📅 Monday, 28 September 2026 IST | புரட்டாசி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 28, 2026 05:03 PM

சிங்கப்பூர்: அக்டோபரிலிருந்து இஆர்பி 2 சாலை குறியீடுகள் அறிமுகம்

சிங்கப்பூர்: அக்டோபரிலிருந்து இஆர்பி 2 சாலை குறியீடுகள் அறிமுகம்

சிங்கப்பூரில் அடுத்த தலைமுறை மின்னியல் சாலைக் கட்டணக் (இஆர்பி) கட்டமைப்புக்கான புதிய சாலைக் குறியீடுகளும் அடையாளங்களும் அக்டோபர் மாதத்திலிருந்து அறிமுகம் செய்யப்படவுள்ளன.

இதுகுறித்து நிலப் போக்குவரத்து ஆணையம் திங்கட்கிழமை (செப்டம்பர் 28) அறிக்கை வெளியிட்டது.

இஆர்பி கட்டணம் வசூலிக்கப்படும் இடங்களை வாகனவோட்டிகள் எளிதில் அடையாளம் காண முக்கிய, இணைப்புச் சாலைகளின் ஒவ்வொரு தடத்திலும் ‘இஆர்பி’ எனும் நீல நிற நீள்வட்டக் குறியீடுகள் சாயங்களால் ஆங்கிலத்தில் வரையப்படும்.

வானகவோட்டிகள் வேகமாகச் செல்லக்கூடிய விரைவுச்சாலைகளில் மூன்று குறியீடுகள் ஒவ்வொரு தடத்திலும் வரையப்படும் என்று ஆணையம் தெரிவித்தது.

இஆர்பி வசூலிக்கப்படும் ஒவ்வொரு வட்டாரத்தின் தொடக்கத்திலும் புதிய கட்டண வசூலிப்புச் சாலை (ERP Charge Zone) அடையாளங்கள் வைக்கப்படும்.

சிங்கப்பூரில் உள்ள இஆர்பி வசூலிக்கப்படும் 33 இடங்களில் புதிய குறியீடுகளையும் அடையாளங்களையும் கட்டங்கட்டமாக அறிமுகம் செய்ய ஆணையம் திட்டமிட்டுள்ளது.

2027ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து நடப்புக்கு வரவிருக்கும் இஆர்பி 2 கட்டமைப்பை முன்னிட்டு புதிய குறியீடுகளும் அடையாளங்களும் பொருத்தப்படுகின்றன.

சிங்கப்பூரின் பொதுச் சாலைகளில் பயணம் செய்ய சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களில் புதிய ஓபியு சாதனம் பொருத்தப்பட்டிருக்கவேண்டும்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

இஆர்பி வசூலிக்கப்படும் இடங்களை வாகனவோட்டிகள் கடந்துசெல்லும்போது எவ்வளவு கட்டணம் கழிக்கப்பட்டது என்பதை ஓபியூ சாதனம் காட்டும்.

இதுவரை, தகுதிபெற்ற சிங்கப்பூர் பதிவு எண் கொண்ட வாகனங்களில் 98 விழுக்காட்டிற்கும் அதிகமானவற்றில் புதிய சாதனம் பொருத்தப்பட்டுள்ளது.

சாலைக் குறியீடுகள், அடையாளங்கள் ஆகியவற்றின் செயல்திறனைக் கண்டறிய மார்ச் மாதத்திலிருந்து ஜூலை மாதம்வரை இரண்டு கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் குறிப்பிட்டது.

ஜூன் 1ஆம் தேதியிலிருந்து ஜூலை 31ஆம் தேதி வரை நடைபெற்ற இரண்டாம் கட்ட ஆய்வில் கிட்டத்தட்ட 1,000 வாகனவோட்டிகள் பங்கேற்றனர்.

புதிய குறியீடுகளும் அடையாளங்களும் தடுப்புகள் இல்லாத சூழலில் இஆர்பி வசூலிக்கப்படும் இடங்களை எளிதில் அடையாளம் காண உதவியதை ஆய்வு கண்டறிந்ததாக ஆணையம் சுட்டியது.