📅 Thursday, 13 August 2026 IST | ஆடி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 13, 2026 05:01 AM

சம்ஸ்கிருதத்துக்கு ஒரு நீதி... தமிழுக்கு ஒரு நீதியா?

சம்ஸ்கிருதத்துக்கு ஒரு நீதி... தமிழுக்கு ஒரு நீதியா?

சம்ஸ்கிருதத்துக்கு ஒரு நீதி... தமிழுக்கு ஒரு நீதியா? - என்னங்க சார் உங்க சட்டம்..?

தமிழ்நாட்டுக்கு வெளியே வசிக்கும் ஆயிரக்கணக்கான தமிழ்க் குடும்பங்களின் குழந்தைகள் தமிழை மூன்றாவது மொழியாகக் கற்க விரும்பினாலும், அதற்கேற்ப தமிழாசிரியர்கள் நியமிக்கப்படுவதில்லை.

புதிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக, இந்தியா முழுவதும் மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நடத்தும் 14,500-க்கும் மேற்பட்ட பள்ளிகளை பிஎம் ஸ்ரீ பள்ளிகளாக மாற்றும் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. இந்தப் பள்ளிகள் புதிய கல்விக் கொள்கைகளை முழுமையாகச் செயல்படுத்திக் காட்டும் மாதிரிப் பள்ளிகளாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. புதிய கல்விக் கொள்கை மும்மொழியைக் கட்டாயமாக்குவதால், ‘மொழித்திணிப்புக்கு வழிவகுக்கும்’ என்று கூறி, தமிழகம் பிஎம்ஸ்ரீ பள்ளித் திட்டத்தில் இணைய மறுத்துவிட்டது. ‘அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை, அப்படியெல்லாம் நடக்காது, மாணவர்கள் விரும்பிய மொழியைக் கற்றுக்கொள்ள முடியும்’ என்ற மத்திய அரசு, பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இணையாததாலும், புதியக் கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாததாலும் தமிழகத்துக்குக் கல்விக்காக வழங்கவேண்டிய நிதியையே நிறுத்திவைத்தது.

ஆனால் தமிழக அரசு என்ன சொல்லி பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இணைய மறுத்ததோ, அதுதான் இப்போது நடக்கிறது.

`பிரதான் மந்திரி ஸ்கூல்ஸ் ஃபார் ரைசிங் இந்தியா' (Pradhan Mantri Schools for Rising India) என்பதன் சுருக்கமே, ‘பிஎம்ஸ்ரீ பள்ளிகள் திட்டம்’. இந்தத் திட்டம் பள்ளிகளில் கல்வியின் தரம், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக்கொண்டு 2022, செப்டம்பர் 7-ம் தேதி மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. சுமார் ரூ.27,360 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் நவீன உட்கட்டமைப்பு, டிஜிட்டல் கற்றல் வசதிகள் செய்யப்பட்டு மாணவர்களின் திறன் மேம்படுத்தப்படும். இதற்கான செலவை மத்திய அரசு 60%, மாநில அரசு 40% எனப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

இந்த பிஎம்ஸ்ரீ திட்டம் மாநிலங்களின் உரிமையைப் பறிப்பதோடு மொழித் திணிப்பையும் செய்கிறது என்று கடந்த தி.மு.க அரசு, இந்தத் திட்டத்தில் இணைய மறுத்துவிட்டது. தற்போதைய த.வெ.க அரசும் இரு மொழிக் கொள்கையில் உறுதியாக இருக்கிறது. தமிழக அரசு ஏற்றுக்கொள்ளாத நிலையில், தமிழகத்தில் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை இந்தத் திட்டத்தில் இணைத்தது மத்திய அரசு. இந்தச் சூழலில் மக்களவையில் மத்திய கல்வி அமைச்சகத்தின் சார்பில் தரப்பட்ட ஒரு புள்ளிவிவரம், தமிழகத்தின் அச்சத்தை உறுதிசெய்கிறது.

கடந்த ஜூலை மாதம் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பாராளுமன்றத்தில் “பிஎம்ஸ்ரீ பள்ளிகளில் மொழிவாரியாகப் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறித்துக் கேள்வி எழுப்பினார். அதற்கு எழுத்துபூர்வமாக பதில் அளித்தார் கல்வித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சௌத்ரி. அதில் ‘இந்தியா முழுமையும் இதுவரை 13,092 பள்ளிகள் பிஎம்ஸ்ரீ திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும், அவற்றில் சம்ஸ்கிருத ஆசிரியர்கள் 6,102 பேர், உருது ஆசிரியர்கள் 1,994, பிற மாநில மொழிகளுக்கு 9,152 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர் என்றும் தெரிவித்திருக்கிறார். அதேநேரம், தமிழ்நாட்டில் பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இணைக்கப்பட்ட கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 41 சம்ஸ்கிருத ஆசிரியர்கள் இருப்பதாகவும், மாநில மொழிகளுக்கு வெறும் 12 பேர் மட்டுமே இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

“இதன் மூலம் மத்திய அரசின் நோக்கம் தெளிவாகத் தெரிகிறது. புதிய கல்விக் கொள்கை, பிஎம்ஸ்ரீ திட்டம் என அவர்கள் கொண்டுவருகிற மொத்தத் திட்டங்களின் நோக்கமும், மாநில மொழிகளை அழித்து, சம்ஸ்கிருதத்தை வளர்த்தெடுப்பது மட்டும்தான்...” என்று குமுறுகிறார்கள் கல்வியாளர்கள்.

“மும்மொழிக் கொள்கை என்றால் மாணவர்கள் மூன்று மொழிகளைக் கற்க வேண்டும், அதில் இரண்டு இந்திய மொழிகளாக இருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் அது இந்தி, சம்ஸ்கிருதத் திணிப்பாக மாறிவிட்டது. மாநில மொழி ஊக்குவிப்பு என்பது ஏமாற்று வேலை என்பது மத்திய அமைச்சர் பதிலில் அம்பலமாகியிருக்கிறது...” என்கிறார், மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன்.

“ ‘பிஎம்ஸ்ரீ திட்டத்தில் மும்மொழிக் கொள்கையை வலியுறுத்துவது இந்திய மொழிகளையும், மாநில மொழிகளையும் வளர்ப்பதற்காகத்தான்’ என்று மத்திய அரசு கூறிவந்தது. ஆனால், மத்திய அமைச்சரின் பதில்படி 6,102 சம்ஸ்கிருத ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள மொழிகளில், மிகக் குறைவானோர் பேசும் சம்ஸ்கிருதத்துக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்பதே எங்கள் கேள்வி.

மத்தியப் பிரதேசத்தில் 944 பிஎம்ஸ்ரீ பள்ளிகள் மட்டுமே இருக்க, அங்கு 1,211 சம்ஸ்கிருத ஆசிரியர்கள் நியமிக்கப் பட்டிருக்கின்றனர். ஒரே பள்ளியில் ஒன்றுக்கு மேற்பட்ட சம்ஸ்கிருத ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், பீகார், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களிலும் இதே நிலைதான்.

இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழியாகப் பெரும்பாலும் இந்தியைத்தான் நடைமுறைப்படுத்துகிறார்கள். ஆனால், இந்தி பேசும் மாநிலங்களில் தென்னிந்திய மொழிகள் அதே அளவில் கற்பிக்கப்படுவதில்லை. ‘எந்த மொழி வேண்டுமானாலும் கற்கலாம்... ஆனால், அந்த மொழிக்கு ஆசிரியர்கள் இருக்க மாட்டார்கள்’ என்பதே பிஎம்ஸ்ரீ பள்ளிகளின் உண்மை நிலை.

“மாணவர்கள் தாய்மொழியில் கல்வி கற்கும்போது பாடங்களை ஆழமாகப் புரிந்துகொள்ள முடியும். ஆங்கிலம் உலகளாவிய தொடர்புக்கும் வேலைவாய்ப்புக்கும் தேவையான மொழி. இந்த இரண்டு மொழிகளோடு, மாணவரின் வாழ்வியல் சூழலோடு தொடர்பில்லாத மூன்றாவது மொழியைக் கட்டாயப்படுத்துவது கூடுதல் கல்விச் சுமையாகத்தான் மாறும். மூன்றாவது மொழி விருப்பம் என்றாலும், அதற்கான ஆசிரியர் நியமனம், பாடத்திட்டம், நிர்வாக நடைமுறைகள் போன்றவற்றின் மூலம் எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட மொழி மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் சூழல் உருவாகலாம். மேலும் மாணவர்கள் வெவ்வேறு திறமைகளை வளர்த்துக் கொள்ள ஒதுக்கவேண்டிய நேரத்தை ஒரு மொழி கற்றுக்கொள்வதற்குச் செலவிடும் சூழல் இருக்கிறது.

தேசியக் கல்விக் கொள்கையில் சம்ஸ்கிருதத்துக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், இந்திய பாரம்பர்ய அறிவின் மையமாக அதை முன்வைப்பது போன்ற அணுகுமுறைகள், இந்தியாவின் பன்முக மொழி மற்றும் பண்பாட்டு அடையாளத்தை நீர்த்துப்போகச் செய்துவிடும். அதனால்தான் இதை மொழித் திணிப்பாக மட்டுமின்றி, பண்பாட்டுத் திணிப்பாகவும் பார்க்கிறோம்...” என்கிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

“பிஎம்ஸ்ரீ திட்டத்தின்கீழ் சில ஆயிரம் பள்ளிகளுக்கு மட்டும் கூடுதல் நிதி, வசதிகள், சிறப்பு அங்கீகாரம் வழங்கப்படுவது சரியல்ல. அரசின் நோக்கம் அனைத்து அரசுப் பள்ளிகளையும் தரமானதாக மாற்றுவதாக இருக்க வேண்டுமே தவிர, சில பள்ளிகளை மட்டும் முன்மாதிரிப் பள்ளிகளாக உருவாக்குவதாக இருக்கக் கூடாது. இது அரசே அரசுப் பள்ளிகளுக்குள் பாகுபாட்டை உருவாக்குவதாகி விடும். மற்ற அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம் தாழ்வு மனப்பான்மை உருவாகவும், இடைநிற்றல் அதிகரிக்கவும் இது போன்ற அணுகுமுறைகள் வழிவகுத்துவிடும்” என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

கல்வியாளர் ரத்தின சபாபதியும் மத்திய அரசின் பாரபட்சத்தைக் கண்டிக்கிறார். “பள்ளிகள் வழியாக இந்தி, சம்ஸ்கிருதத்தை அனைத்து மாநிலங்களிலும் பரவலாக்க முயல்கிறது மத்திய அரசு. ஆனால், பிற இந்திய மொழிகளை வளர்க்கும் முயற்சிகள் அதே அளவில் இல்லை. மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்ட மாநிலங்களில்கூட தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகள் பரவலாக கற்பிக்கப் படுவதில்லை. மொழி என்பது அறிவு அல்ல. உயர்கல்வி, வேலை ஆகிய சூழலில் நிர்பந்தத்தின் அடிப்படையில் எந்த மொழியையும் மாணவர்கள் கற்றுக் கொள்வார்கள். எனவே, மொழிக்காகச் செலவிடும் நிதியை மாணவர்களின் திறன் மேம்பாடு, அடிப்படைக் கல்வி மற்றும் உள்கட்டமைப்புக்குப் பயன்படுத்தினால் அதிக பலன் கிடைக்கும்’’ என்கிறார் அவர்.

மொழிதான் ஒரு பண்பாட்டின் அடித்தளம். இந்தியா என்பது பல்வேறு இனம், மொழி, கலாசாரத்தின் பிணைப்பு தான். எந்தத் திட்டமாயினும் எல்லோருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். தங்கள் கொள்கைகளைத் திணிக்கும்விதமாக மாநிலங்களின் உரிமைகளில் தலையை நுழைப்பதும், ‘திட்டங்கள்’ என்ற பெயரில் கட்டாயப்படுத்துவதும், தரவேண்டிய நிதியை நிறுத்திவைத்து மாணவர்களை வஞ்சிப்பதும் சிறிதும் நியாயமல்ல. அதேபோல அங்கீகரிக்கப்பட்ட அட்டவணை மொழிகள் அனைத்துக்கும் உரிய மரியாதையையும் பங்களிப்பையும் வழங்கவேண்டியது மத்திய அரசின் கடமை. இந்திய அரசியல் சாசனம் அதைத்தான் வலியுறுத்துகிறது. தங்கள் கொள்கைக்கு உகந்த மொழிகளுக்கு முக்கியத்துவம் வழங்குவதும், பிற மொழிகளைப் புறக்கணிப்பதும் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும். இதை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும்!