சட்டசபையில் உதயநிதி, ஆதவ் காரசார விவாதம்!
''தேர்தல் நேரத்தில், த.வெ.க., குறித்து நாங்கள் பேசாததால் தான், அக்கட்சி ஆட்சிக்கு வந்தது,'' என, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசியதற்கு, ''த.வெ.க., குறித்து பேசியிருந்தால், தி.மு.க., வீட்டில் தான் இருந்திருக்கும்,'' என, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலளித்தார்.
அமைச்சர் ஆனந்த்: முதல்வருக்கு எதை, எப்போது பேச வேண்டும்; அதை யாரிடம் பேச வேண்டும் என்பது தெரியும். எங்கள் முதல்வர் பேசியதால் தான், கட்சி தொடங்கிய இரண்டரை ஆண்டுகளில், த.வெ.க., ஆட்சி உருவாகி உள்ளது.
தி.மு.க., ஆட்சியில் எவ்வளவு தொல்லைகள் கொடுத்தீர்கள் என்பது, எங்களுக்கு நன்றாக தெரியும். ஒரு பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்றால், கூட்டம் நடக்கும் அன்றைய தினம் காலையில் தான் அனுமதி கொடுப்பர். அதற்கும், ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
சில இடங்களில், காலையில் அனுமதி கொடுத்து விட்டு, மாலையில் திரும்ப பெற்றனர். உங்கள் நல்ல நேரம், நாங்கள் கேட்ட அனைத்து இடத்திற்கும் நீங்கள் அனுமதி கொடுத்திருந்தால், 234 தொகுதி களிலும் த.வெ.க., வெற்றி பெற்றிருக்கும்.
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி: தேர்தல் நேரத்தில், நாங்கள் யாரும் த.வெ.க., பற்றி பேசவில்லை. பேசாததால் தான், அவர்கள் வெற்றி பெற்று, ஆளும் கட்சியாக அமர்ந்து விட்டனர். எந்த பிரசார கூட்டத்திலும், த.வெ.க., குறித்து நாங்கள் பேசவில்லை; விமர்சனம் செய்யவில்லை.
தேர்தல் நேரத்தில், பிரசாரத்துக்கு விதிகளின்படியே அனுமதிகள் வழங்கப்பட்டன. தேர்தல் சமயத்தில், விஜய் பல இடங்களில் பிரசாரம் செய்தார். கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் சென்றார். ஆனால், த.வெ.க., அங்கு ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. த.வெ.க., அரசுக்கு பெரும்பான்மையே கிடையாது. எங்கள் தயவில் தான் ஆட்சி நடக்கிறது.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: எங்களையும் கொஞ்சம் பேச, சபாநாயகர் அனுமதிக்க வேண்டும். நாங்கள் பிரசாரம் செய்யக்கூடாது என்பதற்காகவே, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை, அப்போதைய அரசு வெளியிட்டது. 5,000 நபர்களுக்கு மேல் கூட்டத்திற்கு வந்தால், 30 நாட்களுக்கு முன் அனுமதி வாங்க வேண்டும் என்றனர். 5,000 பேருக்கு மேல் கூட்டம் த.வெ.க.,வுக்கு மட்டுமே வரும் .
தி.மு.க., ஆட்சியில் காவல் துறையை த.வெ.க.வுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்தினர். த.வெ.க., பற்றி பேசவில்லை என்கின்றனர். பேசாததால் தான், சட்டசபைக்கு வந்து உள்ளனர்; பேசியிருந்தால், வீட்டில் தான் இருந்திருப்பர். இவ்வாறு விவாதம் நடந்தது.