📅 Wednesday, 26 August 2026 IST | ஆவணி 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil August 25, 2026 08:05 PM

சிங்கப்பூர் கடற்பகுதியில் 28 கிலோ கொக்கைன் கைப்பற்றல்

சிங்கப்பூர் கடற்பகுதியில் 28 கிலோ கொக்கைன் கைப்பற்றல்

சிங்கப்பூரின் கடற்பகுதியில், வெளிநாட்டில் பதிவுசெய்யப்பட்ட கப்பல் ஒன்றிலிருந்து 28 கிலோகிராமுக்கும் அதிகமான கொக்கைன் போதைப்பொருளை அதிகாரிகள் இம்மாதம் 21ஆம் தேதி கைப்பற்றியுள்ளனர்.

ரகசியத் தகவலின் அடிப்படையில் கடலோரக் காவற்படை அதிகாரிகள் கப்பலில் மேற்கொண்ட சோதனையின் மூலம் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள் என்று நம்பப்படும் பொருள்கள் கொண்ட இரண்டு பொட்டலங்களைக் கண்டுபிடித்தனர்.

கடல்நீரை உள்வாங்கும் அங்கத்திலுள்ள வடிகட்டி சாதனமான ‘சீ செஸ்ட் ஸ்ட்ரைனர்ஸ்’ என்ற பகுதியில் அந்தப் பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த மத்தியப் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு வழக்கை ஏற்றுக்கொண்டது.

அதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட பொட்டலங்களில் 28 கிலோகிராமுக்கும் அதிகமான கொக்கைன் கண்டுபிடிக்கப்பட்டது.

போதைப் பொருள் இருந்த கப்பல் சிங்கப்பூர் வழியாகக் கடந்துசென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அந்தப் போதைப் பொருள் உள்ளூர் சந்தையில் விற்கப்படுவதற்காகக் கொண்டுவரப்படவில்லை என்றும் கூறப்பட்டது.

மத்தியப் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவின் விசாரணை தொடர்கிறது.

சிங்கப்பூருக்குள் 30 கிராமுக்கும் அதிகமான கொக்கைன் போதைப் பொருளைக் கொண்டுவருவோர் பிடிபட்டால் கட்டாய மரணத் தண்டனை விதிக்கப்படலாம்.