கொளத்தூரில் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க முடியாது
கொளத்தூரில் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க முடியாது - ஸ்டாலின் வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Published : September 3, 2026 at 10:44 PM IST
சென்னை: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு என்று கூறி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் நிவாரணம் பெற அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
கொளத்தூர் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்கக்கோரி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
தொடர்ந்து, சட்டமன்ற தேர்தல் முடிந்து 45 நாட்களுக்கு பிறகு மு.க.ஸ்டாலின் தொடர்ந்த ரிட் மனு விசாரணைக்கு உகந்ததா? என்பது குறித்து நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், “பதிவான மின்னனு வாக்குப்பதிவை மீண்டும் என்ன வேண்டும் என்ற அக்கோரிக்கையை மட்டும் மு.க.ஸ்டாலின் முன் வைக்கவில்லை. மாறாக, தன்னை வெற்றி வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என கோருகிறார்.
அவரது கோரிக்கையானது தேர்தல் முடிவையே பாதிப்பதோடு, தேர்தல் நடவடிக்கையை கேள்விக்குறியாக்கும் வகையில் உள்ளது. இந்த ரிட் மனு இந்திய அரசியலமைப்பு பிரிவு 329(b) கீழ் தேர்தல் நடவடிக்கைக்கு தடையாக அமையும். ஸ்டாலின் தேர்தல் வழக்கு தொடராமல் ரிட் மனுவில், தேர்தல் நிவாரணம் தேட முயன்றுள்ளார்.
இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் அளித்துள்ள விளக்கத்தில், வெற்றி பெற்ற வேட்பாளரை எதிர்த்து தோல்வி அடைந்தவர்கள் சட்டப் பிரிவு VI-ன் கீழ் நிவாரணம் பெறலாம். இந்த பிரிவின் கீழ் தோல்வியடைந்த எந்த வேட்பாளரும், நடைபெற்று முடிந்த தேர்தலே செல்லாது என்ற கோரிக்கையை நீதிமன்றத்தில் முன் வைக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், ரிட் மனுவில் தேர்தல் தொடர்பான விசாரணையை மேற்கொள்ள முடியாது. போதிய ஆதாரங்கள் இல்லாத இந்த மனு விசாரணைக்கு உகந்தது இல்லை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபிஏடி இயந்திரங்களின் தொழில்நுட்ப செயல்பாடு குறித்த நிபுணர் சாட்சியங்கள் உள்ளிட்ட கோரிக்கையை ரிட் மனுவில் நிவாரணமாக கேட்க முடியாது என தெரிவித்துள்ளது.
ஸ்டாலின் தொடர்ந்த இந்த ரிட் மனுவை அனுமதித்தால் அது புதிய சிக்கல்களுக்கு வழிவகுக்கும். தோல்வி அடைந்த வேட்பாளர்கள் தேர்தல் வழக்குக்கு பதிலாக, புதிய வகையில் நிவாரணம் பெறும் ஒரு மாற்று வழியை இந்த தீர்ப்பு ஏற்படுத்திவிடும். அது இந்திய அரசியலமைப்பு பிரிவு 329(b) பிரிவையே நீர்த்து போக செய்து விடும்.
பொதுமக்களின் நம்பிக்கையை பெறும் வகையில், தேர்தல் முடிவுகளுக்கு பின், வாக்குப்பதிவு இந்திரங்கள் சரிபார்க்க வேண்டும் என்ற கோரிக்கை தேர்தல் ஆணையத்தால் ஏற்கப்பட்டது. அதன்படி தோல்வியடைந்தவர்கள், இயந்திரங்களின் சரிபார்ப்பை கேட்க சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால், இயந்திரங்கள் சரிபார்ப்பு என்ற கோரிக்கையில் தேர்தல் நிவாரணத்தை ஸ்டாலின் பெற முடியாது. அதனால், இந்த ரிட் மனு மூலம் வேட்பாளர் வி.எஸ் பாபுவின் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர முடியாது. இயந்திரக்கோளாறால் தனது வெற்றி வாய்ப்பு எப்படி பறிக்கப்பட்டது என்பதை தேர்தல் ஆணையத்தில் தெரிவித்து ஸ்டாலின் நிவாரணம் பெறலாம். அதற்கு இந்த உத்தரவு தடையாக இருக்காது” என தெரிவித்துள்ளனர்.