சிங்கப்பூரின் சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைபாதைகள்
சிங்கப்பூர், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பொருள்களைக் கொண்ட பாதசாரிகளுக்கான புதுவகை நடைபாதைகளை உருவாக்க முயல்கிறது.
ஏறக்குறைய மரங்களுக்கு நிகரான நடைபாதைகளை அமைக்கத் திட்டமிட்டிருப்பதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
உட்ஃபிளெக்ஸ் என்று அழைக்கப்படும் நடைபாதைக்கான கலவை, மறுசுழற்சி செய்யப்பட்ட மரத் துண்டுகள், சிறிய ஜல்லிக் கற்கள், சிமெண்ட் ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகத் திங்கட்கிழமை (செப்டம்பர் 28) ஆணையம் அறிக்கை வெளியிட்டது.
சாதாரணப் பகுதிகளில் கலவையைப் பரப்பவும் கெட்டிப்படுத்தவும் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. மரவேர்கள் உள்ள பகுதிகளில் பணியாளர்கள் கலவையைப் பரப்புவர்.
நிலப் போக்குவரத்து ஆணையத்துடன் சேர்ந்து தேசியப் பூங்காக் கழகம், இவ்வாண்டு ஜூலை மாதத்திலிருந்து உட்ஃபிளெக்ஸ் கலவையைச் சோதித்துப் பார்க்க ஜப்பானிய விநியோகிப்பாளருடன் கைகோத்தது.
“நடைபாதை உள்கட்டமைப்புக்கான புத்தாக்கமிக்க நீடித்த நிலைத்தன்மையுள்ள தீர்வுகளைக் கண்டறிய தொடர்ந்து மேகொள்ளப்படும் முயற்சிகளில் அந்தச் சோதனையும் ஒன்று,” என்றது ஆணையம்.
முதல் 12 மாதங்களுக்கு இரண்டு பகுதிகளில் உட்ஃபிளெக்ஸ் கலவை சோதிக்கப்படும்.
ஹோலி இன்னசன்ஸ் உயர்நிலைப் பள்ளிக்கு அருகில் உள்ள அப்பர் சிராங்கூன் சாலை, ஜாலான் தெனாகா சந்திப்புக்கு அருகில் உள்ள காக்கி புக்கிட் அவென்யூ 1 ஆகிய இரு இடங்களில் புதிய கலவை சோதிக்கப்படும்.