சிங்கப்பூர் சொத்து நிர்வாகம்: புதிய நடவடிக்கைகள்
சிங்கப்பூர், முன்னணிச் சொத்து நிர்வாக நடுவமாகத் தனது நிலையை வலுப்படுத்த மூன்று புதிய நடவடிக்கைகளை எடுக்கிறது. இது நிதி நிர்வாகிகளை ஈர்ப்பதோடு, அவர்களின் வணிக நடவடிக்கைகள், மூலதன ஒதுக்கீடு, திறமையாளர்களின் பணியமர்த்தல் ஆகியவற்றை இங்கு நிலைநிறுத்த ஊக்குவிக்கும்.
நிதி நிர்வாகச் சேவைகளை வழங்கும்போது கிடைக்கும் லாபம் தொடர்பான வருவாய்க்கு வரி விலக்கு, மனிதவள அமைச்சின் ‘ஒன் பாஸ்’ திட்டத்தின்கீழ் புதிய முதலீட்டு நிர்வாகப் பாதை, புதிய ‘ஹெட்ஜ் ஃபண்ட்’ முதலீட்டுத் திட்டம் ஆகியவை அந்த மூன்று நடவடிக்கைகள்.
உலக அளவில் சொத்து நிர்வாகத் துறையில் உள்ள சிறந்த தலைவர்களையும் முதலீட்டு நிபுணர்களை ஈர்க்கும் வகையில் சம்பள மதிப்பீட்டை மேம்படுத்துவதும் புதிய நடவடிக்கைகளில் அடங்கும் என்று கருதப்படுகிறது.
சிங்கப்பூர் நாணய ஆணையம் புதன்கிழமை (ஆகஸ்ட் 19) வெளியிட்ட அறிக்கையில் அந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.
அந்த நடவடிக்கைகள் 2027ஆம் ஆண்டு நடப்புக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த மேல்விவரங்கள், அடுத்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின்போது விரிவாக வெளியிடப்படும் என்று எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்த நடவடிக்கைகள், தொழில்துறையின் நேர்மறையான வளர்ச்சி வேகத்தை உருவாக்கும். அத்துடன் அதிக மதிப்புள்ள சொத்து நிர்வாக நடவடிக்கைகளை நிலைநிறுத்தவும் தொழில்துறை ஆற்றல்களை மேம்படுத்தவும் வளர்ந்துவரும் அனைத்துலகப் போட்டிக்கு இடையில் சிறந்த சொத்து நிர்வாகத் திறமையாளர்களை ஈர்க்கவும் உதவும்” என்று நாணய ஆணையம் கூறியது.
ஆசியாவின் முதன்மைச் சொத்து, செல்வ நிர்வாக நடுவமாய் மாறுவதற்குச் சிங்கப்பூருக்கும் ஹாங்காங்கிற்கும் இடையிலான போட்டி வலுவடைந்துவரும் நிலையில், ஆணையத்தின் அண்மை அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஹாங்காங்குடனான போட்டியை ஒரு தரப்பு மட்டுமே வெல்லும் ஒன்றாகப் பார்க்கவில்லை என்று தேசிய வளர்ச்சி அமைச்சரும் ஆணையத்தின் துணைத் தலைவருமான திரு சீ ஹொங் டாட் கூறினார். ஏனெனில் இரண்டு நகரங்களும் நிதி நடுவங்களாக வளர இந்த வட்டாரம் போதிய அளவுக்குப் பெரியது என்றார் அவர்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
உலகளாவிய நிலப்பரப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் சிங்கப்பூர் தனது கொள்கைகளை மதிப்பாய்வு செய்து சரிசெய்ய வேண்டிய தேவையை ஏற்படுத்தியுள்ளன.
“போட்டித்தன்மை என்பது ஒரு காரணியை மட்டும் அடிப்படையாகக் கொண்டது என்று நாங்கள் நினைக்கவில்லை, ஆனால் அது ஒட்டுமொத்தப் பரிசீலனையின் ஒரு பகுதி,” என்று திரு சீ சொன்னார்.
‘ஒன் பாஸ்’ விசா வைத்திருப்பவர்கள் பல நிறுவனங்களில் பணியாற்றலாம் அல்லது சுதந்திரமாகத் தொழில் தொடங்கலாம்.
தற்போது இந்த விசாவைப் பெறுவதற்கு மாதச் சம்பளம் 30,000 வெள்ளியாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. புதிய முதலீட்டுப் பாதையின்கீழ், முதலீட்டுச் செயல்பாடுகள் மூலமாகக் கிடைக்கும் லாபத்தையும் கருத்தில்கொண்டு இந்தச் சம்பள மதிப்பீடு திருத்தியமைக்கப்படக்கூடும்.