📅 Saturday, 10 October 2026 IST | புரட்டாசி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 10, 2026 12:03 AM

சிஜேபி போராட்டம்; டெல்லி மெட்ரோ, புறநகர் ரயில் சேவைகளை முடக்கக்கூடாது

சிஜேபி போராட்டம்; டெல்லி மெட்ரோ, புறநகர் ரயில் சேவைகளை முடக்கக்கூடாது

சிஜேபி போராட்டம்; டெல்லி மெட்ரோ, புறநகர் ரயில் சேவைகளை முடக்கக்கூடாது - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

போராட்டத்தை முறைப்படுத்துகிறோம் என்ற போர்வையில் பொதுப் போக்குவரத்தை முடக்க முடியாது, ஈயைக் கொல்ல சுத்தியலை பயன்படுத்துவது போன்று அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் இருக்க கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Published : October 9, 2026 at 11:02 PM IST

புதுடெல்லி: சிஜேபி போராட்டத்தை முன்னிட்டு டெல்லியில் மெட்ரோ மற்றும் புறநகர் ரயில் சேவைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த முழுமையான தடையை நீக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி விலக வலியுறுத்தி, காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) சார்பில் நாளை டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், போராட்டத்தையொட்டி, பாதுகாப்பு காரணங்களுக்காக 57 மெட்ரோ ரயில் நிலையங்களை மூடவும், பல்வேறு புறநகர் ரயில்களை ரத்து செய்யும் அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர்.

இதுதொடர்பாக தகவல் வெளியான நிலையில், மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து சிபிஎம் பொதுச் செயலாளர் பேபி உள்ளிட்ட பல்வேறு நபர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் கபில் சிபிலும், மத்திய அரசு சார்பில் சொலிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும் ஆஜராகினர். அப்போது வாதிட்ட துஷார் மேத்தா, "போராட்டம் எந்த வகையிலும் வேறு வடிவம் எடுத்துவிடக்கூடாது என்பதற்காக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறது. இதே ஜந்தர் மந்தரில் இரண்டு நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டத்தில் பல்வேறு அத்துமீறல்கள் நடைபெற்றது. எனவே அதைப்போன்று எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்கவே அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது" என்றார்.

தொடர்ந்து பேசிய மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபில், "போராட்டத்தில் பங்கேற்பவர்களை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றாக இருக்கும் மெட்ரோ மற்றும் ரயில் சேவைகளை முழுவதும் முடக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். மக்களின் அடிப்படை உரிமைகளில் தடையிடுவதை எப்படி அனுமதிக்க முடியும்" என்றும் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி சூர்யா காந்த், "போராட்டத்தை முறைப்படுத்துகிறோம் என்ற போர்வையில் பொதுப் போக்குவரத்தை முடக்குவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. ஈயைக் கொல்ல சுத்தியலை பயன்படுத்துவது போன்று அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் இருக்க கூடாது. புறநகரில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் படிப்புக்காகவும், வேலைக்காகவும் டெல்லிக்கு தினமும் ரயில்களில் வருகிறார்கள். எனவே சாமானிய மக்களின் உரிமைகளை போராட்டங்களை நெறிப்படுத்துகிறோம் என்ற அடிப்படையில் பறிக்க முடியாது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த அரசுக்கு உரிமை உண்டு. ஆனால், அதற்காக எல்லாவற்றையும் நிறுத்திவிட முடியாது. கட்டுப்பாடற்ற கும்பல்களின் நடமாட்டதை தடுக்க வேண்டும் என்று நினைத்தால், அதை முறையாக செய்யுங்கள். அதற்காக மக்களுக்கு கிடைக்கும் அடிப்படை வசதிகள் எக்காரணம் கொண்டும் நிறுத்தப்பட கூடாது. அனைத்து மக்களிடமும் கார் இல்லை. சொந்த வாகனங்கள் கூட இல்லாதவர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். ஒரு அரசங்கம் அனைத்தையும் கவனிக்க வேண்டிய தேவை உள்ளது. அதை தவிர்த்துவிட்டு இன்னபிற காரணங்களை கூறி, மற்ற விஷயங்களை புறந்தள்ளிவிட முடியாது.

டெல்லியில் பல்வேறு இடங்களில் போடப்பட்டுள்ள சாலை தடுப்புக்களை முறைப்படுத்த வேண்டும். தேவையில்லாமல் மக்கள் பயன்படுத்தும் சாலைகளை அடைக்க கூடாது. மெட்ரோ மற்றும் புறநகர் ரயில்களுக்கான முழுமையான தடையை நீக்கி, ரயில்களை விகிதாச்சார அடிப்படையில் இயக்கினால், மக்களுக்கு ஏற்படும் சிரம்மங்கள் குறையும். இதில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.

ஜந்தர் மந்தரை போராட்ட களமாக பயன்படுத்துவதற்கு பதிலாக மாற்று இடத்தை மத்திய அரசு தேர்வு செய்ய வேண்டும் என்று மத்திய அரசிடம் நீதிபதிகள் அமர்வு வலியுறுத்திய நிலையில், இது குறித்து அரசு விவாதித்து வருவதாகவும், விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் அறிவுறுத்தலை அடுத்து நாளை மெட்ரோ மற்றும் ரயில் நிலையங்களை முழுமையாக மூடுவது திட்டம் செயல்பாட்டுக்கு வராது என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.