சிங்கப்பூரில் உள்ள இந்தியத் தூதரகம் புதிய இடத்திற்கு மாறுகிறது
ரீமா டுடெகுலா
சிங்கப்பூரில் உள்ள இந்தியத் தூதரகம் புதிய இடத்திற்கு மாறுகிறது.
எண். 54, ஸ்டீவன்ஸ் ரோட்டில் அதன் புதிய இருப்பிடம் அமையவிருக்கிறது. தற்போது அது கிரேஞ் ரோட்டில் செயல்படுகிறது. அங்கிருந்துதான் இந்தியத் தூதரகம் 78 ஆண்டுகளாகச் இயங்கிவருகிறது.
புதிய வளாகத்திற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2028ஆம் ஆண்டிறுதிக்குள் பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டுமானப் பணிகளின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், புதன்கிழமை (ஆகஸ்ட் 19) ஸ்டீவன்ஸ் ரோட்டில் உள்ள கட்டுமானத்தளத்தில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
அதில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் கலந்துகொண்டனர்.
புதிய தூதரகம் அமையவிருக்கும் வளாகத்தின் பரப்பளவு, ஏறக்குறைய 8,700 சதுர மீட்டர்.
அங்கு நான்கு தளங்களைக் கொண்ட தூதரகக் கட்டடம், தூதரக அதிகாரிகளுக்கான 17 அடுக்குமாடிக் குடியிருப்புகள் உள்ள ஐந்து தளங்களைக் கொண்ட குடியிருப்புத் தொகுதி, 500 இருக்கைகள் கொண்ட பல்நோக்குக் கலையரங்கம் முதலியவை இருக்கும்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ஜெய்சங்கர், சிங்கப்பூரில் உள்ள இந்தியத் தூதரகச் சொத்துகளின் நீண்ட வரலாற்றைப் பற்றி விவரித்தார். அவர் முதன்முதலில் தமது சான்று ஆவணங்களைச் சமர்ப்பித்தபோது அப்போதைய அதிபர் எஸ்.ஆர். நாதன் கூறியதை அமைச்சர் நினைவுகூர்ந்தார்.
“உங்கள் சொத்துகளை நீங்கள் எவ்வாறு பராமரிக்கிறீர்கள் என்பதை வைத்து மக்கள் உங்களை மதிப்பிடும் நாடு சிங்கப்பூர்,” என்று அதிபர் தம்மிடம் கூறியதைத் திரு ஜெய்சங்கர் பகிர்ந்துகொண்டார். இந்த வார்த்தைகளே, பியர்ஸ் ரோட்டில் உள்ள தூதரகத்தின் சொத்தை மீட்டெடுக்கும் பணியில் டாக்டர் ஜெய்சங்கரை ஈடுபட வைத்தது. அதுவே தற்போதைய தூதர் ஷில்பாக் அம்புலேவின் அதிகாரபூர்வ இல்லமாக உள்ளது.
மிகவும் நிச்சயமற்ற, பலவீனமான உலகச்சூழலில் இருதரப்பு உறவு ஏறக்குறைய இருபதாண்டுகளில் சீராய் வலுவடைந்துள்ளதாக இந்திய அமைச்சர் கூறினார்.
பல உறவுகள் கணிக்க முடியாததாக மாறும் நிலையில் இந்த உறவு உறுதியாக இருப்பதை அவர் சுட்டினார்.
இந்நிலையில், இந்தியா-சிங்கப்பூர் அமைச்சர்நிலை வட்டமேசைச் சந்திப்பு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 20) நடைபெறவுள்ளது. அதில் இருநாடுகளையும் சேர்ந்த எட்டு அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
இருதரப்பு உறவுகளின் தற்போதைய நிலை பற்றியும் அதன் எதிர்காலத் திசை குறித்தும் சந்திப்பில் விவாதிக்கப்படும். அதன் தொடர்பில் டாக்டர் பாலகிருஷ்ணன் அளித்துவரும் ஆதரவுக்கும் ஒத்துழைப்புக்கும் திரு ஜெய்சங்கர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
பல்லாண்டாக நாட்டின் தூதரகச் சொத்துகளுக்குச் சிறந்த இடங்களைத் தெரிவுசெய்ததில் இந்தியாவின் ஆரம்பகாலத் தூதர்களின் தொலைநோக்குப் பார்வையை டாக்டர் பாலகிருஷ்ணன் பாராட்டினார். மேலும் புதிய தூதரக வளாகம், தற்போதைய காலத்திலும் எதிர்கால வாய்ப்புகளிலும் கவனம் செலுத்தும் உறவின் சின்னமாய்த் திகழ்வதாக அவர் சொன்னார்.
பொருளியலைப் பொறுத்தவரை, 2005ஆம் ஆண்டுக்குப் பிறகு இருதரப்பு வர்த்தகம் இருமடங்காகியுள்ளது என்றும் 2018 முதல் இந்தியாவின் அந்நிய முதலீட்டிற்கான முதன்மை நாடாகச் சிங்கப்பூர் இருந்துவருகிறது என்றும் டாக்டர் பாலகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
இந்தியாவில் செய்யப்படும் மொத்த நேரடி அந்நிய முதலீட்டில் சிங்கப்பூரின் பங்கு கிட்டத்தட்ட கால்வாசி என்பதையும் அவர் சுட்டினார்.
அமைச்சர்நிலை வட்டமேசைச் சந்திப்புக் குறித்தும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் கருத்துரைத்தார்.
“நமது அக்கறைகளையும் லட்சியங்களையும் நாம் நம்பிக்கையோடும் வெளிப்படைத்தன்மையோடும் பகிர்ந்துகொள்ள முடியும் என்பது தனித்துவமானது, அவசியமானது,” என்று அவர் வலியுறுத்தினார்.
சிங்கப்பூர், அடுத்த ஆண்டு ஆசியானின் தலைமைத்துப் பொறுப்பை ஏற்கவுள்ளது. ஆசியான்-இந்தியா உத்திபூர்வப் பங்காளித்துவதை வலுப்படுத்த ஆர்வத்துடன் இருப்பதாகவும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டார்.