📅 Monday, 10 August 2026 IST | ஆடி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 09, 2026 12:34 PM

DC Day 2 Box Office

DC Day 2 Box Office

சென்னை: லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் திரைப்படம் டிசி. அருண் மாதேஸ்வரன் இயக்கியிருக்கிறார். இதில் லோகியுடன் வாமிகா கபி, சஞ்சனா உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. நேற்று முன்தினம் வெளியான படத்துக்கு ரெஸ்பான்ஸும் நல்லபடியாகவே கிடைத்திருக்கின்றன. இந்நிலையில் அதன் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இயக்குநராக ஹிட், தோல்வி என இரண்டையும் பார்த்தவர் லோகேஷ் கனகராஜ். அதிலும் அவர் ஹிட் கொடுத்த படங்கள் எல்லாம் அவரை இந்தியாவிலேயே டாப் இயக்குநர்களில் ஒருவராக மாற்றின என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட சூழலில்தான் ஹீரோவாக அறிமுகமாகும் முடிவுக்கு வந்தார். அவரை ஹீரோவாக வைத்து அவருடைய நண்பர் அருண் மாதேஸ்வரனே இயக்கவும் செய்தார். மேலும், எவ்வித தயக்கமுமின்றி சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவும் முன்வந்தது.

லோகேஷின் டிசி: படத்துக்கு டிசி என்று பெயர் வைக்கப்பட்டது. இதில் லோகேஷுடன் வாமிகா கபி, சஞ்சனா உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்திருக்கிறார். முதன்முறையாக லோகி ஹீரோவாக அறிமுகமாவதால் படத்தின் மீது ஓரளவுக்கு ஹைப் எகிறியது. அதுமட்டுமின்றி சமீபத்தில் தேசிய விருது வென்ற கேப்டன் மில்லர் படத்தை இயக்கியவரும் அருண் மாதேஸ்வரன். எனவே இந்தப் படத்தை அவர் எப்படி கொடுக்கப்போகிறார் என்ற ஆவலும் ரசிகர்களிடையே அதிகமாகவே இருந்தன.

பட்டையை கிளப்பும் படம்: எதிர்பார்த்தபடியே ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு ஆக்‌ஷன் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர். அதேசமயம் வெறும் ஆக்‌ஷன், காதல், எமோஷனை வைத்து மட்டும் ஒப்பேற்றாமல்; பெற்றோர்களால் கைவிடப்படும் குழந்தைகளின் மறுபக்கம், ஒரு மனித உயிருக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்பதையும் மேம்போக்காக காட்டாமல் ரொம்பவே டீப்பாக காட்சிப்படுத்தியிருந்தார். அது ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுவிட்டன என்பது கவனிக்கத்தக்கது. அதிலும் அனிருத்தின் இசையெல்லாம் கொண்டாடி தீர்த்துவிட்டார்கள் ரசிகர்கள்.

பவர்ஃபுல் ஃபெர்ஃபார்மென்ஸ்: முக்கியமாக, லோகேஷ் கனகராஜின் நடிப்பு மெர்சல் செய்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். முதல் பட ஹீரோ மாதிரியே அவரது நடிப்பு இல்லை. அத்தனை ஏரியாக்களிலும் ரகளையாகவே நடித்த அவர்; வாமிகா கபிக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு நடித்திருந்தார். போதாக்குறைக்கு அனிருத்தின் இசையும் பக்கா மாஸாக அமைந்து; லோகேஷ் நடிப்பில் தடுமாறிய இடங்களில் எல்லாம் காப்பாற்றிவிட்டன. தான் ஹீரோவாக நடிக்கும் படத்தை தான் பார்க்கும் அனுபவம் புதிதாக இருக்கிறது என்று லோகி தெரிவித்திருந்தார். போகும் போக்கை பார்த்தால் இன்னும் சில வருடங்களுக்கு அவரை ஹீரோவாக அடிக்கடி பார்க்க முடியும் என்றே தோன்றுகிறது.

வசூல் நிலவரம்: படத்துக்கு விமர்சன ரீதியாக சூப்பர் ரெஸ்பான்ஸ் கிடைத்துவிட்டது. இருப்பினும் வணிக ரீதியாக என்ன மாதிரியான ரிசல்ட்டை பெறப்போகுதோ என அச்சப்பட்டுக்கொண்டிருந்த படக்குழுவுக்கு மகிழ்ச்சி கிடைத்திருக்கிறது. Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கும் தரவுகள்படி, இரண்டாவது நாளான நேற்று அப்படம் மொத்தம் ஆறு கோடியே 70 லட்சம் ரூபாயை அள்ளியிருக்கிறதாம். இதுவரை இரண்டு நாட்களில் மொத்தம் 11 கோடியே 10 லட்சம் ரூபாயை அள்ளியிருக்கிறதாம்.

முதல் நாளில் அப்படம் செய்த வசூல் நான்கு கோடியே 40 லட்சம் ரூபாய் ஆகும். படத்துக்கு முதல் நாளிலேயே பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்ததாலும்; நேற்று விடுமுறை என்பதாலும் படத்தின் வசூல் அதிகரித்திருக்கிறது. இன்றும் கூட்டம் கூடி மேற்கொண்டு வசூலை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.