EXPLAINER | தமிழக பக்தர்கள் ஏன் நேபாளம் செல்கிறார்கள்? இதுதான் காரணமா?
தமிழக பக்தர்கள் ஏன் நேபாளம் செல்கிறார்கள்? இதுதான் காரணமா?
தமிழ்நாட்டை சேர்ந்த நடிகர் ரஜினிகாந்த் போன்ற பிரபல ஆளுமைகள் மற்றும் பல்வேறு ஆன்மீக அமைப்புகள் இமயமலை மற்றும் நேபாளப் பயணம் மேற்கொள்வது தமிழர்களிடம் ஆன்மீகத் தேடலாக மாற்றியதாகவும் கூறப்படுகிறது.
Published : August 28, 2026 at 6:58 PM IST
- BY இரா. சிவக்குமார்
இந்தியா முழுவதும் பல்லாயிரக்கணக்கான திருத்தலங்கள் இருந்தாலும், தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்கள் பல்லாயிரக்கணக்கான மைல்கள் கடந்து, கடுமையான புவியியல் சவால்களையும் தாண்டி நேபாள தேசத்திற்கு புனிதப் பயணம் மேற்கொள்கின்றனர்.
தமிழ்நாட்டிற்கும் இமயமலைக்கும் இடையிலான பந்தம் இன்று நேற்று தொடங்கியதல்ல. அது சங்க காலம் தொட்டே இலக்கியங்களிலும், ஆன்மீக வரலாற்றிலும் ஆழமாக வேரூன்றிய ஒன்றாகும். தமிழகத்தைச் சேர்ந்த இந்துக்களை நேபாள மண் காந்தமாய் ஈர்ப்பதற்கு ஏராளமான ஆழமான ஆன்மீக, கலாச்சார மற்றும் வரலாற்றுரீதியான காரணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய மதுரை திருவேடகத்தை சேர்ந்த அமுதன் ஐயர், "தமிழ்நாட்டு இந்துக்களில், குறிப்பாக வைணவ மரபை பின்பற்றுபவர்களின் ஆகச் சிறந்த ஆன்மீக லட்சியம் 108 திவ்ய தேசங்களையும் வாழ்நாளில் தரிசிப்பதாகும். இந்த 108-ல் 105 திருத்தலங்கள் இந்தியாவிலும், 2 தலங்கள் (பரமபதம், திருப்பாற்கடல்) பூலோகத்தை கடந்தும் உள்ளதாக நம்பப்படுகிறது. இந்தியாவின் எல்லைக்கு வெளியே அமைந்துள்ள ஒரே ஒரு திவ்ய தேசம் நேபாளத்தின் முஸ்தாங் பள்ளத்தாக்கில் உள்ள முக்திநாத் மட்டுமே.
பெரியாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் ஆகியோரால் தமிழ் பாசுரங்கள் பாடி மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம் இது. இந்த கோயிலில் உள்ள 108 புனித நீர்த்தாரைகளில் நீராடி, பெருமாளை தரிசித்தால் பிறவிப் பிணி நீங்கி முக்தி கிடைக்கும் என்பது வைணவத்தை பின்பற்றும் இந்துக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை" என்றார். இவர் கடந்த ஆண்டு குடும்பத்துடன் நேபாளத்திற்கு ஆன்மீக சுற்றுலா சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், சிவபெருமானை வழிபாடும் இந்துக்களுக்கும் நேபாளம் ஒரு மிக முக்கிய ஆன்மீகத் தலமாகும். அப்பர், சம்பந்தர், சுந்தரர் போன்ற நாயன்மார்கள் ஏழாம் நூற்றாண்டிலேயே இமயமலையில் உள்ள திருக்கைலாயத்தையும், திருக்கேதாரத்தையும் பாடியுள்ளனர்.
நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாத் ஆலயம் உலகப் புகழ் பெற்ற 12 ஜோதிர்லிங்கத் தலங்களுக்கு இணையான பெருமை கொண்டது என்று நம்பப்படுகிறது. காசிக்குச் சென்று கங்கையில் நீராடும் யாத்திரையானது, நேபாள பசுபதிநாத் தரிசனத்துடன் தான் முழுமையடைகிறது என்ற நம்பிக்கை நிலவி வருகிறது.
நேபாளத்தின் தனித்துவமான 'குமாரி' வழிபாடு
ஆன்மீகத்திற்கு பெயர் நேபாளத்தில் தனித்துவமான வழிபாடு முறைகளும் ஏராளமாக உள்ளன. அதில் முக்கியமானது குமாரி வழிபாடு ஆகும். அதாவது, குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தேர்வு செய்யப்பட்டு, குறிப்பிட்ட காலம் வரை தெய்வத்தின் பிரதிநிதியாகக் கருதப்பட்டு அந்த மக்களால் வழிபடப்படுகிறார். அந்த சிறுமி பூப்பெய்திய பின்னர் புதிய குமாரி தேர்வு செய்யப்படுவார்.
மேலும், "வடதிசை எல்லை இமய மாக..." என்று புறநானூறு முதற்கொண்டு சிலப்பதிகாரம், மணிமேகலை வரை தமிழ் இலக்கியங்கள் இமயமலையை போற்றிப் பாடியுள்ளன. தமிழர்களின் ஆழ்மனதில் இமயம் என்பது தெய்வங்கள் வாழும் இடமாக நம்பப்படுகிறது.
தமிழ்நாட்டை சேர்ந்த நடிகர் ரஜினிகாந்த் போன்ற புகழ் பெற்ற ஆளுமைகள் மற்றும் பல்வேறு ஆன்மீக அமைப்புகள் இமயமலை மற்றும் நேபாளப் பயணம் மேற்கொள்வது தமிழர்களிடம் ஆன்மீகத் தேடலாக மாறியதாகவும் கூறப்படுகிறது.
நேபாளத்தில் உள்ள புகழ் பெற்ற ஆன்மீக தலங்கள்
இந்து மற்றும் பௌத்த மதங்களின் முக்கிய சங்கமமாக விளங்கும் நேபாளத்தில் ஏராளமான ஆன்மீக தலங்கள் உள்ளன.
தொடர்ந்து பேசிய அமுதன் ஐயர், "இந்துக்களின் ஆகப்பெரும் புனிதப் பயணமாகக் கருதப்படும் திபெத்தின் ‘திருக்கைலாய யாத்திரை’ மற்றும் மானசரோவர் ஏரிக்குச் செல்வதற்கான மிக எளிய, பாதுகாப்பான மற்றும் முதன்மையான போக்குவரத்து நுழைவாயிலாக நேபாளத்தின் காத்மாண்டு நகரம் விளங்குகிறது. கைலாசம் செல்லத் துடிக்கும் ஒவ்வொரு பக்தர்களின் பயணம் நேபாளத்திலிருந்தே தொடங்குகிறது.
நேபாளம் முழுக்க முழுக்க மலை சார்ந்த ஒரு நாடாகும். முக்திநாத் செல்வதற்கு ஏறக்குறைய மூன்று ஹெலிகாப்டர்கள் மாற வேண்டியது இருக்கும். ஜூலை மாதத்தில் நேபாளம் செல்வது சற்று பாதுகாப்பானது. காரணம் அப்போது மழையும், பனியும் குறைவாகவே இருக்கும். இருந்தாலும், அப்பகுதி பாதுகாப்பானது என நினைத்துப் பார்க்க முடியாது. ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டு கொண்டே இருக்கும். இந்திய பகுதிக்குள் இருக்கின்ற மலைகள் சற்று கெட்டியாக இருக்கும். ஆனால் நேபாளம் பகுதியில் அவ்வாறு இருக்காது என்று கூறுகிறார்கள்.
சிறுசிறு கிளைடர்கள் பயணத்திற்கு உதவியாக உள்ளன. ஆனால் காற்று பலமாக வீசினால் பயணம் செய்ய முடியாது. குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டும் அதனை இயக்குகிறார்கள். முக்திநாத் பகுதியில் ஆக்சிஜன் அளவு மிகமிகக் குறைவாக இருக்கும்” என்கிறார்.
கைலாயம் எங்கே உள்ளது?
இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கானோர் புனித யாத்திரை மேற்கொள்ள விரும்பும் கைலாய மலை மற்றும் மானசரோவர் ஏரி நேபாளத்தில் இல்லை. அவை திபெத் தன்னாட்சிப் பகுதியில், சீனக் கட்டுப்பாட்டில் உள்ள இமயமலைப் பகுதியில் அமைந்துள்ளன. கைலாய மலை கடல் மட்டத்திலிருந்து சுமார் 6,638 மீட்டர் உயரத்தில் உள்ளது.
இந்து சமய நம்பிக்கையில் இது சிவபெருமானின் இருப்பிடமாகக் கருதப்படுகிறது. ஆனால் கைலாயத்தின் ஆன்மீக முக்கியத்துவம் இந்து மதத்துடன் மட்டும் நின்றுவிடவில்லை. பௌத்தம், சமண சமயத்தை பின்பற்றுவோருக்கும் புனிதமானதாக கருதப்படுகிறது.
கைலாயத்தை சுற்றியுள்ள இமயமலைப் பகுதி ஆசியாவின் முக்கிய நதிகளுடன் தொடர்புடையது. சிந்து, சட்லஜ், பிரம்மபுத்திரா மற்றும் கர்ணாலி போன்ற முக்கிய ஆறுகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் இந்த பிராந்தியத்துடன் தொடர்புடையவை. இதுவே கைலாயப் பகுதியின் புவியியல் முக்கியத்துவத்தையும் அதிகரிக்கிறது. அருகில் அமைந்துள்ள மானசரோவர் ஏரியும் இந்து சமயத்தில் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. 'மானஸ்' என்பது மனம் அல்லது அறிவு என்றும், 'சரோவர்' என்பது ஏரி என்றும் பொருள்படும் என்பதால் 'மானசரோவர்' என்ற பெயர் உருவானதாகக் கூறப்படுகிறது.
நேபாளம் வழியாக கைலாயம் - மானசரோவர் செல்லும் பாதை
கைலாயம் - மானசரோவர் செல்லும் முக்கியமான பாதை மேற்கு நேபாளத்தின் ஹும்லா – ஹில்சா வழித்தடம். இந்த பயணத்தில் இந்திய யாத்ரீகர்கள் முதலில் காத்மாண்டு செல்கின்றனர். அங்கிருந்து நேபாள்கஞ்ச் சென்று, பின்னர் விமானம் மூலம் சிமிகோட் பயணம் மேற்கொள்கின்றனர். பின்னர் அங்கிருந்து சிறிய விமானம் மூலம் ஹில்சா செல்கின்றனர். அங்கிருந்து தரைவழியாக திபெத்தின் டக்லாகோட் பகுதிக்கு சென்று, பின்னர் கைலாயம்–மானசரோவர் நோக்கிய யாத்திரை தொடர்கிறது. இந்த பாதை முழுவதும் உயரமான மலைப் பகுதிகள் வழியாக செல்வதால், சாதாரண சுற்றுலாவுடன் ஒப்பிடும் போது உடல்தகுதி மிகவும் முக்கியமானதாகிறது.
இந்தியா வழியாக செல்லும் இரண்டு பாதைகள்
இந்திய வெளியுறவு அமைச்சகம் ஆண்டுதோறும் கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு ஏற்பாடு செய்கிறது. இதற்காக 2 முக்கிய வழித்தடங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
யாரெல்லாம் கைலாய யாத்திரை செல்ல முடியும்?
இந்திய அரசு ஏற்பாடு செய்யும் கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு பல்வேறு தகுதிகள் உள்ளன. இந்திய குடிமகனாக இருப்பது அடிப்படைத் தகுதிகளில் ஒன்றாகும். செல்லுபடியாகும் இந்திய பாஸ்போர்ட் அவசியம். வயது, மருத்துவத் தகுதி, பயணத்திற்கு ஏற்ற உடல்நிலை உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் உள்ளன.
மேலும், உயரமான மலைப்பகுதியில் பயணம் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் மருத்துவப் பரிசோதனைகளில் தேர்ச்சிப் பெற வேண்டும். அனைத்து யாத்ரீகர்களும் குழுவாகவே பயணம் செய்ய வேண்டிய கட்டுப்பாடுகளும் உள்ளன.
கைலாயம் - மானசரோவர் அமைந்துள்ள பகுதி மிக உயரமான இமயமலைப் பிராந்தியம். குறைந்த ஆக்சிஜன் அளவு, கடுமையான குளிர், நீண்ட மலைப்பாதைகள், திடீர் வானிலை மாற்றங்கள் ஆகியவை யாத்ரீகர்களுக்கு சவாலாக அமையலாம். குறிப்பாக வயதானவர்களுக்கு உயரமான பகுதிகளில் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
இதனால் யாத்திரை ஏற்பாட்டாளர்கள் மருத்துவ வசதி, அவசரகால மாற்றுப் போக்குவரத்து மற்றும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்கூட்டியே திட்டமிட வேண்டிய நிலை உள்ளது.
இது தொடர்பாக சென்னை குரோம்பேட்டையில் செயல்பட்டு வரும் மகாதேவ் கைலாஷ் யாத்திரா நிறுவனத்தின் உரிமையாளர் மாரவேலன் நாகப்பனிடம் பேசினோம். அப்போது அவர், "தமிழகத்தில் இருந்து நேபாளத்திற்கு ஆன்மிக மற்றும் சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்வதற்கு பொதுவாக மே மாதம் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டமே ஏற்றதாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நேபாளத்தில் வழக்கமாக லேசான மழை மட்டுமே பெய்யும்.
இந்த முழு பயணத்திற்கும் ஒருவருக்கு சுமார் ரூ.2.20 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படும். பயணிகள் தமிழகத்தில் இருந்து புறப்பட்டு நேபாளம் மற்றும் கைலாஷ் பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள ஆன்மிக மற்றும் சுற்றுலா தலங்களை பார்வையிட்ட பின்னர், மீண்டும் தமிழகம் திரும்பும் வகையில் மொத்தம் 14 நாட்கள் கொண்ட பயணமாக இது திட்டமிடப்படும்" என்கிறார்.