சிங்கப்பூர் பொது நூலகங்கள்: முன்கூட்டியே திறப்பு அறிவிப்பு
சிங்கப்பூரிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டுப் பொது நூலகங்கள், திங்கட்கிழமை (அக்டோபர் 5) முதல் காலை 9 மணிக்கே திறக்கப்படும் என்று தேசிய நூலக வாரியம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
வழக்கமாகத் திறக்கப்படும் நேரத்தைவிட ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே இவை திறக்கப்படுகின்றன.
கடைத்தொகுதிகளில் அமைந்துள்ள புக்கிட் பாஞ்சாங், செம்பவாங், சிராங்கூன், பாசிர் ரிஸ் ஆகிய நான்கு நூலகங்கள் தற்போது காலை 11 மணிக்குத் திறக்கப்படுகின்றன. இனி அவை, இரண்டு மணி நேரம் முன்னதாகத் திறக்கப்படும். பீஷான், பொங்கோல், தெம்பனீஸ், உட்லண்ட்ஸ் ஆகிய மற்ற நான்கு நூலகங்கள் வழக்கமான காலை 10 மணிக்குப் பதிலாக ஒரு மணி நேரம் முன்னதாகத் திறக்கப்படும்.
இந்த நேர மாற்றத்திற்கான காரணத்தை வாரியம் தெரிவிக்கவில்லை.
இருப்பினும், பயனாளர்கள் இவ்வாறு முன்கூட்டியே நூலகங்களுக்குள் செல்ல, நூலக அட்டை, அடையாள அட்டை அல்லது ஏற்றுக்கொள்ளத்தக்க இதர அடையாள அட்டையை நூலக நுழைவாயில் அமைப்பில் வருடிச் செல்ல வேண்டும். காலை 10 அல்லது 11 மணிக்கு நூலகங்கள் அதிகாரபூர்வமாகத் திறக்கப்படும்போதுதான் ஊழியர் உதவிச் சேவைகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் உள்ள 23 நூலகங்களும் வழக்கமாக நாள்தோறும் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.