சவுதி உடனான மெக்கா ஒப்பந்தத்தின் கீழ் ஹவுதி இலக்குகள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்
இஸ்லாமாபாத்: மெக்கா ஒப்பந்தத்தின்படி ஏமனில் உள்ள ஹவுதி இலக்குகளை குறிவைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் நேற்று தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
சவுதி அரேபியாவுடன் புதிதாக செயல்பாட்டுக்கு வந்துள்ள மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ், ஏமனில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களின் இலக்குகள் மீது பாகிஸ்தான் விமானப் படை வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
மேலும், சவுதி அரேபியாவில் சுமார் 8,000 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மத்திய கிழக்கு பிராந்திய மோதலில் தற்போது பாகிஸ்தானும் நேரடியாக களமிறங்கியுள்ளது. நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, சவுதி அரேபியாவுக்கு வழங்கப்படும் ராணுவ ஆதரவை இஸ்லாமாபாத் தீவிரப்படுத்தியுள்ளது என பாகிஸ்தான் மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஹவுதி கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் பாகிஸ்தான் போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இருப்பினும், பாகிஸ்தான் தகவல் தொடர்பு அமைச்சகம் இந்த செய்தியை மறுத்துள்ளதுடன், ஹவுதிகளுக்கு எதிராகப் பாகிஸ்தான் போர் விமானங்கள் பயன்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. அதேநேரம், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ஏற்கெனவே சவுதி அரேபியாவில் தங்கியிருப்பதை சிஎன்என் செய்தி நிறுவனத்திடம் பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப் பிரிவு தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷரீஃப் சவுத்ரி உறுதிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், பாதுகாப்பு காரணங்களுக்காக வீரர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை அவர் வெளியிடவில்லை.
இந்தியர்களுக்கு எச்சரிக்கை
ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், “தற்போது நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, சவுதியில் வசிக்கும் இந்தியர்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்க வேண்டும். தேவைப்பட்டால் வீடுகளுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
உள்ளூர் அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் வழிகாட்டுதல்களைச் சரியாகப் பின்பற்ற வேண்டும். தற்போதைய சம்பவங்கள் தொடர்பான எந்தவொரு வீடியோக்கள் அல்லது செய்திகளையும் சமூக வலைதளங்களில் பகிரவோ, ரீபோஸ்ட் செய்யவோ வேண்டாம்” என கூறப்பட்டுள்ளது.