📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil August 17, 2026 02:30 PM

சிங்கப்பூரின் கடல்துறைப் பாதுகாப்பை வலுப்படுத்தத புதிய நடவடிக்கைகள்

சிங்கப்பூரின் கடல்துறைப் பாதுகாப்பை வலுப்படுத்தத புதிய நடவடிக்கைகள்

சிங்கப்பூரின் துறைமுகப் பகுதிகளில் தானியங்கி மற்றும் தொலைவழிக் கடல்துறை செயல்பாடுகளைச் சோதித்துப் பார்க்க, சிங்கப்பூர் கடல்சார் மற்றும் துறைமுக ஆணையமும் ‘ஓஷன் இன்ஃபினிட்டி’ எனப்படும் கடல்துறைத் தொழில்நுட்ப நிறுவனமும் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 17) புரிந்துணர்வுக் குறிப்பு ஒன்றில் கையெழுத்திட்டன.

13வது ‘சிங்கப்பூர் கடல்துறைப் பாதுகாப்பு’ வாரத்தின் தொடக்க நிகழ்வில் அந்தக் கையெழுத்துச் சடங்கு நடைபெற்றது.

கடல்துறைப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான பல புதிய நடவடிக்கைகள் பற்றியும் அந்த நிகழ்வில் அறிவிக்கப்பட்டது.

கூட்டுக் கற்றலை ஆதரிப்பதுடன், செயல்பாட்டுத் திறன்களை வலுப்படுத்தவும் புதிய தொழில்நுட்பங்களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவதற்கு கடல்துறையைத் தயார்ப்படுத்தவும் அந்நடவடிக்கைகள் உதவும்.

சிங்கப்பூர் கடல்துறைப் பாதுகாப்பு வாரத் தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றிய சட்டம், போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் முரளி பிள்ளை, கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான மூன்று முக்கிய முன்னுரிமைகளைச் சுட்டிக்காட்டினார்.

தொழில்நுட்பத்தைப் பொறுப்புடன் பயன்படுத்துவது, புதிய அபாயங்களை முன்கூட்டியே எதிர்கொள்ளத் தயாராவது, பொதுமக்களின் பாதுகாப்பை மையமாகக் கொண்டு செயல்படுவது ஆகியன அந்த முன்னுரிமைகள்.

வலுவான பாதுகாப்புக் கலாசாரத்தை உருவாக்குவதில் கடல்சார் சமூகம் இணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தையும் திரு முரளி பிள்ளை வலியுறுத்தினார்.

வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21) வரை நீடிக்கும் கடல்சார் பாதுகாப்பு வாரத்தின் நிகழ்ச்சிகளில் கடல்துறையின் 1,500 பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

‘பாதுகாப்பை முதன்மைப்படுத்த அனைவரும் ஒன்றிணைவோம்’ என்னும் கருப்பொருளில் நடைபெறும் அந்த நிகழ்ச்சியில் கடல்துறைப் பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கமும் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த பயிலரங்குகளும் இடம்பெறும்.

தேசிய கடல்துறை பாதுகாப்பு மன்றமும் சிங்கப்பூர் கப்பல்துறைச் சங்கமும் இணைந்து புதிய தகவல் முறையை அந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்தன.

விளிம்புநிலை விபத்துகளிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளவும் அது குறித்து புகாரளிக்கவும் அந்தத் தகவல் முறை ஊக்குவிக்கும்.

அது தவிர, தற்காப்பு அறிவியல், தொழில்நுட்ப முகமை மற்றும் எஸ்டி என்ஜினியரிங் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட ‘ஒருங்கிணைந்த துறைமுகச் செயல்பாட்டுக் கட்டுப்பாடு மற்றும் தகவல் தொடர்பு’ முறை பயன்பாட்டிற்கு வந்துள்ளதாகவும் ஆணையம் அறிவித்துள்ளது.

சிங்கப்பூரின் பரபரப்பான துறைமுக நீரில் ஏற்படும் சிக்கலான செயல்பாடுகள் மற்றும் சம்பவங்களைத் திறம்பட நிர்வகிக்க அந்தத் தகவல் தொடர்பு முறை உதவும் என ஆணையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.