📅 Sunday, 09 August 2026 IST | ஆடி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 05, 2026 07:01 AM

CM விஜய்யை கூட சந்திக்கல.. ஆனால் அமைச்சருக்கு நடு வீட்டில் மரியாதை கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினி

CM விஜய்யை கூட சந்திக்கல.. ஆனால் அமைச்சருக்கு நடு வீட்டில் மரியாதை கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினி

சென்னை: தமிழ்நாட்டின் புதிய சமூக நிதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள வன்னி அரசு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன், நினைவுப் பரிசும் வழங்கியுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. அரசியலும், சினிமாவும் சந்தித்த இந்த தருணம் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

திராவிட இயக்க அரசியலில் நீண்ட காலமாக செயல்பட்டு வரும் வன்னி அரசு, சமூக நீதி, சமத்துவம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் தொடர்பாக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர். சமீபத்திய அமைச்சரவை மாற்றத்தில் சமூக நிதித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற அவர், பதவியேற்ற பிறகு முதல் முறையாக ரஜினிகாந்தை நேரில் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து தனது எக்ஸ் தளத்தில் வன்னி அரசு பகிர்ந்துள்ள பதிவில், "சமூக நீதித்துறை அமைச்சராக பதவி ஏற்றதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற விரும்பினேன். இப்போதுதான் அதற்கான வாய்ப்பு கிடைத்தது. 'நிறைய மக்களுக்கு செய்யுங்கள்... வாழ்த்துகள்' என்று கூறி என்னை வாழ்த்தி அனுப்பினார்" என்று தெரிவித்துள்ளார்.

பகிரப்பட்டுள்ள புகைப்படங்களில், வன்னி அரசுக்கு ரஜினிகாந்த் பொன்னாடை அணிவிப்பதும், பின்னர் இருவரும் ஒன்றாக நினைவுப் பரிசை கையில் ஏந்தி சிரித்தபடி போஸ் கொடுப்பதும் இடம்பெற்றுள்ளது. இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

ஜெயிலர் 2: இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற இன்னொரு காரணமும் உள்ளது. ரஜினிகாந்த் தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள 'ஜெயிலர் 2' படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம், வருகிற அக்டோபர் 15-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'ஜெயிலர்' முதல் பாகம் உலகளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த நிலையில், இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. ரஜினிகாந்த், நெல்சன், அனிருத் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால், படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

முதலமைச்சரைக் கூட: அந்த பரபரப்பான சூழலிலேயே, அமைச்சரான பிறகு ரஜினிகாந்தை வன்னி அரசு நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றிருப்பது அரசியல் வட்டாரத்திலும், திரையுலகிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, "நிறைய மக்களுக்கு செய்யுங்கள்" என்ற ரஜினிகாந்தின் வாழ்த்து வாசகத்தை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, புதிய அமைச்சருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் விஜய் முதலமைச்சரான பின்னர் பல திரைப்பிரபலங்களும் அவரைச் சந்தித்து வாழ்த்தினர். மேலும் கமல்ஹாசனோ, முதலமைச்சர் விஜய் வீட்டிற்கு நேரடியாகச் சென்று வாழ்த்தி வந்தார். இப்படி இருக்கையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதலமைச்சரைச் சந்திக்காமல், அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள விசிகவின் வன்னி அரசைச் சந்தித்ததும் பேசு பொருளாகி உள்ளது.