எலான் மஸ்க்
புதுடெல்லி: ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனர் எலான் மஸ்க் இந்திய அரசாங்கத்தின் மீதும் தொழிலதிபர் முகேஷ் அம்பானி மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் செயற்கைக்கோள் இணையச் சேவையைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வரும் நிலையில் அவர் தமது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.
இது குறித்து தமது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார்.
அதில், “உலகின் 165க்கும் மேற்பட்ட நாடுகளில் ஸ்டார்லிங்க் சேவைக்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் அனைத்து விதிமுறைகளுக்கும் சட்டங்களுக்கும் உட்பட்டு கடந்த ஐந்தாண்டுகளாக நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இன்னமும் எங்களுக்கு ஏன் அனுமதி உரிமம் வழங்கப்படவில்லை? இந்தியாவின் உண்மையான முதலாளி அம்பானிதானா,” என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இந்தியாவின் தொலைதூர, இணைய வசதியற்ற கிராமப்புறப் பகுதிகளுக்குக் குறைந்த செலவில் இணையச் சேவையை வழங்குவதே ஸ்டார்லிங்கின் நோக்கம் என்று அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஏகபோக ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ள முயலும் சில தொழிலதிபர்களின் தடையால் இந்திய மக்களுக்கே பெரும் இழப்பு ஏற்படுவதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, எலான் மஸ்க்கின் குற்றச்சாட்டுகளை மத்திய தொலைத்தொடர்பு அமைச்சு முற்றிலுமாக மறுத்துள்ளது.
இது தொடர்பாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் தொலைத்தொடர்பு விதிமுறைகள் அனைத்தும் வெளிப்படையானவை மற்றும் பாரபட்சமற்றவை.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
“ஸ்டார்லிங்க், ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல்லின் ஒன்வெப் ஆகிய மூன்று நிறுவனங்களுக்கும் அனுமதி உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
“ஆனால், சேவை தொடங்குவதற்கு முன்னதாக மேற்கொள்ளப்படும் உள்நாட்டுப் பாதுகாப்புத் தணிக்கை மற்றும் அலைவரிசை ஒதுக்கீட்டு நடைமுறைகள் தற்பொழுது மத்திய உள்துறை அமைச்சின்கீழ் பரிசீலனையில் உள்ளன.
“அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த விதிமுறை பொதுவானதே,” என்று தொலைத்தொடர்பு அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.