📅 Monday, 10 August 2026 IST | ஆடி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 10, 2026 07:01 PM

“என்னுடைய ஸ்டைல் இதுதான்... கேலி பண்றீங்களா?”

“என்னுடைய ஸ்டைல் இதுதான்... கேலி பண்றீங்களா?”

“என்னுடைய ஸ்டைல் இதுதான்... கேலி பண்றீங்களா?” - நிதியமைச்சர் மரியவில்சன் ஆவேசம்

தமிழக பட்ஜெட் உரையை பிழைகளுடன் உச்சரித்ததாக மதிமுக எம்எல்ஏ கார்த்திகேயன் விமர்சித்ததற்கு, நிதியமைச்சர் மரியவில்சன் கோபத்தில் கத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக பட்ஜெட் தொடர் மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், இன்று மதிமுக எம்எல்ஏ ராஜேந்திரன் பேசுகையில், “நிதியமைச்சர் பட்ஜெட்டை வாசிக்கும் போது, நான் தமிழ் ஆர்வலர், சொற்பொழிவாளர் என்ற முறையில் அவரது வாசிப்பை உன்னிப்பாக கவனிக்கும் போது அவரின் ஆங்கில உச்சரிப்பு சரியாக இருந்தாலும், தமிழில் சில சொற்றொடர்களை பேசாமல், சில சொற்றொடர்களை தவறாகவும் வாசித்தார். நான் அதனை குறையாகவோ அல்லது குற்றச்சாட்டாகவோ இந்த அவையில் வைக்கவில்லை. நிதியமைச்சர் வரும் காலத்தில் பட்ஜெட் வாசிக்க நேர்ந்தால், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அதற்காக முயற்சிகளை செய்ய வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

அப்போது அவைத்தலைவர் குறுக்கிட்டு ஜே.சி.டி. பிரபாகர், “நீங்கள் பேசும்போது 9 முறை ‘பட்ஜெட்’ என்ற வார்த்தையை பயன்படுத்திவிட்டீர்கள். அதை ‘நிதிநிலை அறிக்கை’ எனக் கூறியிருக்கலாம்” என்றார். உடனே ராஜேந்திரன், “மன்னிக்கவும். நேரம் கருதி விரைவாக எனது உரையை முடிக்க வேண்டும் என்பதற்காக ஊடால, ஊடால என அதை நான் சேர்த்துக்கிட்டேன். தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி” என்றார்.

அதனைத் தொடர்ந்து ராஜ்மோகன் பேசுகையில், “தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் என்ற முறையில் நான் ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும். திடீரென பேரவைத் தலைவர் குறுக்கீடு செய்தவுடன், ‘ஊடால, ஊடால’ என மதிமுக எம்எல்ஏ அவரை அறியாமல் சொல்லிவிட்டார். அதுபோல் ஒவ்வொருவரும் இயல்பான தமிழில் பேசலாம். ஒவ்வொரு வட்டாரத்திற்கும் தமிழ் இருக்கிறது. நெல்லை தமிழ் கொஞ்சும், மதுரை தமிழ் வாள் வீசும், குமரி தமிழில் அலையாடும், சென்னை தமிழில் உழைக்கும் மக்களின் வியர்வை வாசம் வீசும்.

“என் தமிழை வாஞ்சையோடு பாராட்டி, நிதியமைச்சர் என்னிடம் தமிழ் வகுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும் என சொன்னார். அப்படி பார்த்தால் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சங்கத் தமிழிலா பேசுகிறார்? அவரே இயல்பான தமிழில்தான் பேசுகிறார். அப்படி வகுப்புகள் நடத்த வேண்டும் என்றால், நேர்மையான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ததற்காக நிதியமைச்சர் வகுப்பெடுக்க வேண்டும். அதில் அனைத்து கட்சி உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

அப்போது நிதியமைச்சர் மரியவில்சன் பேசுகையில், “நான் ஒரு கூடைப்பந்து விளையாடுபவன். நான் ஆஃபன்ஸும் ஆடுவேன், டிஃபென்ஸும் ஆடுவேன். எப்போது டிஃபென்ஸ் ஆட வேண்டும், எப்போது ஆஃபன்ஸ் ஆட வேண்டும் என்பது எனக்கு தெரியும். நீங்கள் கத்தினால் நானும் கத்துவேன். நான் 25 முதல் 30 ஆண்டுகளாக கல்வித் துறையில் இருந்திருக்கிறேன்.

“எனது பேச்சுகள் எல்லாமே ஆங்கிலத்தில்தான் இருந்தது. இப்போது இந்த மாமன்றத்தில் கொஞ்ச நாட்களாகவே உருவ கேலி செய்வது, சாதி தொடர்பாக, பெண்கள் தொடர்பாக என, இப்போது மொழி தொடர்பாகவும் கேலி செய்ய வந்துவிட்டார்கள். எனக்கு எனது கிறிஸ்துவம் ஒன்றைக் கற்றுக் கொடுத்திருக்கிறது.

“அன்பு மொழி, அமைதி மொழி, இரக்கத்தின் மொழி. இது தமிழ் படித்தவர்களுக்குக் கூட தெரியாது. நான் பைபிளில் படித்துள்ளேன். 60 முதல் 75 நாட்களாக துறைரீதியாக கூட்டங்கள் வைத்தோம். அதில் நிறைய மாற்றங்களை செய்திருக்கிறோம். ரூ.15 ஆயிரம் கோடி கருவூலத்திற்கு வந்திருக்கிறது.

“அதைப் பற்றி பேசாமல், நான் இப்படித்தான் பேச வேண்டும் என எனக்கு அறிவுரை கூற வேண்டாம். எனது தனித்துவம் இது. எனக்கு இப்படித்தான் பேசத் தெரியும். ஏற்றுக்கொண்டால் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்காக என்னை மாற்றிக்கொள்ள முடியாது. நான் அப்படித்தான் பேசுவேன். என்னுடைய ஸ்டைல் இதுதான். கேலி பண்றீங்களா?” என நிதியமைச்சர் மரியவில்சன் கோபத்துடன் கேட்டார்.