந்தநாள் முதல் வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று 110-வது விதியின் கீழ் முதல்வர் விஜய் தெரிவித்ததாவது: தமிழகத்தில் தற்போது ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவுச் சான்று பெறுவதற்கு கட்டணமாக ரூ.250 விண்ணப்பதாரர்களால் செலுத்தப்பட்டு, சிப் பொருத்தப்பட்ட அட்டைகளாக தபால் மூலம் விண்ணப்பதாரர்களின் முகவரிக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் விண்ணப்பதாரர்களுக்கு கிடைக்க ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரை தாமதம் ஏற்படுகிறது.
இதை தவிர்க்க, ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவுச் சான்றிதழ் ஆகியவற்றை டிஜிட்டல் முறையில் பொதுமக்கள் தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படும்.
மாநிலம் முழுவதும் ஓட்டுநர் உரிமங்கள், வாகனப் பதிவுச் சான்றிதழ்கள் டிஜிட்டல் முறையில், அதாவது டிஜிட்டல் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் டிஜிட்டல் ரிஜிஸ்ட்ரேஷன் சர்டிபிகேட் வழங்கும் வசதி செப்.15-ம் தேதி அண்ணா பிறந்தநாள் முதல் அறிமுகம் செய்யப்படும். இதனால், புதிதாக வாகனம் வாங்குவோர் வாகனப் பதிவை அதாவது, டிஜிட்டல் ஆர்சி-யை இணையம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதேபோல, ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு, அன்றைய தினமே ஓட்டுநர் உரிமம் டிஜிட்டல் முறையில் வழங்கப்படும்.
அரசு அலுவலகங்கள் மற்றும் பிற அதிகாரப்பூர்வ அமைப்புகள் க்யூஆர் கோடு ஸ்கேன் செய்து மின்னணு முறையில் ஆவணங்களை சரிபார்க்க முடியும். இதன்மூலம் போலி ஆவணங்கள் தவிர்க்கப்படும். ஆவணம் தொலைந்தாலோ, சேதமடைந்தாலோ மீண்டும் பதிவிறக்கம் செய்துகொள்ளவும், அச்சிட்டுக் கொள்ளவும் முடியும்.
ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கும், வாகனத்தைப் பதிவு செய்வதற்கும், வாகனப் பதிவு புதுப்பித்தல் மற்றும் படிப்படியாக போக்குவரத்து சம்பந்தமான அனைத்து அலுவலக சேவைகளுக்கும் தமிழகத்தில் எந்த ஒரு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திலும் விண்ணப்பித்து ‘Anywhere Registration/ Licensing” என்ற முறையில் வசதிகள் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும். இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.
பாஸ்போர்ட் அலுவலகம் வருகை: சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்ததும் முதல்வர் விஜய் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்துக்கு 6 நாட்கள் வரை சுற்றுப்பயணம் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் ‘டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட்’ (Diplomatic Passport) சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்காக முதல்வர் விஜய் சென்னை அண்ணாசாலையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு நேற்று வந்தார். டிப்ள மேட்டிக் பாஸ்போர்ட் பெற ஏற்கெனவே விண்ணப்பித்த நிலையில், கைவிரல் ரேகை பதிவு, புகைப்படம் மற்றும் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்துவிட்டு புறப்பட்டார்.