எத்தியோப்பியாவில் மூன்று இந்தியர்கள் கடத்தல்; ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்
புதுடெல்லி: சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவுக்குச் செல்ல முயன்ற குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று இந்தியர்கள் எத்தியோப்பியாவில் கடத்தப்பட்டுள்ளனர். அவர்களைப் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ள கடத்தல்காரர்கள், அவர்களை விடுவிக்க ரூ.1 கோடி பிணைத்தொகை கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
குஜராத்தைச் சேர்ந்த ரித்விக் ஜன்சாரி, மம்தா சாவ்டா மற்றும் மயூரி ஆகிய மூவரும் உறவினர்கள். மம்தாவின் கணவர் சிராக் குமார் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மாணவர் விசாவில் அமெரிக்கா சென்றுவிட்டார். இருப்பினும், மம்தாவுக்கு அமெரிக்க விசா கிடைக்காததால், குறுக்கு வழியில் அவரை அமெரிக்காவிற்கு அனுப்புவதற்குக் குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
அதற்காக மெஹ்சானாவைச் சேர்ந்த அல்பேஷ் பஞ்சால் மற்றும் வதோதராவைச் சேர்ந்த இடைத்தரகர்களைக் குடும்பத்தினர் அணுகியுள்ளனர். ஒருவருக்கு ரூ.75 லட்சம் வீதம் கட்டணம் பேசப்பட்டு, அதில் ரூ.70 லட்சம் வரை முன்பணமாகக் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 20ம் தேதி குஜராத்தில் இருந்து புறப்பட்ட மூவரும் ராஜஸ்தான், ஜெய்ப்பூர் வழியாக அபுதாபி சென்று, அங்கிருந்து எத்தியோப்பியாவின் ‘அடிஸ் அபாபா’ நகரை அடைந்தனர். அங்குள்ள முகாம் ஒன்றில் தங்கியிருந்த அவர்களிடம் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 19 வரை செல்லுபடியாகும் ‘இ-விசா’ இருந்தது.
கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி, தான் கனடா சேர்ந்து விட்டதாக மம்தா தனது தந்தையிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார். ஆனால், அதன் பிறகு மூவருடனான தொடர்பும் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில், ‘கான்’ என்பவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு, மூவரையும் பிணைக் கைதிகளாகச் சிறைபிடித்து வைத்துள்ளதாகவும், அவர்களை உயிருடன் விடுவிப்பதற்கு ரூ.1 கோடி தர வேண்டும் என்றும் மிரட்டியுள்ளார்.
ஏற்கெனவே முகவர்களிடம் ரூ.60 லட்சம் வரை கைமாறிய நிலையில், இப்போது மேலும் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல் வருவது குறித்துப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தீவிர கவலையில் ஆழ்ந்துள்ளனர்.