📅 Wednesday, 07 October 2026 IST | புரட்டாசி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News October 07, 2026 01:03 AM

மழையின் போது தண்ணீர் தேங்கும் சாலைகள்: மக்கள் செல்வதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அறிவுரை

மழையின் போது தண்ணீர் தேங்கும் சாலைகள்: மக்கள் செல்வதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அறிவுரை

‘மழையின் போது தண்ணீர் தேங்கும் சாலைகளில் செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்,’ என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் நேற்று முன்தினம், மூன்று மணி நேரம் பெய்த கனமழையில், 58 மி.மீ., மழை அளவு பதிவாகி உள்ளது. இந்த மழையின் போது, பஸ் ஸ்டாண்ட், படகு இல்ல சாலை, கமர்ஷியல் சாலை, சேரிங்கிராஸ், ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் ஆகியவை மழை வெள்ளத்தில் மூழ்கின.

இந்த பகுதிகளில் நேற்று காலை மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா ஆய்வு மேற்கொண்டார். ரயில் பாலத்தின் அடியில் தேங்கிய தண்ணீரை மோட்டார் கொண்டு உறிஞ்சு எடுக்கும் பணிகள் நடந்தன. இதனால், படகு இல்ல சாலையில் வாகனங்கள் செல்ல காலை முதல் தடைவிதிக்கப்பட்டது.

கலெக்டர் கூறுகையில், ‘மழை நீர் அதிகம் தேங்கும் பகுதிகளில், 'பம்பிங்' வாயிலாக, தண்ணீரை உடனடியாக வெளியேற்ற மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது. மழையின் போது தண்ணீர் தேங்கும் சாலைகளில் செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்,’ என்றார்.

நீலகிரி மாவட்டம் கூடலுாரில் நேற்று பெய்த மழையின் போது, மார்தோமா நகர் அருகே மரம் விழுந்து மின் கம்பமும் சேதமடைந்தது. பஸ் ஸ்டாண்ட் அருகே, மைசூரு சாலையில், மின் கம்பி மீது மரம் விழுந்து மின் வினியோகம், மூன்று மாநில போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்பு நிலை அலுவலர் சங்கர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மரத்தை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும், பந்தலுார் அருகே தாளூர் கல்லுாரி சாலையோர மரம் மின் கம்பத்தின் மீது விழுந்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மக்கள் மற்றும் போலீசார் இணைந்து மரத்தை வெட்டி அகற்றினர். எருமாடு மணல்வயல் பகுதியில், வர்கீஸ் என்பவரின் வீட்டின் மீது பாக்குமரம் விழுந்து சேதம் ஏற்பட்டது. அசம்பாவிதம் ஏற்படவில்லை.