செப்டம்பர் மாத படங்களுக்கு செக் வைத்த தயாரிப்பாளர் சங்கம்.. இதை செய்யலைன்னா ஒரு படமும் ரிலீஸ் ஆகாதாம்?
சென்னை: செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிடப் போவதில்லை என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது. சூரி நடித்துள்ள மண்டாடி, சர்தார் 2, டிமான்ட்டி காலனி 3, மீசையை முறுக்கு 2, டோரதி உள்ளிட்ட பல படங்கள் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆக காத்திருக்கும் நிலையில், இது பெரிய சிக்கலை உருவாக்கியுள்ளது.
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்குப் பிறகு அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
திரையரங்குகளில் வெளியாகும் புதிய திரைப்படங்களை 8 வாரங்கள் கழித்தே ஓடிடி (OTT) தளங்களில் வெளியிட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்தால் மட்டுமே, அந்தப் படங்களைத் திரையிடுவோம் என தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளனர். தயாரிப்பாளர்களுடன் எவ்வித ஆலோசனையும் நடத்தாமல் எடுக்கப்பட்ட இந்த முடிவு கண்டிக்கத்தக்கது என்று தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மற்ற தென்னிந்திய மாநிலங்களில் இத்தகைய நடைமுறை இல்லாதபோது, தமிழகத்தில் மட்டும் இதனைப் புகுத்துவது ஏற்புடையதல்ல என்றும், ஆண்டுக்கு சுமார் 250 படங்கள் வெளியாகும் சூழலில் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் நஷ்டத்தையே சந்தித்து வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இத்தகைய இக்கட்டான சூழலில், திரையரங்கு உரிமையாளர்களின் இந்த புதிய முடிவை தங்களால் ஏற்க முடியாது என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவைக் கண்டித்து, வரும் செப்டம்பர் 1 முதல் புதிய படங்களை திரையரங்குகளில் வெளியிடுவதில்லை என்றும், படப்பிடிப்புகள் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் உள்ளிட்ட அனைத்து சினிமாப் பணிகளையும் முழுமையாக நிறுத்துவது என்றும் கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்தகட்டமாக இப்பிரச்சினையை தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீர்வு காணப் போவதாகவும் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது தமிழ் உள்ளிட்ட தென்னிந்தியத் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான 4 வாரங்களுக்குப் பிறகே ஓடிடி தளங்களில் வெளியாகும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. எப்படி இருந்தாலும், கடைசி நேரத்தில் சரியான பேச்சுவார்த்தை நடத்தி செப்டம்பர் மாதத்தில் வாரம் வாரம் புதிய படங்களை வெளியிடுவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.