சுற்றுலாக் காப்பீடு ஏன் அவசியம்?
சுற்றுலாக் காப்பீடு ஏன் அவசியம்? - நேபாள பயங்கரம் சொல்லும் நிதிப் பாடம்!
விடுமுறைப் பயணம், வெளிநாட்டுச் சுற்றுலா, புனித யாத்திரை என எதற்காகப் பயணம் மேற் கொண்டாலும், அதற்கான திட்டமிடலில் விமான டிக்கெட், தங்குமிடம், விசா போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். கூடவே, புதிய சூட்கேஸ், ஆடைகள், காலணிகள் வாங்குகிறோம். ஆனால், எதிர்பாராத சம்பவங்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் சுற்றுலாக் காப்பீட்டை (Travel Insurance) பலர் பெரிதாகக் கருதுவதில்லை.
நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு, சுற்றுலாக் காப்பீட்டின் அவசியத்தை மீண்டும் உணர்த்தியுள்ளது. இந்த இயற்கைப் பேரிடரில் சுமார் 900 பேர் உயிரிழந்ததுடன், 4,000க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரைக்குச் சென்ற இந்தியர்கள் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் இந்தப் பேரிடரில் சிக்கியுள்ளனர். பெரும்பாலானோர் தங்கள் உடைமைகளை இழந்துள்ளனர்.
இதுபோன்ற சம்பவங்கள் தவிர்க்க முடியாதவை. நாம் எவ்வளவு கவனமாகப் பயணத்தைத் திட்டமிட்டாலும் இயற்கைப் பேரிடர்களை முன்கூட்டியே நம்மால் கணிக்க முடியாது.
சுற்றுலாக் காப்பீடு!
பயணத்தின்போது எதிர்பாராத வகையில் ஏற்படும் மருத்துவச் செலவு, விபத்து, பயணத் தாமதம், பயண ரத்து, பயணப் பொருள்கள் தொலைந்து போகுதல் உள்ளிட்ட நிதி இழப்பு களிலிருந்து பாதுகாப்பு அளிப்பதே சுற்றுலாக் காப்பீடு.
எந்தெந்த ரிஸ்க்குகளுக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் என்பது காப்பீட்டுத் திட்டத்தைப் பொறுத்து மாறுபடும். எனவே, காப்பீட்டை வாங்குவதற்கு முன் அதன் விதிமுறைகள், விலக்குகள் மற்றும் இழப்பீட்டு வரம்புகளைப் புரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
மருத்துவச் செலவு!
வெளிநாட்டுப் பயணத்தில் ஏற்படக்கூடிய மிகப்பெரிய நிதிச் சுமைகளில் மருத்துவச் செலவும் ஒன்று. விபத்து அல்லது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் மருத்துவமனைச் செலவு, அவசர சிகிச்சை, ஆம்புலன்ஸ் போன்றவற்றுக்கு அதிக பணம் தேவைப்படலாம்.
குறிப்பாக மலைப்பகுதி அல்லது தொலைதூரப் பகுதிகளில் பயணம் மேற்கொள்ளும்போது நிலைமை மேலும் சிக்கலாகலாம். அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாத சூழ்நிலையில், அவசர மருத்துவப் போக்குவரத்து தேவைப்படலாம். சில சுற்றுலாக் காப்பீட்டுத் திட்டங்களில் இதற்கான பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
எனவே, வெளிநாடு செல்லும் ஒருவர் தனது வழக்க மான மருத்துவக் காப்பீடு வெளிநாட்டு மருத்துவச் செலவுகளை உள்ளடக்குகிறதா என்பதையும், அதற்கு மேலாக சுற்றுலாக் காப்பீடு தேவையா என்பதையும் பரிசீலிக்க வேண்டும்.
யாத்திரைக்கும் காப்பீடு தேவை!
“நான் சுற்றுலாவுக்குச் செல்லவில்லை; புனித யாத்திரைக்குத்தான் செல்கிறேன்” என்று கூறி காப்பீட்டைத் தவிர்க்கக்கூடாது. கைலாஷ் மானசரோவர் போன்ற உயரமான மலைப்பகுதிகளில் வானிலை திடீரென மாறக்கூடும். சாலைப் போக்குவரத்து பாதிக்கப்படலாம். நிலச்சரிவு, வெள்ளம், பனிப்பொழிவு போன்ற இயற்கைச் சம்பவங்களும் ஏற்படலாம்.
இதுபோன்ற இடங்களுக்குச் செல்லும்போது, குறிப்பாக வயதானவர்கள் மற்றும் குடும்பத்துடன் பயணம் செய்பவர்கள் போதுமான சுற்றுலாக் காப்பீட்டு பாதுகாப்புடன் செல்வது அவசியம்.
காப்பீடு வாங்கும்போது கவனிக்கவேண்டிய விஷயங்கள்!
சுற்றுலாக் காப்பீடு வாங்கும்போது அதன் பிரீமியத்தை மட்டும் பார்த்து முடிவு செய்யக்கூடாது. இன்னும் பல முக்கியமான விஷயங்களையும் கவனிக்க வேண்டும் (பார்க்க அட்டவணை 1).
காப்பீடு வாங்கிவிட்டால் எல்லாவற்றுக்கும் பணம் கிடைக்குமா?
காப்பீடு இருப்பதால் பயணத்தில் ஏற்படும் அனைத்து இழப்புகளுக்கும் இழப்பீடு கிடைக்கும் என்று கருதக்கூடாது. ஒவ்வொரு காப்பீட்டுத் திட்டத்துக்கும் குறிப்பிட்ட விதிமுறைகளும் விலக்குகளும் இருக்கும். உதாரணமாக, சில இயற்கைப் பேரிடர்கள், குறிப்பிட்ட சாகச நடவடிக்கைகள், முன்பிருந்த நோய்கள் அல்லது சில வகையான பயண ரத்துகள் காப்பீட்டில் இடம்பெறாமல் இருக்கலாம். எனவே, காப்பீட்டு ஆவணத்தில், ‘எதற்கெல்லாம் இழப்பீடு உள்ளது?’ என்பதுடன், ‘எதற்கெல்லாம் இழப்பீடு இல்லை?’ என்பதையும் கவனமாகப் பார்க்க வேண்டும்.
பயணக் காப்பீடு செலவா, பாதுகாப்பா?
ஒரு குடும்பம் வெளிநாட்டுப் பயணத்துக்காக ஆயிரக்கணக்கில் அல்லது லட்சக்கணக்கில் செலவு செய்கிறது. அந்தப் பயணச் செலவுடன் ஒப்பிடும்போது சுற்றுலாக் காப்பீட்டுக்கான கட்டணம் பொதுவாகச் சிறிய தொகையாக இருக்கலாம்.
ஆனால், எதிர்பாராத மருத்துவ அவசரநிலை அல்லது பயணத் தடங்கல் ஏற்பட்டால் ஏற்படும் நிதிச் சுமை மிகப் பெரியதாக இருக்கலாம். அதனால், சுற்றுலாக் காப்பீட்டை தேவையற்ற செலவாகப் பார்க்காமல், பயணத் திட்டத்தின் ஒரு பகுதியாகப் பார்க்க வேண்டும்.
நேபாள வெள்ளப்பெருக்கு போன்ற சம்பவங்கள் நமக்கு ஒரு முக்கியமான பாடத்தைச் சொல்கின்றன. பயணத்தை நாம் திட்டமிட முடியும்; ஆனால், இயற்கைப் பேரிடர் எப்போது ஏற்படும் என்பதைத் திட்டமிட முடியாது.
எனவே, வெளிநாட்டுப் பயணம், மலைப் பிரதேசப் பயணம், நீண்ட யாத்திரை அல்லது சாகசப் பயணம் மேற்கொள்ளும்போது, பயணத்தின் தன்மைக்கு ஏற்ற சுற்றுலா காப்பீட்டைத் தேர்வு செய்வது நிதி ரீதியாக புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.
வாழ்க்கையில் எதிர்பாராத ஆபத்தைத் தவிர்க்க முடியாமல் போகலாம்; ஆனால், அதனால் ஏற்படும் நிதிச் சுமையை முன்கூட்டியே திட்டமிட்டுக் குறைக்க முடியும். அதற்கான முக்கியமான பாதுகாப்பு களில் ஒன்றுதான் சுற்றுலாக் காப்பீடு.
உங்கள் பயணத் திட்டங்களில் இனி சுற்றுலாக் காப்பீடு முதல் இடத்தில் இருக்கட்டும்!