சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் செயல்பாடு எப்படி?
சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்
சட்டப்பேரவையில் எப்போதும் சபாநாயகர் எதிர்க்கட்சிகளை சமாளிக்கவே அதிகம் திணறுவது வழக்கம். ஆனால், இம்முறை ஆளும் கட்சியினரிடமும் சிக்கி திக்குமுக்காடிப் போகிறார் ஜே.சி.டி.பிரபாகர். இதனால் சபாநாயகருக்கு எதிராக ஆளும் கட்சியில் சில அதிருப்தி குரல்கள் கேட்கும் நிலையில், அவரின் செயல்பாடுகள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.
தனிப்பெரும்பான்மை இல்லாமல் முதல்முறையாக தமிழகத்தில் ஆட்சியமைத்த தவெக சார்பில் யார் சபாநாயகராக முன்மொழியப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது. அப்போது அறிவிக்கப்பட்ட ஜே.சி.டி.பிரபாகரனின் பெயர் அனைவரிடமும் நம்பிக்கையை உருவாக்கியது.
ஏனென்றால் ஜே.சி.டி.பிரபாகர் எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதி. “எனக்கு ஒரு பெண்பிள்ளை இருந்திருந்தால் அவரை பிரபாகருக்கு திருமணம் செய்து வைத்திருப்பேன்” என்று சொன்னவர் எம்ஜிஆர். அதேபோல தமாகா தலைவராக இருந்த மூப்பனாருடனும் நெருக்கமாக செயல்பட்டு நற்பெயர் எடுத்தவர். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய நபராகவும் இருந்தவர். 50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் தற்போது வரை ‘க்ளீன் இமேஜை’ காப்பாற்றி வருபவர் பிரபாகர். இதனால் சபாநாயகராக அவர் தேர்வு செய்யப்பட்டது முதல்வர் விஜய்யின் நல்ல முடிவாக பார்க்கப்பட்டது.
தற்போதைய சட்டப்பேரவை, தமிழக அரசியல் இதுவரை காணாத அவையாக அமைந்துள்ளது. இப்போது பேரவையில் கணிசமான மூத்தவர்கள் இருந்தபோதும், பெரும்பாலும் புதியவர்கள் நிரம்பியுள்ளனர். எதிர்க்கட்சி வரிசையில் இபிஎஸ், ஓபிஎஸ் என இரு முன்னாள் முதல்வர்களும், எண்ணற்ற முன்னாள் அமைச்சர்களும், அனுபவம் மிக்க சட்டப்பேரவை உறுப்பினர்களும் அமர்ந்திருந்தாலும், ஆளும் கட்சி வரிசையில் மிகப் பெரும்பான்மையானோர் புதியவர்கள். அமைச்சரவையிலும் செங்கோட்டையனை தவிர ஏனைய அனைவருமே புதியவர்கள்.
எதிர்க்கட்சி வரிசையில் அனுபவம் மிக்கவர்களும், ஆளும் கட்சி வரிசையிலும் அவைக்கு புதியவர்களும் நிரம்பியுள்ள பேரவையை வழிநடத்துவது சபாநாயகருக்கு உள்ளபடியே சவாலான பணிதான். இதில் இருபக்கமும் ஏற்றம் இறக்கம் இன்றி, கூடுதல் குறைவு இன்றி தன்னால் இயன்ற அளவும் செயல்படுகிறார் ஜேசிடி பிரபாகர்.
எதிர்க்கட்சிகள் கொந்தளிக்கும்போது நிதானமாக பேசி அவர்களை சமாளிக்கும் சபாநாயகர், ஆளும் கட்சியினர் எல்லை தாண்டும்போது அவர்களுக்கு கடிவாளம் போடவும் தயங்குவதில்லை. முக்கியமாக, எதிர்க்கட்சிகளை தாக்கி அமைச்சர்கள் ‘வார்த்தைகளை’ விடும்போது, அதற்கு பிரேக் போட்டு அவர்களை அமைதியாக்கி, அவர்கள் பேசியவற்றை அவைக் குறிப்பில் இருந்து நீக்கிவிட்டு, அவையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்.
ஆளும் கட்சி வரிசையில் முதல்வர் விஜய், செங்கோட்டையன் தவிர ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், ராஜ்மோகன் உள்ளிட்ட மற்ற அனைத்து அமைச்சர்களுக்கும் அடிக்கடி ‘வேகத்தடை’ போட்டு விடுகிறார்கள். வார்த்தைகள் தடிக்கும்போது, வாதம் முற்றும்போதே அமைச்சர்களின் பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்கவும் சபாநாயகர் தயங்குவதில்லை. இன்னும் முக்கியமாக, முதல்வர் விஜய் குறித்து அமைச்சர்கள் நீண்ட நேரம் புகழ்பாடி கொண்டிருந்தால், உடனே குறுக்கிட்டு தடுத்து நிறுத்தி ‘சப்ஜெக்ட்’க்குள் கொண்டு வந்துவிடுகிறார் அவர். இது உண்மையிலேயே கடந்த காலங்களில் காணாத ஒன்றுதான். அதற்காகவே சபாநாயகரை பாராட்டலாம்.
எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் முன்வைக்கும் பலவிதமாக குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர்கள் பதிலளிப்பதற்கு முன்பாகவே, கடந்த கால சம்பவங்கள், பேரவை விதிகள் உள்ளிட்ட முக்கிய விஷயங்களை குறிப்பிட்டு எதிர்க்கட்சிகளை அமைதியாக்கிவிடுகிறார் சபாநாயகர்.
அரசியலில் நீண்ட அனுபவம் கொண்டவர் என்பதால், எதிர்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள முக்கியத் தலைவர்கள் அனைவரிடமும் நல்ல நட்புறவு, ஜேசிடி பிரபாகருக்கு உண்டு. இதன் மூலமாக அவையில் பெரிய அளவில் சலசலப்பு ஏற்படும்போது, மூத்த உறுப்பினர்கள் துணையோடு அதனை எளிதாக சமாளிக்கிறார்.
“நான் வாத்தியார் எம்ஜிஆரின் செல்லப்பிள்ளை” என அவையில் சொன்னார் ஜேசிடி பிரபாகர். அதே வழியில் அவையில் ஒரு கறார் வாத்தியாராகவே செயல்படுகிறார் அவர். ஆனால், அதில் அடிக்கடி ஆளும் கட்சினர் சிக்குவதுதான் சலசலப்பை உருவாக்குகிறது.
அமைச்சர்கள் உட்பட ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் பெரும்பான்மையோர் புதியவர்கள் என்பதால், அவர்கள் அவையில் அனுபவம் பெறும் வரையில் சபாநாயகரின் ‘கண்டிப்பான வழிகாட்டுதல்’ அவசியம் என கருதுகிறார் முதல்வர் விஜய். இதனால் அவரின் அனுமதியோடே ஆளும் கட்சியினரிடம் சபாநாயகர் கறார் காட்டுகிறார் எனவும் தவெக தரப்பில் கூறப்படுகிறது.
சட்டப்பேரவை நடவடிக்கைகள் முழுமையாக நேரலை செய்யப்படும் நிலையில், அனைத்தையும் மக்கள் பார்க்கிறார்கள் என்ற கவனம் வேண்டும் என நினைக்கிறது தவெக அரசு. ஆனாலும், “சபாநாயகர் அடிக்கடி ஆளும் கட்சிக்கு முட்டுக்கட்டை போடுகிறார். எதிர்க்கட்சிகளையே அதிகம் பேச அனுமதிக்கிறார். முக்கிய அமைச்சர்களின் பேச்சையே நீக்குகிறார்” என முதல்வர் விஜய்யிடம் புகார்களும் பறந்துள்ளன.
வழக்கமாக எதிர்க்கட்சியினரை சமாளிக்கவே சபாநாயகர்கள் திணறுவார்கள். ஆனால், இம்முறை அமைச்சர்கள் உட்பட ஆளும்கட்சியினரின் பேச்சுகளை சமாளிக்கவே சிக்கித் திணறுகிறார் ஜேசிடி பிரபாகர். எப்படி பார்த்தாலும், நேரலை ஒளிபரப்பில் புன்னகையும், நிதானமும் மாறாமல் சபாநாயகர் கண்டிப்பை காட்டுவது அவை நடவடிக்கைகளை கூடுதல் சுவாரஸ்யமாக்குகிறது என்பதுதான் உண்மை.