டெல்லி செங்கோட்டையில் விஜய் கொடியேற்றுவார்: மாணிக்கம் தாகூருக்கு தவெக எம்எல்ஏ பதிலடி
டெல்லி செங்கோட்டையில் விஜய் கொடியேற்றுவார்: மாணிக்கம் தாகூருக்கு தவெக எம்எல்ஏ பதிலடி
மதுரை: டெல்லி செங்கோட்டையில் விஜய் கொடியேற்றுவார் என மாணிக்கம் தாகூருக்கு தவெக மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ பதிலடி கொடுத்துள்ளார். இதனால், தவெக-காங்கிரஸ் மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
முதலமைச்சர் விஜய் தான் பிரதமர் வேட்பாளர் என அமைச்சர் ஜெகதீஸ்வரி கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர், தவெகவினர் இன்னும் ரசிகர் மன்ற மனநிலையிலேயே இருக்கின்றனர். அவர்களை மாற்ற முடியாது. காங்கிரஸ் ஆதரவு கொடுக்காமல் இருந்திருந்தால் அமித்ஷா தவெக கதையை முடித்திருப்பார் என கூறியிருந்தார். ஆளுங்கட்சியினருக்கும், அவர்களது கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவருக்கும் இடையே துவங்கியுள்ள இந்த மோதல் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் சட்டசபையில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, தென்நாட்டிலிருந்து ஒருவர் பிரதமராக வரவேண்டும் என விஜயை மனதில் வைத்து தெரிவித்திருந்தார். மேலும், சமீபத்தில் தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் விஜய் மற்றும் அமித்ஷாவின் நெருக்கம் காங்கிரஸ் கட்சியினருக்கு ஒருவித மனநெருடலை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வடமாநிலங்களில் ரூட் மாபியா, வாய்ஸ் ஆப் காமன் மூலம் விஜய் பிம்பத்தை பெரிதாக்கி பொய் ரீல்ஸ்களை கட்டவிழ்த்துவிடுவதாக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், மதுரை வடக்குத் தொகுதி தவெக சார்பில் நூறு நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நேற்றிரவு அண்ணா நகர் பகுதியில் நடைபெற்றது. இதில், வடக்கு தொகுதி எம்எல்ஏ கல்லாணை பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சராக வழிநடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சர் விஜய், நாளை இந்தியாவையே வழி நடத்துகிற தலைவனாக நிச்சயமாக உருவெடுப்பார். நாங்கள் ஏதோ ரசிக மனப்பான்மையிலோ அவர் மீது உள்ள பற்றிலோ சொல்லவில்லை. அவரோட திறமையில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கு. மக்கள் மேலே நம்பிக்கை இருக்கு.
மக்களின் அன்போடும் ஆதரவோடும் கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றிய நமது தலைவர் தான் நாளைய எதிர்கால இந்தியா. இப்படிப்பட்ட ஒரு தலைவனை எதிர்நோக்கி காத்திருக்கும் அந்த செங்கோட்டையில் ஒரு தமிழன் கொடியேற்றுகிறான் என்றால், அது நிச்சயமாக நமது தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஆகத்தான் இருப்பார்’ என்றார். இவரது பேச்சு காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருப்பதால் தவெக-காங்கிரஸ் மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளதாக தெரிகிறது.