சிறந்த அரசியல் வில்லன் முதல்வர் விஜய்; டிடிவி தினகரன் விமர்சனம்
சிறந்த அரசியல் வில்லன் முதல்வர் விஜய்; டிடிவி தினகரன் விமர்சனம்
தமிழ்நாட்டில் இருந்து பிரதமர் வருவது என்று கூறுவது சிரிப்பாக உள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Published : August 24, 2026 at 6:32 PM IST
தஞ்சாவூர்: முதலமைச்சர் விஜய், சிறந்த அரசியல் வில்லன்; அவருக்கு பாரத ரத்னா கொடுக்கலாம் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தஞ்சையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டது மகிழ்ச்சி. ஆனால் அங்கு நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் அங்கு மாற்றுத் திட்டம் கொண்டு வரப்பட வேண்டும்; விவசாயம் சார்ந்த திட்டங்கள் கொண்டு வர வேண்டும். தற்போது உள்ள விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்.
செங்கோட்டையனை அடையாளம் காட்டியது அதிமுக. ஆனால், அதிமுக மதிமுக நிலைக்கு செல்ல வேண்டும் என்றும் அழிய வேண்டும் என்றும் நினைக்கும் அளவுக்கு அவர் வன்மம் கொண்ட மனிதராக உள்ளார். முதலமைச்சர் தூய சக்தி என்று சினிமா டைலாக் பேசி அரசியலுக்கு வந்தார். அவர் என்ன சுதந்திரப் போராட்ட தியாகியா?, ஆட்சி அமைக்க வேண்டும் என்று சராசரி மனிதரைவிட இறங்கி, அமமுக வேட்பாளரிடம் காரில் அமர்ந்து கையெழுத்து வாங்கி உள்ளனர்.
சட்டமன்றக் கூட்டத்தொடரில் மூன்று கோப்புகள் உள்ளது என மிரட்டுகிறார். இதற்கெல்லாம் திராவிட கட்சிகள் பயந்துவிடாது, ஆட்சி அமைத்ததில் தில்லுமுல்லு. தவெகவை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள், அமமுக வேட்பாளகளைக் கொண்டு ஆட்சி அமைத்துள்ளார். சிறந்த அரசியல் வில்லன் நடிகர் விஜய், அவருக்கு பாரத ரத்னா கொடுக்கலாம். அமைச்சர் ஆனந்த்தை தவிர தவெக விசுவாசிகள் இல்லை. ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜ் எல்லோரும் பல கட்சிக்கு சென்றவர்கள், ஆண்டிற்கு ஆறு சிலிண்டர் தருவதாகக் கூறிவிட்டு மூன்று சிலிண்டர்கள் தருகிறார்கள்.
படித்துவிட்டு இளைஞர்கள் வேலை இல்லாமல் உள்ளனர். ஆனால் நடத்துநர், ஓட்டுநர் பணிக்கு வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களை நியமிக்கின்றனர். திராவிட ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டு இருக்கலாம்.ஆனால் வளர்ந்த மாநிலத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்தது. தற்போது அதள பாதாளத்தில் செல்கிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியில் இருந்தவர், தற்போது தவெகவில் இணைந்து திராவிடக் கட்சிக்கு எதிராக பேசுவது காலத்தின் கொடுமை. அதிமுக, அமுமக இரண்டையும் பிரித்து பார்க்க வேண்டாம். கட்சியில் இருந்து வெளியில் சென்றவர்களுக்கு மீண்டும் பதவி வழங்குவது சரியாக இருக்காது என எடப்பாடி பழனிசாமி தன்னிடம் தெரிவித்தார். அவருடைய கருத்து சரியானது என எனக்கு தோன்றுகிறது.
அதிருப்தியாளர்கள் பொது வெளியில் கருத்து கூறுவது நம்மை பலவீனப்படுத்தும். எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து பயணித்தால் மட்டுமே கட்சிப் பலப்படும். தமிழ்நாட்டில் இருந்து பிரதமர் வருவது என்று கூறுவது சிரிப்பாக உள்ளது. விஜய் தமிழில் தான் நடித்தார். மோடி 12 ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்டு வந்தார். விஜய் முதலில் நிரூப்பிக்கட்டும். விஜய் சொல்வதை அவர் கட்சிக்காரர்களே கேட்பதில்லை. ரீல் விட்டு ஆட்சி தொடரலாம் என நினைத்தால் தமிழக மக்கள் முடிவு கட்டிவிடுவார்கள்.
தற்போதைய சூழலில் நான் சட்டமன்றத்திற்கு செல்லாமல் இருப்பது நன்மையாகப் பார்க்கிறேன். வரும் உள்ளாட்சித் தேர்தலை தேசிய ஜனநாயகக் கூட்டணியோடு சந்திப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.