சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறை எடுக்கும் ஒரே முதலமைச்சர் விஜய்தான்: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறை எடுக்கும் ஒரே முதலமைச்சர் விஜய்தான்: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
தாராபுரம்: சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறை எடுக்கும் ஒரே முதலமைச்சர் விஜய்தான் என எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். தாராபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் பானுமதியை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்; மக்கள் அளித்த வாக்குகளை விற்றுவிட்டு சத்தியபாமா ராஜினாமா செய்துள்ளார். இடைத்தேர்தலில் துரோகிகளுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். உங்களிடம் நியாயம் கேட்கவே வந்திருக்கிறேன்
திமுக - அதிமுக உடன்பாடு என்றால் ஏன் தனித்தனியாக போட்டியிடப் போகிறோம்? ஏதோ விபத்து நடந்தது போல விஜய் தலைமையிலான தவெக ஆட்சிக்கு வந்துவிட்டது. அதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்யவைத்து இன்று ஆட்சிக்கு வந்துள்ளது தவெக. தூய சக்தி என்றால் ராஜினாமா எம்.எல்.ஏ.க்களை தவெகவில் சேர்த்திருக்கக் கூடாது. தீய சக்தி தயவால்தான் தவெக ஆட்சி அமைத்துள்ளது. அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துவிட்டது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த இந்த தவெக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
“உங்க வீட்டு அண்ணனாக இருப்பேன், மாமனாக இருப்பேன் என்று பச்சை பொய் பேசுகிறார். பாசம் என்று சொன்னால் தாய் தந்தையோடு வாழ வேண்டும், கட்டிய மனைவியோடு வாழ வேண்டும், பெற்ற பிள்ளைகளுடன் வாழ வேண்டும். பாசம் அங்கேதான் பிறக்கும்." அன்பு என்றால் என்ன, குடும்பம் என்றால் என்ன என்பதைப் பற்றி விஜய் தெரிந்துகொள்ள வேண்டும். மேடையில் வீரவசனம் பேசினால் போதாது நிஜ வாழ்க்கையில் வாழ்ந்து காட்ட வேண்டும். சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறை எடுக்கும் ஒரே முதலமைச்சர் விஜய்தான் என்றும் கூறினார்.