📅 Wednesday, 07 October 2026 IST | புரட்டாசி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 06, 2026 09:03 PM

செவிலியர்கள் மீதான காவல்துறை நடவடிக்கை கண்டனத்திற்குரியது

செவிலியர்கள் மீதான காவல்துறை நடவடிக்கை கண்டனத்திற்குரியது

சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் செவிலியர்கள்போராட்டத்தில் ஈடுப்பட்டனர் தமிழ்நாடு இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராடிய செவிலியர்கள் மீது காவல்துறை மேற்கொண்ட கைது நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது என்று தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டியது அரசின் கடமை

மக்களின் உயிரைக் காக்கும் மகத்தான பணியில் இரவு பகல் பாராமல் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் செவிலியர்கள், தங்களது நியாயமான கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல ஜனநாயக வழியில் போராடியுள்ளனர்.

குறிப்பாக கொரோனா காலத்தில் நம் உயிரை பெரிதும் பொருட்படுத்தாமல், மக்களின் உயிரை காப்பாற்றிய Nightingale. அவர்களுடைய கோரிக்கையை இந்த அரசு செவி சாய்த்து நிறைவேற்ற வேண்டியது கடமை.

கைது நடவடிக்கை ஏற்றுக்கொள்ளதக்கது அல்ல

பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் செல்லப்பட்ட செவிலியர் பிரதிநிதிகளை மண்டபத்தில் அடைத்து வைத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. அவர்களை விடுவிக்கக் கோரி போராடிய செவிலியர்களை இரவு நேரத்தில் காவல்துறையினர் கைது செய்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கையாகும்.

செவிலியர்களின் குரலை காவல்துறை நடவடிக்கைகளால் அடக்க முயல்வதை விடுத்து, அவர்களின் பிரதிநிதிகளை அழைத்து அரசு உடனடியாக வெளிப்படையான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். “சம வேலைக்குச் சம ஊதியம்” உள்ளிட்ட அவர்களின் 15 அம்சக் கோரிக்கைகளையும் பரிசீலித்து, நியாயமான தீர்வை விரைந்து வழங்க வேண்டும்.

கைது செய்யப்பட்ட செவிலியர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், அவர்களது ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளித்து அரசு சுமுகமான தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

கொரோனா காலத்தில் நம் உயிரைக் காத்த செவிலியர்களின் உரிமைக்குரலை இன்று நாம் காப்பது நமது கடமை

என்று தெரிவித்துள்ளார்.