📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 16, 2026 03:31 AM

சிங்கப்பூரில் முறியடிக்கப்பட்ட கடத்தல் சம்பவங்கள் 30.6% அதிகம்

சிங்கப்பூரில் முறியடிக்கப்பட்ட கடத்தல் சம்பவங்கள் 30.6% அதிகம்

சிங்கப்பூருக்குள் சட்டவிரோதப் பொருள்கள் கடத்தப்பட்டதைக் கண்டறிந்து, அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவங்கள் கடந்த ஆண்டு 30 விழுக்காட்டுக்கும் மேல் அதிகரித்ததாகக் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் தெரிவித்துள்ளது.

வரிசெலுத்தப்படாத, சட்டவிரோதப் பொருள்கள் சிங்கப்பூரின் சோதனைச் சாவடிகளில் சிக்கிய சம்பவங்கள் குறித்து ஆணையம் தனது ஆண்டறிக்கையில் விவரித்துள்ளது. அந்த அறிக்கை திங்கட்கிழமை (பிப்ரவரி 23) வெளியிடப்பட்டது.

2025ஆம் ஆண்டு முழுவதும் 57,400 சட்டவிரோதப் பொருள் கடத்தல் சம்பவங்களை அதிகாரிகள் கண்டுபிடித்து முறியடித்தனர்.

2024ஆம் ஆண்டு தடுத்து நிறுத்தப்பட்ட கடத்தல் சம்பவங்களின் எண்ணிக்கை 43,900. இது 30.6 விழுக்காடு அதிகரிப்பு.

சோதனைச் சாவடி அதிகாரிகளின் மேம்பட்ட திறன்களால் அதிகமான கடத்தல் சம்பவங்கள் முறியடிக்கப்பட்டதாக ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், தனது ஒருங்கிணைக்கப்பட்ட இலக்கு மையத்தின் ஆற்றல் மேம்பட்டதும் அதற்கு முக்கியக் காரணம் என்றது ஆணையம்.

சுங்கத் தீர்வை செலுத்தாமல் சிகரெட்டுகளை கார்களுக்குள் மறைத்து வைத்து சிங்கப்பூருக்குள் கடத்தி வந்த சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு அதிகரித்தது. கடத்தலுக்கு ஏற்ற வகையில், கார்களின் உட்புறங்கள் மாற்றி அமைக்கப்பட்டு இருந்தன.

மேலும், லாரிகளில் மற்ற பொருள்களுக்கு இடையே மறைத்து வைத்து கள்ள சிகரெட்டுகள் கடத்தப்பட்ட சம்பவங்களும் அதிகரித்தன.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

அனுமதி பெறாத புதிய, பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களும் கணிசமான அளவு கடத்திக் கொண்டு வரப்பட்டதையும் சுங்கச்சாவடி அதிகாரிகள் கண்டுபிடித்து முறியடித்தனர்.

சிங்கப்பூரின் எல்லா சுங்கச்சாவடிகளிலும் பிடிபட்ட சட்டவிரோதப் பொருள்களில் மின்சிகரெட்டுகளும் அடங்கும். கடந்த ஆண்டு முழுவதும் 667 மின்சிகரெட் கடத்தல் சம்பவங்கள் கண்டறியப்பட்டு, முறியடிக்கப்பட்டன.

அந்தச் சம்பவங்களில் தொடர்புடைய 350,000க்கும் மேற்பட்ட மின்சிகரெட் மற்றும் மின்சிகரெட் சாதனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

குறிப்பாக, 2025 மார்ச் மாதம், மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட லாரி ஒன்றினுள் 23,642 மின்சிகரெட்டுகளும் அதனுடன் தொடர்புடைய சாதனங்களும் துவாஸ் சோதனைச் சாவடியில் சிக்கின.

அந்த லாரியில், பல்வேறு வகையான உணவுப் பொருள்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெட்டிகளுக்குள் மின்சிகரெட்டுகளும் சாதனங்களும் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன.