சட்டசபையில் முதல்
முதல்-அமைச்சர் விஜய் அரசியல் உலகில் தடம் பதித்து 2 ஆண்டுகள்தான் ஆகியிருந்தாலும், அதற்கு முன்பே தான் நடித்த பல படங்களில் அரசியலுக்கு வரப்போவதை அரங்கத்தை அதிர வைத்த வசனங்கள் மூலம் உறுதிப்படுத்தினார். 2018-ம் ஆண்டு அவர் நடித்து வெளியான 'சர்க்கார்' படத்தில் முழுக்க முழுக்க பஞ்ச் டயலாக்குகளை பேசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார்.
அந்த படத்தில் அவர் வில்லனை பார்த்து, ஒரு தொகுதியில் மட்டும்தான் நிற்கலாம் என்று இருந்தேன். தற்போது 234 தொகுதிகளிலும் நிற்பேன் என்று சொல்வது போல ஒரு காட்சி வரும். அதைத்தான் அவர் வேட்பாளர் அறிவிப்பின்போது அதாவது, ஒவ்வொரு தொகுதியின் பெயரையும் சொல்லிவிட்டு, வேட்பாளர் பெயராக விஜய் என்று கூறி, 234 தொகுதிகளிலும் தான்தான் வேட்பாளர் என்று அறிவித்தார்.
அதுபோல, 'சர்க்கார்' படத்தில் இடம்பெற்ற 'ஒரு விரல் புரட்சி' வசனம்தான் தற்போது த.வெ.க.வின் அரசியல் எழுச்சியாக மாறியுள்ளது. அந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில், 'இதுதான் நம்ம சர்க்கார்' என்று வில்லன் கூட்டத்தை பார்த்து பேசியதில்தான் அரசியல் நெடி தெறித்தது. அவர் அன்றும், 'சர்க்கார்' பட விழாவின்போதும் பேசியதும்தான் இன்று அவர் முதல்-அமைச்சராக பேசும் பல பேச்சுகளுக்கு முன்னோடியாக இருந்தது.
முதல்-அமைச்சராக அவரிடம் இருந்து இப்போது வெளிப்படும் வார்த்தைகளும் அன்று வெள்ளித் திரையில் பேசியது போலவே இருக்கின்றன. கடந்த ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி தொடங்கிய தமிழக பட்ஜெட் கூட்டத்தொடருக்கான சட்டசபை கூட்டம் 28 நாட்களாக நடந்து நேற்று முன்தினம் நிறைவடைந்தது. த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இது. அதுபோல காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் விஜய் பேசினார்.
கடந்த 3-ந்தேதி அவர் சட்டசபையில் காவல் துறை மானியக்கோரிக்கையை தாக்கல் செய்யும்போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டாரே தவிர, பதில் உரையில் ஒரு அறிவிப்பும் இடம்பெறவில்லை என்பது ஒரு விமர்சனமாக இருக்கிறது. அவரது பதில் உரை முழுக்க முழுக்க அரசியல் சரவெடிகளாகவே இருந்தது. அவர் பேசும்போது வார்த்தைகளை மட்டும் உதிர்க்கவில்லை. அவரது உடல் மொழியும், கை அசைவுகளும், முக பாவனைகளும் அவரது பேச்சுக்கு ஈடு கொடுக்கும் வகையில் இருந்தது.
தொடக்கத்தில் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்து பட்டியலிட்டு பேசினார். அடுத்து பெண்களுக்கு எதிராக, அவதூறாக பேசும் பேச்சுகள் மீது சட்டம் தனது கடமையை செய்யும் என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார். தொடர்ந்து சட்டமன்றத்துக்கு வெளியே தி.மு.க.வை சேர்ந்த ஒரு தலைவர், தி.மு.க.வுக்கு ஓட்டு போடாதவர்களுக்கு நல்ல சாவு வராது என்று பேசியதையும், தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர் எலும்பை உடைப்பேன் என்று பேசியதையும் முதல்-அமைச்சர் விஜய் சுட்டிக்காட்டினார்.
இதைத்தொடர்ந்து தி.மு.க. உறுப்பினர்கள் கோபத்துடன் எழுந்து கோஷமிட்டனர். ஆனாலும் முதல்-அமைச்சர் விஜய் அதை சற்றும் பொருட்படுத்தாமல் மிக ஆக்ரோஷமாக தி.மு.க. பற்றி சர்க்காரியா கமிஷன் கூறியதையும், அமலாக்கத்துறை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் குறித்து தாக்கல் செய்த அறிக்கையில் உள்ள தகவல்களையும் மிகவும் வீராவேசமாக தி.மு.க.வினரின் அமளிக்கு இடையே முழுமையாக பேசி முடித்தார்.
தி.மு.க.வின் மூன்று தலைமுறைகளைப் பற்றியும் குற்றஞ்சாட்டி பேசியதால் தி.மு.க. உறுப்பினர்கள் ஆத்திரம் அடைந்து, வெளிநடப்பு செய்தனர். சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் பேசுவதில்லை, அவருக்கு பேசத் தெரியாது என்ற விமர்சனத்துக்கு கடந்த திங்கட்கிழமை சட்டசபையிலேயே 'பீஸ்ட்' மோடில் பதில் கொடுத்து விட்டார்.