📅 Sunday, 11 October 2026 IST | புரட்டாசி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 11, 2026 06:04 PM

சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே, நிர்வாகிகள் சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா விடுவிப்பு

சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே, நிர்வாகிகள் சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா விடுவிப்பு

புதுடெல்லி: சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே, நிர்வாகிகள் சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோரை டெல்லி குற்றவியல் நடுவர் விடுத்துள்ளதாக அக்கட்சியின் சட்ட விவகார பிரிவு தலைவர் ரத்னா சிங் கூறியுள்ளார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி சனிக்கிழமை (அக்.10) அன்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது சிஜேபி. இதில் பங்கேற்க மும்பையில் இருந்து அபிஜித் திப்கே, சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் விமானத்தில் டெல்லி வந்தனர்.

அவர்கள் பயணித்த விமானம் டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் தரையிறங்கியதும் டெல்லி காவல் துறையின் பெண் போலீஸ் அதிகாரிகள், அவர்களை கைது செய்தனர். போராட்டத்துக்கு போலீஸார் அனுமதி மறுத்த நிலையில் அதை தடுக்கும் வகையில் அவர்கள் மூவரையும் கைது செய்தனர்.

இந்நிலையில், இன்று (அக்.11) காலை டெல்லி கன்டோன்மென்ட் சிறப்பு மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர் செய்தனர். இந்நிலையில், அவர்கள் மூவரையும் மாஜிஸ்திரேட் விடுவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிஎன்எஸ்எஸ் சட்டத்தின் பிரிவு 126 மற்றும் 170-ன் கீழ் டெல்லி போலீஸார் அவர்கள் மூவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று சிறப்பு மாஜிஸ்திரேட் முன்னிலையில் போலீஸார் ஆஜர் செய்தனர். அவர்கள் மூவரும் நீதிமன்றத்தில் உறுதிமொழி பத்திரம் சமர்ப்பித்துள்ளனர். மேலும், அடுத்த ஓராண்டு காலத்துக்கு அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலான எந்தவொரு செயலிலும் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனையை நீதிமன்றம் விதித்துள்ளதாக தகவல்.

“அபிஜித் திப்கே, சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகிய மூவரையும் மாஜிஸ்திரேட் விடுவித்துள்ளார். அவர்கள் மூவரும் இங்கிருந்து இப்போது செல்லலாம்” என்று வழக்கறிஞர் சவுதிக் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நேற்று டெல்லி விமான நிலையத்தில் போலீஸார் தாங்கள் பயணித்த விமானத்துக்குள் நுழைந்ததும், ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்திருந்த திப்கே தனது செல்போனில் சம்பவத்தைப் பதிவு செய்யத் தொடங்கினார். சவுரவ் தாஸ் நடுவில் அமர்ந்திருந்தார். அவருக்கு அருகில் ரங்கா அமர்ந்திருந்தார்.

போலீஸாரைக் கண்டதும், அவர்கள் மூவரும் ‘இன்குலாப் ஜிந்தாபாத்’, ‘பாரத் மாதா கி ஜே’ என முழக்கமிட்டனர். விமானத்துக்குள் எடுக்கப்பட்ட காணொலிகளில், சுமார் 12 பெண் போலீஸ் அதிகாரிகள் 3 பேரையும் சூழ்ந்து நிற்பது தெரிந்தது. தன்னைக் கைது செய்யும் விதம் குறித்து திப்கே போலீஸாரிடம் கேள்வி எழுப்பினார்.

“நாடு எந்தத் திசையில் செல்கிறது என்பதைப் பாருங்கள். நேரடியாக விமானத்திலேயே எங்களைக் கைது செய்ய வந்திருக்கிறார்கள். இந்திரா காந்திகூட இப்படிச் செய்ததில்லை. இது சர்வாதிகாரம். நான் கைது செய்யப்படுவதற்காகத்தான் இங்கு வந்திருக்கிறேன். என்னைக் கைது செய்யுங்கள்” என்று திப்கே கூறுவது காணொலியில் பதிவாகியுள்ளது.

துருவ் ராத்தி விடுவிப்பு

யூடியூபர் துருவ் ராத்தியை நேற்று ஹரியானா மாநிலம் குருகிராமில் போலீஸார் தடுப்புக் காவலில் எடுத்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை 2 மணி அளவில் குற்றப்பிரிவு போலீஸார் அவரை விடுவித்தனர்.