📅 Tuesday, 11 August 2026 IST | ஆடி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 11, 2026 05:04 PM

Delimitation Bill: தி.மு.க - பா.ஜ.க ரகசியப் பேச்சுவார்த்தை

Delimitation Bill: தி.மு.க - பா.ஜ.க ரகசியப் பேச்சுவார்த்தை

Delimitation Bill: தி.மு.க - பா.ஜ.க ரகசியப் பேச்சுவார்த்தை - டீலா, நோ டீலா? | தொகுதி மறுவரையறை

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு தி.மு.க-வின் ஆதரவு மத்திய அரசுக்குத் தேவைப்படுவதால், தி.மு.க-வை சமாதானப்படுத்தி எப்படியாவது அதன் ஆதரவைப் பெற வேண்டும் என்பதற்காகவே, FCRA மசோதாவைத் தற்காலிகமாக ஒத்திவைக்கும் முடிவை பா.ஜ.க எடுத்திருப்பது தெரிகிறது.

அப்படிச் செய்தால், குடும்பக் கட்டுப்பாட்டைத் தீவிரமாக அமல்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்குக் கடுமையான பாதிப்புகள் ஏற்படும்... இப்போது நாடாளுமன்ற மக்களவையில் 543 உறுப்பினர்கள் இருக்கும் நிலையில், தமிழகத்தின் 39 மக்களவைத் தொகுதிகள் 31 ஆகக் குறையக்கூடிய நிலை உருவாகும் என்ற அச்சம் எழுந்தது.

தமிழ்நாட்டைப் போலவே, மற்ற தென் இந்திய மாநிலங்களும் பாதிக்கப்படும் என்ற நிலை இருந்தது. ஆகவே, தென் மாநிலங்கள் அனைத்தும் தொகுதி மறுவரையறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. முதல்வர்கள் கூட்டம் கூட நடைபெற்றது. அந்த மசோதா கொண்டுவரப்பட்ட நாளில், முதலமைச்சர் ஸ்டாலின் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினார். தமிழ்நாட்டுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதே அவர்களின் நிலைப்பாடாக இருந்தது.

அதாவது, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 50 சதவிகிதம் அதிகரிப்பது, எதிர்காலத்திலும் தென் மாநிலங்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படக்கூடாது, அதை உறுதி செய்ய வேண்டும் என்பது தி.மு.க., அதன் கூட்டணிக் கட்சிகளின் வாதமாக இருந்தது.

தென் மாநிலங்களில் குடும்பக் கட்டுப்பாடு திட்டம் தீவிரமாக அமல்படுத்தப்பட்டதால் மக்கள்தொகை வளர்ச்சி வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், அதற்கு நேர்மாறான நிலையில் வட மாநிலங்கள் இருக்கின்றன. அங்கு, மக்கள்தொகை கணிசமாக அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில், வட இந்தியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க முனைப்பாக இருக்கிறது.

அதற்காகவே, தொகுதி மறுவரையறையை பா.ஜ.க முன்னெடுக்கிறது என்பது தென் மாநிலங்களின் பார்வையாக இருக்கிறது. இந்த காலகட்டத்தில், சிவசேனா, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகளில் பிளவை ஏற்படுத்தி, சில எம்.பி-க்களைத் தங்கள் பக்கம் இழுக்கும் வேலையில் பா.ஜ.க இறங்கியது.

ஆனாலும், தேவையான எண்ணிக்கையை எட்டுவதில் இன்னும் சிக்கல் இருக்கிறது. இந்த நிலையில், தி.மு.க-வின் ஆதரவு இல்லையென்றால், தொகுதி மறுவரையறை மசோதா மீண்டும் தோல்வியடைய வாய்ப்பு இருக்கிறது. எனவே, தி.மு.க எம்.பி-க்களின் ஆதரவு பா.ஜ.க-வுக்கு மிக முக்கியமானதாக இருக்கிறது.

இந்தச் சூழலில்தான் தி.மு.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்ற முடிவுக்கு பா.ஜ.க வந்தது. குறிப்பாக, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், இந்தியா கூட்டணியிலிருந்து தி.மு.க விலகித் தனித்த அரசியல் நிலைப்பாட்டில் இருப்பதால், தி.மு.க-வை அணுகுவது பா.ஜ.க-வுக்கு எளிதாகியிருக்கிறது.

அதனால், “தமிழ்நாட்டுக்குப் பாதகம் இல்லாத வகையில் தொகுதி மறுவரையறையை மேற்கொள்கிறோம். எனவே, மசோதாவை நீங்கள் ஆதரிக்க வேண்டும்” என்ற அடிப்படையில் ரகசிய பேச்சுவார்த்தை நடைபெறுவதாகத் தகவல்கள் வருகின்றன. தி.மு.க-வும், “தமிழ்நாட்டுக்கு நன்மை கிடைக்கும் என்றால் மசோதாவை ஆதரிப்போம்” என்ற நிலைக்கு வந்திருக்கிறது.

இந்தச் சூழலில் தான், “அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை; நிரந்தர எதிரிகளும் இல்லை” என்ற கருத்தை தி.மு.க-வின் கனிமொழி சோமு எம்.பி வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது கருத்து, பா.ஜ.க-வை நோக்கி தி.மு.க நகர்கிறது என்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 50 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டால், தமிழ்நாட்டின் தொகுதிகள் 39-ல் இருந்து சுமார் 59 ஆக அதிகரிக்கலாம். அதே நேரத்தில், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களின் தொகுதிகளும் அதிகரிக்கும். தற்போது தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகளும், உத்தரப் பிரதேசத்தில் 80 தொகுதிகளும் உள்ளன.

தமிழ்நாட்டின் தொகுதிகள் 60 ஆக அதிகரித்தால், உ.பி-யின் தொகுதிகள் 120 ஆக அதிகரிக்கும். ஆகவே, அந்த விகிதம் பெரிய அளவில் மாறாது. எனவே, தி.மு.க-வின் வாதம், “தொகுதி மறுவரையறையே வேண்டாம்” என்பது அல்ல. மாறாக, தமிழ்நாட்டுக்கும் தென்னிந்திய மாநிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் ஒரு நியாயமான மறுசீரமைப்பு இருக்க வேண்டும் என்பதுதான்.

அதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 50 சதவிகிதம் அதிகரிக்கலாம். மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 850-க்கு மேல் அதிகரித்தால், தமிழ்நாட்டுக்கு சுமார் 7.18 சதவிகித பங்கீட்டின் அடிப்படையில் 60-க்கும் மேற்பட்ட உறுப்பினர் இடங்கள் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது.

இதை, ஒரு வகையில் “ஃபேர் டிலிமிடேஷன்” என்று சொல்லலாம். அதாவது, “நோ டிலிமிடேஷன்” என்று சொல்வதற்குப் பதிலாக, தமிழ்நாட்டுக்கும் தென்னிந்திய மாநிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தொகுதி மறுவரையறையை மேற்கொள்ள வேண்டும் என்பதே இந்தக் கருத்தின் அடிப்படை.

இந்தச் சூழலில், தமிழ்நாட்டில் அரசியல் காட்சிகளும் மாறியிருக்கின்றன. தி.மு.க-வின் கூட்டணிக் கட்சிகள் உள்ளிட்ட பலரும் ஆரம்பத்திலிருந்தே தொகுதி மறுசீரமைப்பை எதிர்ப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.

இப்போது மேகதாது விவகாரத்திலும் இதே காட்சியைப் பார்க்க முடிகிறது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்பது தி.மு.க-வின் கோரிக்கை. ஆனால், தனியாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற முயற்சியை த.வெ.க முன்னெடுத்தது. அது வெற்றி பெறவில்லை.

இந்தச் சூழலில், அரசியல் விவாதத்தை வேறு திசைக்குத் திருப்பும் வகையில், மேகதாது விவகாரத்துக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துவதற்குப் பதிலாக, தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக அனைத்துக் கட்சி எம்.பி-க்களையும் அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்த த.வெ.க முடிவு செய்தது. இதற்காக அனைத்து எம்.பி-க்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டது.

“நீங்கள் கூட்டத்துக்கு வாருங்கள்” என்று தி.மு.க-வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது, தி.மு.க ஒரு முக்கியமான நிபந்தனையை முன்வைத்தது. மேகதாது விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படவில்லை என்றால், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டத்துக்கு நாங்கள் வரமாட்டோம் என்பதுபோன்ற நிலைப்பாடு அது.

அதன் மூலம், அந்தக் கூட்டத்தைத் தவிர்ப்பதற்கான ஓர் அரசியல் காரணத்தை தி.மு.க உருவாக்கிக்கொண்டது. அதாவது, தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தி.மு.க தனது பழைய எதிர்ப்பு நிலைப்பாட்டிலிருந்து முழுமையாக விலகவில்லை. ஆனால், அரசியல் சூழல் மாறியிருக்கும் நிலையில், “தமிழ்நாட்டுக்கு நன்மை கிடைக்கும் என்றால் ஆதரிப்போம்” என்ற புதிய அணுகுமுறையையும் வெளிப்படுத்தத் தொடங்கியிருக்கிறது. இதுதான் இப்போது தமிழக அரசியலில் கவனிக்க வேண்டிய முக்கியமான மாற்றமாக இருக்கிறது.

“ஃபேர் டிலிமிடேஷன்” என்ற நிலைப்பாட்டுக்கு தி.மு.க வந்திருக்கிறது. ஆனால், தி.மு.க-வுடன் கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகள் இப்போது “நோ டிலிமிடேஷன்” என்ற நிலைப்பாட்டுக்குச் சென்றிருக்கின்றன.

அதாவது, இப்போது இருக்கும் 543 மக்களவைத் தொகுதிகளையே தொடர வேண்டும்; எதிர்காலத்திலும் இந்த எண்ணிக்கையை மாற்றக் கூடாது; அதற்குள்ளேயே பெண்களுக்கான இடஒதுக்கீடு உள்ளிட்டவற்றைச் செயல்படுத்த வேண்டும் என்பதுதான் அந்தக் கட்சிகளின் வாதமாக இருக்கிறது.

இந்தச் சூழலில், தி.மு.க அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்ளாததால், அதன் கூட்டணிக் கட்சிகள் ஒரு புதிய அரசியல் வாதத்தை முன்வைக்கின்றன. “ஃபேர் டிலிமிடேஷன்” என்று ஒன்று கிடையாது; அது ஒரு ஏமாற்று வேலை. மொத்தத்தில் தொகுதி மறுவரையறையே தேவையில்லை என்பதுதான் அந்தக் கட்சிகளின் வாதமாக இருக்கிறது.

இதற்கு நேர்மாறாக தி.மு.க தரப்பில் ஒரு வாதம் முன்வைக்கப்படலாம். “தொகுதி மறுவரையறை வேண்டாம்” என்று சொல்வதற்குப் பதிலாக, தற்போது இருக்கும் 39 தொகுதிகளை, 59 அல்லது 60 தொகுதிகளாக அதிகரித்தால், அது தமிழ்நாட்டுக்குப் பயன்தானே? என்ற கேள்வியை எழுப்பலாம்.

இந்தச் சூழலில்தான், பா.ஜ.க-வும் தி.மு.க-வும் பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருக்கின்றன என்ற தகவல் வருகிறது. அந்தப் பேச்சுவார்த்தை எந்த அளவுக்கு உண்மையானது, எந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறது என்பது எதிர்காலத்தில்தான் தெரியவரும். ஆனால், பேசப்படும் தகவல்களின்படி, தி.மு.க தரப்பில் சில முக்கியமான நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

முதலாவது, தமிழ்நாட்டுக்கு 60 அல்லது 59 தொகுதிகள் வழங்கப்பட்டால், அந்த எண்ணிக்கைக்கு அரசியல் சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் மீண்டும் மக்கள்தொகையைக் கணக்கில் கொண்டு தொகுதி மறுசீரமைப்பு செய்யும்போது, தமிழ்நாட்டின் எண்ணிக்கை குறைக்கப்படக் கூடாது.

தி.மு.க-வின் முக்கியக் கோரிக்கை, தமிழ்நாட்டின் தற்போதைய 39 மக்களவைத் தொகுதிகள் 50 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டு 59 அல்லது 60 ஆக உயர்த்தப்பட்டால், அந்த எண்ணிக்கைக்கு அரசியல் சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதுதான். ஒவ்வொரு மாநிலத்துக்கும் எத்தனை தொகுதிகள் என்பது மசோதாவிலேயே தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும். பின்னர் அமைக்கப்படும் தொகுதி மறுவரையறைக் குழுவால் அந்த எண்ணிக்கையை மாற்ற முடியாத வகையில் சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சொல்கிறார்கள். தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும் கூடுதல் தொகுதிகளை எவ்வாறு பிரிக்க வேண்டும் என்பதிலும் தி.மு.க பரிந்துரைகளை வழங்கலாம்.

ஆனால், தி.மு.க-வுடன் கூட்டணியிலிருந்த வி.சி.க., சி.பி.எம் உள்ளிட்ட கட்சிகள் இப்போது “நோ டிலிமிடேஷன்” என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றன. தற்போதுள்ள 543 மக்களவைத் தொகுதிகளையே தொடர வேண்டும்; அதற்குள்ளேயே பெண்களுக்கான இடஒதுக்கீட்டைச் செயல்படுத்த வேண்டும் என்பதே அவற்றின் வாதம். இதனால் தமிழ்நாட்டில் இரண்டு நிலைப்பாடுகள் உருவாகியுள்ளன.

காங்கிரஸும் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் எச்சரிக்கையான நிலைப்பாட்டில் உள்ளது. பெண்கள் இட ஒதுக்கீட்டைத் தொகுதி மறுவரையறையுடன் இணைக்காமல் தனியாகச் செயல்படுத்த வேண்டும் என்பதே காங்கிரஸின் வாதம். ‘ஃபேர் டிலிமிடேஷன்’ குறித்தும் காங்கிரஸ் முழுமையான ஆதரவை வெளிப்படுத்தவில்லை.

மறுபுறம், “தமிழ்நாட்டின் தொகுதிகளை 59 அல்லது 60 ஆக உயர்த்தி, எதிர்காலத்தில் அவற்றைக் குறைக்க முடியாத அரசியல் சட்டப் பாதுகாப்பையும் பெற்றுத் தருகிறோம்” என்று தி.மு.க விளக்கமளிக்க முடியும்.

பா.ஜ.க-வைப் பொறுத்தவரை நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் தெளிவாக இருக்கிறது. வடஇந்தியாவின் அதிகரித்த மக்கள்தொகைக்கு ஏற்ப அங்குக் கூடுதல் தொகுதிகள் உருவாக வேண்டும் என்பதே அதன் கணக்கு. எனவே, தி.மு.க-வின் 50 சதவிகித அதிகரிப்பு கோரிக்கை ஏற்கப்பட்டால், அது தமிழ்நாட்டுக்கும், பா.ஜ.க-வுக்கும் வெவ்வேறு வகையில் சாதகமாக அமையலாம்.

இப்போதைய கேள்விகள், “தொகுதி மறுவரையறை வேண்டுமா, வேண்டாமா?” என்பது மட்டுமல்ல. “தமிழ்நாட்டுக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும்? அந்த எண்ணிக்கைக்கு என்ன அரசியல் சட்டப் பாதுகாப்பு? எதிர்காலத்தில் அதை மாற்ற முடியுமா?” என்பதுதான்.

தற்போது, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், வெளிநாட்டு நிதி பெறுவதைக் கட்டுப்படுத்தும் மசோதாவுக்கு (FCRA) தி.மு.க கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஆகவே, அந்த மசோதாவை மத்திய அரசு தற்காலிகமாக ஒத்திவைக்க முடிவெடுத்திருப்பதாகச் செய்திகள் வருகின்றன.